Published : 13 Dec 2024 06:54 PM
Last Updated : 13 Dec 2024 06:54 PM
நலன் குமாரசாமி இயக்கத்தில் விஜய் சேதுபதி நடிப்பில் 2013-ஆம் ஆண்டு வெளியான ‘சூது கவ்வும்’ திரைக்கதை, இசை, நடிப்பு என எல்லா தளங்களிலும் ஜெயித்த ஒரு படம். அந்த படத்தில் நடித்த அனைவருமே இன்று தமிழ் சினிமாவின் முக்கிய நடிகர்கள். அப்படத்தின் தொடர்ச்சியாக மிர்ச்சி சிவா நடிப்பில் எஸ்.ஜே.இயக்கத்தில் வெளியாகியுள்ளது ‘சூது கவ்வும் 2’.
ஆளுங்கட்சி நிறுவனரான கண்ணபிரான் (வாகை சந்திரசேகர்) பல ஆண்டுகளுக்குப் பிறகு கோமாவில் இருந்து கண்விழிக்கிறார். எழுந்து பார்த்தவர், ஊழல்வாதியான நபர் (ராதா ரவி) முதலமைச்சர் பதவியில் இருப்பதைக் கண்டு கோபம் அடைகிறார். தனது நேர்மையான சிஷ்யரும் முன்னாள் அமைச்சருமான ஞானோதயம் (எம்.எஸ்.பாஸ்கர்) உதவியுடன் இன்னொரு கட்சி தொடங்கி ராதாரவிக்கு எதிராக தேர்தல் பிரச்சாரம் செய்கிறார். ஞானோதயத்தின் மகனும் நிதியமைச்சருமான அருமைப் பிரகாசம் (கருணாகரன்) ஆன்லைன் கேம் வழியாக மக்களுக்கு பணம் கொடுப்பதற்கான வழிமுறையை கண்டுபிடித்துள்ளார். அந்த நேரத்தில் அவரிடம் இருந்த பணம் தொடர்பான முக்கியமான டேப்லட் ஒன்று காணாமல் போகிறது. கட்சியில் பணம் இல்லாததால் எம்எல்ஏக்கள் பலரும் அணி தாவுகின்றனர். இதனால் ஆட்சி கவிழ்கிறது.
இன்னொரு பக்கம் தன்னுடைய கற்பனை காதலியில் சாவுக்கு காரணமான அருமைப் பிரகாசத்தை பழிவாங்கத் துடிக்கும் குருநாத் (மிர்ச்சி சிவா). குருநாத் கேங்கை பிடிக்க காத்திருக்கும் போலீஸ் அதிகாரி பிரம்மா (யோக் ஜேப்பி). அருமைப் பிரகாசத்துக்கு தன்னுடைய டேப்லட் கிடைத்ததா? மற்றவர்களுக்கு அவர்களது நோக்கம் நிறைவேறியதா என்பதுதான் ‘சூது கவ்வும் 2’ படத்தின் திரைக்கதை.
2010-ஆம் ஆண்டுக்குப் பிறகு தமிழில் வந்த புதிய அலை சினிமாக்களில் மிக முக்கியமான படம் ‘சூது கவ்வும்’. டார்க் ஹ்யூமர், அட்டகாசமான திரைக்கதை, ஷார்ப் ஆன வசனங்கள் என அப்படம் ஒரு கல்ட் கிளாசிக். ‘பீட்சா’ படம்தான் விஜய் சேதுபதியை அடையாளம் காட்டியது என்றாலும், அவருக்கு பெரும் திருப்புமுனையாக அமைந்தது ‘சூது கவ்வும்’. அவர் மட்டுமின்றி பாபி சிம்ஹா, அசோக் செல்வன், ரமேஷ் திலக், கருணாகரன், இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன் என அப்படத்தில் பணிபுரிந்த அனைவருக்கும் பல கதவுகளை திறந்து விட்டது.
இப்படிப்பட்ட ஒரு படத்துக்கு இரண்டாம் பாகம் எடுக்க வேண்டுமென்றால், அதற்கு முதலில் தேவை இரண்டு கதைகளுக்கு நியாயம் செய்யக்கூடிய கதை. பிறகு அதை பார்ப்பவர்களுக்கு சுவாரஸ்யம் குன்றாமல் இருக்கக் கூடிய திரைக்கதை. இந்த இரண்டும் சரியாக அமைந்து விட்டாலே படத்தில் இருக்கும் மற்ற குறைகள் எதுவும் கண்டுகொள்ளப் படாது. ஆனால், ஒரு படத்தின் அடிப்படையான இந்த இரண்டு அம்சங்களும் இப்படத்தில் மருந்துக்கும் இல்லை.
இப்போதெல்லாம் ஒரு படம் எப்படி இருக்கப் போகிறது என்பதை கண்டுபிடிக்க முதல் 15 நிமிடங்கள் போதும். அதை வைத்தே இந்த படத்தையும் கணித்து விடமுடிகிறது. கதைக்கு சம்பந்தமே இல்லாத ஹீரோ இன்ட்ரோவுடன் தொடங்கும் படம், அதன் பிறகு நீண்ட நேரம் எங்குமே நகராமல் அங்கேயே நின்று கொண்டிருக்கிறது. ஆரம்பத்தில் வரும் வாகை சந்திரசேகர் தொடர்பான காட்சிகள், அதன் பிறகு கட்சி மீட்டிங்கில் நடக்கும் உரையாடல், சிவா கேங் அறிமுகம் என அனைத்தும் மிக மிக சுமாரான காட்சியமைப்பு. எந்த இடத்திலும் நம்மை உள்ளிழுத்து நிமிர்ந்து உட்கார வைக்கக் கூடிய அம்சங்கள் இல்லை. இது படம் முழுக்கவே தொடர்வது சோகம்.
கிட்டத்தட்ட இந்தப் படத்தில் வரும் எல்லா காட்சிகளுமே முந்தைய பாகத்தின் வேறொரு வடிவமாகத்தான் இருக்கிறது. ஹீரோவும் அவரது சகாக்களும் கடத்தல் சம்பவங்களில் ஈடுபடுவதை காட்ட முந்தைய பாகத்தில் வரும் ‘மாமா டவுசர்’ பாடலைப் போலவே இதிலும் ஒரு பாடல், முதல் கடத்தலில் பேங்க் மேனேஜர் ஒருவரிடம் நேரில் சென்று பணத்தை வாங்கி வருவது உள்ளிட்ட காட்சிகளை அப்படியே உருவி அபத்தமாக நகல் எடுத்திருக்கிறார் இயக்குநர். ஆனால் முதல் பாகத்தில் இருந்த சுவாரஸ்யம் அப்படி உருவிய எந்த காட்சியிலும் இல்லை.
டார்க் ஹ்யூமர் என்ற என்று நினைத்து வைக்கப்பட்ட வசனங்களும் தொண்டையை கவ்வுகின்றன. எந்த இடத்திலும் அவை சிரிக்கவும் உதவவில்லை. கதைக்கும் அவற்றால் எந்த பலனும் இல்லை. படத்தில் உருப்படியான விஷயம் என்றால் அது கருணாகரன் கதாபாத்திரம் மட்டுமே. அவர் வரும் காட்சிகள் மட்டுமே ஓரளவு ரசிக்கும்படி உள்ளன. மற்றபடி விஜய் சேதுபதிக்கும் சிவாவுக்குமான தொடர்பு, நாயகனின் கற்பனை காதலி என முதல் பாகத்துக்கும் இதற்கும் இடையே வலுக்கட்டாயமாக போடப்பட்ட முடிச்சுகள் துருத்திக் கொண்டு தெரிகின்றன.
ஹீரோவாக மிர்ச்சி சிவா. வழக்கமாக தனக்கு எது வருமோ அதை மட்டுமே செய்ய முயற்சித்திருக்கிறார். எனினும் அவருடைய வழக்கமான டைமிங் கவுன்ட்டர்கள் கூட இந்த படத்தில் எடுபடவில்லை. முதல் பாகத்துக்கும் இந்த பாகத்துக்கும் முக்கிய தொடர்பாக இருக்கும் கருணாகரன் மட்டும் தனக்கு கொடுக்கப்பட்ட வேலையை சரியாக செய்து இருக்கிறார். எம்.எஸ்.பாஸ்கர், வாகை சந்திரசேகர், ராதா ரவிக்கு எல்லாம் பெரிதாக வேலை ஒன்றும் இல்லை.
படம் முழுக்க பார்வையாளர்களுக்கு அரசியல் பாடம் எடுக்கும் திணிக்கப்பட்ட வசனங்கள் எந்த தாக்கத்தையும் ஏற்படுத்தவில்லை. காமெடி என்ற பெயரில் ஒரு ட்ராக்கில் சென்று கொண்டிருக்கும்போது திடீர் திடீரென சீரியஸ் பாதைக்கு தாவுவது ரசிக்கும்படி இல்லை. அதிலும் இலவசங்கள் பற்றி மிக மேம்போக்காக வைக்கப்பட்ட வசனங்கள் எரிச்சலூட்டுகின்றன. முதல் பாகத்தின் ஹைலைட்டான கூர்மையான வசனங்கள் இதில் முற்றிலுமாக மிஸ்ஸிங்.
இரண்டாம் பாதியில் ஹீரோவின் ஆட்களை ஒரு வெள்ளை நிற அறையில் அடைத்து சித்ரவதை செய்யும் காட்சி அப்படியே முதல் பாகத்தில் வரும் அந்த இருட்டு ரூம் காட்சியின் படுமொக்கையான தழுவல். முதல் பாகத்தில் வரும் அந்த காட்சி, நடுவே ஒரு சிறிய காதல் பாடல் என அந்த காட்சியமைப்பே உலகத் தரத்தில் அமைக்கப்பட்டிருக்கும். ‘சூது கவ்வும்’ என்ற உடனே காதில் ஒலிப்பது சந்தோஷ் நாராயணின் தீம் இசைதான். இதில் அப்படி நினைவில் வைத்துக் கொள்ளும்படி எதுவும் இல்லை.
’சூது கவ்வும்’ என்கிற பார்த்து பார்த்து இழைக்கப்பட்ட ஓர் அழகான ஃபர்னிச்சர் இரண்டாம் பாகம் என்ற மிக அபத்தமாக நகல் எடுக்கப்பட்டிருக்கிறது. காட்சியமைப்பு, திரைக்கதை நேர்த்தி, நகைச்சுவை என எந்த வகையில் அந்த பக்கத்தில் கூட நெருங்கவில்லை இந்த இரண்டாம் பாகம்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT