Published : 10 Jan 2025 08:49 PM
Last Updated : 10 Jan 2025 08:49 PM
மதுரை: ஏழைகளுக்கு கொஞ்சம் பார்த்து வரி போடுங்கள் என மதுரை வருமானவரித் துறை அலுவலகத்தில் நடந்த பொங்கல் விழாவில் நடிகர் வடிவேலு நகைசுவையாக கூறினார்.
மதுரை பீபீ குளம் பகுதியிலுள்ள வருமான வரித்துறை ரெக்ரேஷன் கிளப் சார்பில், வருமானவரித் துறை அலுவலகத்தில் பொங்கல் விழா நடந்தது. முதன்மை விருந்தினராக வருமானவரித்துறை தலைமை ஆணையர் சஞ்சய்ராவ், முதன்மை ஆணையர் வசந்தன் உள்ளிட்டோர் பங்கேற்றனர். சிறப்பு விருந்தினராக நகைசுவை நடிகர் வடிவேலு பங்கேற்று பேசும்போது, ‘எனக்கு நாராயணன் என்று எனது மாமா பெயர் வைத்தார். என்னுடைய உடல்நிலை சரியின்றி போனதால் எனது அம்மா வடிவேலு என பெயர் வைத்தார். தற்போது இவ்வளவு பெரிய இடத்திற்கு வந்தது மகிழ்ச்சி. ஆனால் மாமன்னன் படத்தை போல கஷ்டத்தை அனுபவித்தவன் நான், அதனாலே நகைச்சுவை நடிகனாக மாறினேன்,’ என்றார்.
பின்னர் செய்தியாளர்களிடம் அவர் கூறியது: “நான்கு நாளுக்கு முன்பே எனக்கு பொங்கல் வந்தது போல உள்ளது. ஜல்லிக்கட்டு போட்டியை முடிந்தால் பார்க்கச் செல்வேன். மாடு பிடிக்கும் ஆள் கிடையாது. தற்போது ஜல்லிக்கட்டு சிறப்பாக போயிட்டு இருக்கிறது. பொங்கலுக்கு பிறகு அடுத்த படத்திற்கு தயாராகுவேன். சுந்தர்.சி-யின் கேங்கர்ஸ் படத்திலும், பகத் பாசிலோடு சேர்ந்து மாரிசன் படமும் ஒன்றிலும் நடிக்க தயாராக இருக்கிறது. பிரபுதேவாவும், நானும் சேர்ந்து ஒரு படம் நடிக்கிறோம்.
மேடையில் பேசும்போது, ஒரு கோரிக்கை வைத்தேன். இருக்கிறவர்களிடம் வரியை போட்டு தள்ளுங்கள். ஏழை, எளியவர்களுக்கு கொஞ்சம் பார்த்து வரி போடுங்கள் என சொன்னேன், அது ஜாலியான ஒரு மேட்டர்தான். இப்போதெல்லாம் தேர்வுசெய்து படங்களை நடிக்கிறேன். கேங்கர்ஸ் படம் குழந்தைகளுடன் சேர்ந்து ரசிக்கும் படமாக இருக்கும்” என்று அவர் கூறினார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT