Published : 20 Nov 2024 10:40 AM
Last Updated : 20 Nov 2024 10:40 AM
தமிழ்த் திரையுலகம் அதிகம் கொண்டாட மறந்த மகத்தான இசை அமைப்பாளர் ‘தேனிசைத் தென்றல்’ தேவா. இந்த ஆதங்கத்தை அண்மையில் வந்த ‘லப்பர் பந்து’ படத்தில் வரும் ஒற்றைக் காட்சி மிகச் சுலபமாக விளக்கியிருக்கும். அந்தக் காட்சியில் ‘ராசிதான் கைராசிதான்’ பாடல் வரும். அதைக் கேட்ட ஒருவர் அந்தப் பாடலை வேறொரு இசையமைப்பாளரின் பெயரைச் சொல்லி ரசிக்க, இன்னொருவர் “அது அவர் அல்ல, தேவா” என்பார்.
இப்படித்தான் தேவாவின் பல பாடல்களை வேறு இசையமைப்பாளரின் இசையில் வந்ததாக நினைத்துக் கொள்ளும் மனநிலை பலரிடம் வியாபித்திருக்கிறது. இணையத்தில் குறிப்பாக யூடியூபில் தங்களுக்குப் பிடித்தமான பாடல் தொகுப்புகளை வெளியிட்டுள்ள பலர் தேவா இசையமைத்த பாடல்கள் சிலவற்றை வேறு இசையமைப்பாளர்களின் இசைத் தொகுப்புகளில் தவறுதலாக சேர்த்துள்ளனர்.
அதேபோல், மனதுக்கு இதமான இத்தனை மெல்லிசைப் பாடல்களை உருவாக்கியவர் தேவாதான் என்ற தகவல் மக்களிடம் சென்றுசேராமல் போனதற்கு மற்றொரு முக்கியக் காரணம் உற்சாக மிகுதியை அள்ளிக் கொடுக்கும் அவரது துள்ளலிசைப் பாடல்கள்தான். எப்போது கேட்டாலும் துள்ளி குதித்தாட செய்யும் அவ்வகைப் பாடல்கள், கொண்டாடித் தீர்க்க வேண்டிய அவரது மைண்ட் புளோயிங் மெலடிகளை மறக்கடித்து விட்டன. இதனால், அவரது மெலடி பாடல்களை ரசிகர்கள் வேறு யாருடையதாகவோ எண்ணுவதற்கான வாய்ப்பாக அமைந்துவிட்டன.
‘லப்பர் பந்து’ படத்தில் சொல்வது போல பலரும் இது அந்த இசையமைப்பாளரின் பாடல்தான் என்று ஆனித்தரமாக நம்புவதற்கு, தேனிசைத் தென்றல் தேவாவின் இசையில் வெளிவந்து கீழே வரிசைப்படுத்தப்படும் 10 பாடல்களும் ஒரு சாம்பிள்தான்.
நீங்களும் இந்தப் பாடல்களை முதல் தடவை கேட்டால் உங்களுக்கும் அப்படித்தான் தோன்றும். அந்தளவுக்கு மனதுக்கு நெருக்கமாக இந்தப் பாடல்களை எல்லாம் தனது இசையால் இழைத்திருப்பார் தேவா. பாடகர்கள் தேர்வு, மியூசிக்கல் அரேஞ்மென்ட்ஸ், ஹம்மிங், கோரஸ், ஸ்ட்ரிங்ஸ், புளோயிங், ரிதம் என ஒன்றுவிடாமல் ஆளுகை செய்திருப்பார் தேவா.
இப்படிப்பட்ட தேவாமிர்தமான பாடல்களை உருவாக்கிய அவரிடம் குத்தாட்டப் பாடல்களையே திரும்பத் திரும்பக் கேட்டு வாங்கிய இயக்குநர்களும், தயாரிப்பாளர்களும், ரசிகர்களும் அவரது மெலடி பாடல்களுக்கு இன்னும் அதீத முக்கியத்துவத்தைக் கொடுக்க தவறிவிட்டனர்.
அதன் விளைவு தேனிசைத் தென்றலின் மனதை கொள்ளைக் கொள்ளும் இத்தகைய மெல்லிசைப் பாடல்கள் அதன் உச்சத்தை தொட காலதாமதம் ஆகிவிட்டது. ஆனால், கிராமங்களும், மினி பேருந்துகளும் தேவாவின் இந்தப் பாடல்களைத் தாங்கிப் பிடித்துக் கொண்டன.
ஆத்து மேட்டு தோப்புக்குள்ள: ராமராஜன் ஹீரோவாக நடித்த ‘மனசுகேத்த மகராசா’ தேவாவின் இரண்டாவது படம். இந்தப் பாட்டை சுசீலாவுடன் இணைந்து எஸ்பிபி பாடியிருப்பார். மண் மனம் மாறாத அந்தப் பாடல் கேட்கும்போதெல்லாம் செல்போன் இல்லாத வாழ்க்கை இன்னும் சில ஆண்டுகள் நீண்டிருக்கக் கூடாதா என்ற எண்ணத்தைக் கொடுக்கத் தவறாது.
முத்து நகையே முழு நிலவே: மினி பேருந்து பயணங்களில் தவறாது கேட்கும் ‘சாமுண்டி’ படத்தில் வரும் இப்பாடலை எஸ்பிபியும் ஜானகியும் இணைந்து பாடியிருப்பார்கள். இரவு நேரத்தை இனிதாக்கும் பாடல்களின் பட்டியலில், இந்த முத்துநகை தவறாது இடம்பிடித்திருக்கும்.
கண்ணதாசனே கண்ணதாசனே: ‘மரிக்கொழுந்து’ திரைப்படத்தில் வரும் இந்தப் பாடலை தேவா உருவாக்கியிருக்கும் விதமே அழகானது. இப்படம் வெளியான சமயத்தில் மட்டுமல்ல, இப்போதும்கூட பலரும் இது வேறு இசையமைப்பாளரின் பாடல் என்றுதான் நினைக்கிறார்கள். எஸ்பிபி - சித்ரா பாடும் இந்தப் பாடலின் சின்ன சின்ன இடைவெளிகளில் எல்லாம் தேவா தனது தேனிசையை நிரப்பியிருப்பார். பாடலின் ஓப்பனிங்கில், வயலின் மற்றும் புல்லாங்குழலில் தேவா நிகழ்த்தும் அற்புதங்களை அனுபவிப்பது ஆயுளைக் கூட்டிவிடும். பாடலை தேவா டீல் செய்த விதமும் நேர்த்தியாக இருக்கும்.
எனக்கென பெறந்தவ றெக்க: ‘கிழக்கு கரை’ படத்தில் வரும் இந்தப் பாடலும் மினி பேருந்து பயணத்தின் ஆல்டைம் பேஃவரைட். வயலின்களின் இசைச் சாரலில் நனைந்து சிரிக்கும் எஸ்பிபியின் குரலில் வரும் ஐ லவ் யூ... எனும் போது ஓடிக்கொண்டிருக்கும் மினி பேருந்துக்குள் காதல் தீ பற்றிக் கொள்ளும். சித்ரா இணைந்து பாடும் இந்தப் பாடல்தான், மினி பேருந்து காதலர்களின் காதல் கீதம்.
ப்ரியா ப்ரியா ஓ ப்ரியா: ‘கட்டபொம்மன்’ படத்தில் இந்தப் பாடல் வரும். பாடலின் தொடக்கத்தில் எஸ்பிபியும் புல்லாங்குழலும் சேர்ந்து மனதை கிளற, கோரஸ் பாடகர்களின் துணை கொண்டு உள்ளத்தில் இசை வெள்ளத்தைப் பாய்ச்சியிருப்பார் தேவா. எஸ்பிபி-யும் சித்ராவும் இணைந்து கொஞ்சிக் குலவும் இந்தப் பாடல்கள் தேவாவின் முத்திரையைப் பதித்த பாடல்களில் ஒன்று.
ஓ ஓ மதுபாலா: இயக்குநர் அகத்தியன் உடன் காதல் கோட்டை மெகா ஹிட் திரைப்படத்துக்கு முன்பாகவே இணைந்து சம்பவம் செய்தவர் தேவா என்பதற்கு மதுமதி எனும் இந்தப் படத்தின் பாடல்கள்தான் சாட்சி. படத்தில் மொத்தம் 10 பாடல்கள், தேவாவுக்கு உரிய துள்ளலிசைப் பாடல்கள், கானா வகை பாடல்கள் இருந்தாலும், இந்த மெலோடிப் பாடல் பலரும் மறந்துபோனதாகவே இருக்கிறது. எஸ்பிபியின் குரலில் வரும் இந்தப் பாடலை எத்தனை முறை கேட்டாலும் சலிக்காது.
கூவுற குயிலு சேவலப் பார்த்து: ‘சோலையம்மா’ படத்தில் வரும் இந்தப் பாடலை யார் கேட்டாலும், ‘லப்பர் பந்து’ படத்தில் சொல்வது போலத்தான் ‘ராஜா... ராஜாதான்’ என்று நிஜமாகவே சொல்லியிருப்பார்கள். ஜானகியும் எஸ்பிபியும் சேர்ந்து பாடும் பாடலில், புல்லாங்குழலின் வழியாக தனி ஆவர்த்தனம் செய்திருப்பார் தேவா. இந்தப் பாடல் போதும், அவரை தேனிசைத் தென்றல் என்ற பெயர் எத்தனைப் பொருத்தமானது என்பது பலருக்கும் புரிந்துபோகும். அந்தளவுக்கு, பாடல் முழுவதும் எஸ்பிபியும் ஜானகியும் நம்மை கொள்ளைக் கொண்டிருப்பர். பாடல் முழுவதும், புல்லாங்குழலை குயில் போல கூவச் செய்து மனதுக்குள் குடிகொண்டிருப்பார் தேவா.
சின்ன சின்ன சேதி: ‘செந்தூரப்பாண்டி’ படத்தில் வரும் இந்தப் பாடலை, மனோவும் ஸ்வர்ணலதாவும் இணைந்து பாடியிருப்பார். மினி பேருந்து மட்டும் அல்ல, அது சென்றுசேரும் அத்தனை கிராமத்திலும் இந்தப் பாடல் ஒலிக்காமல் இருக்காது. தேவாவின் இசையில், ரிதம் செக்ஷனுக்கு தனியிடம் கொடுக்கப்படும். இந்தப் பாட்டில் கிராமிய இசைக் கருவிகளான தவில், உருமியை வைத்து வெளுத்து வாங்கியிருப்பார் தேவா.
செம்பருத்தி செம்பருத்தி: செந்தமிழ் நாடெனும் போதினிலே தெம்மாங்கு பாடலின் சாயலில்தான் பாடல் தொடங்கும். ‘வசந்தகால’ பறவை படத்தில் வரும் இப்பாடலை எஸ்பிபியும் ஜானகியும் பாடியிருப்பார். தமிழ்த் திரையுலகில் தனக்கான இடத்தைப் பிடிக்க வேண்டிய மிக முக்கியமான காலக்கட்டத்தில் வந்த இதுபோன்ற படத்தின் பாடல்கள் தேவாவுக்கு சிறப்பான வரவேற்பை தமிழ் ரசிகர்கள் மத்தியில் அவருக்குப் பெற்றுத் தந்தது.
ஒரு வெண்புறா: ‘அண்ணாமலை’ படத்தில் வரும் இந்தப் பாடல் தேவா இசையில் வந்த தேவகானம். வெறுமனே குத்துப்பாடலும், டூயட் பாடல்கள் மட்டும் தன்னைடைய அடையாளம் இல்லை என்பதை தேவா நிரூபித்துக் காட்டியது இந்தப் பாடலில்தான் என்றால் மிகையாகாது. ஜேசுதாஸ் குரலில் வரும் இந்தப் பாடலை தேவா உருவாக்கியிருக்கும் விதம் வெகு சிறப்பானது. மனது பாரமாக இருக்கும் நேரங்களில் தேவாவின் இந்தப் பாடல் மனதோடு இழையோடும். இதேபோல் கிச்சிலி சம்பா, செந்தூர பாண்டிக்கு ஒரு..., தூதுவளை இலை, தெற்கு தெரு மச்சானு, செங்குருவி செங்குருவி உள்ளிட்ட நூற்றுக்கணக்கான பாடல்கள் இன்றும் மினி பேருந்துகளிலும், கிராமங்களிலும் ஜீவித்துக் கொண்டேதான் இருக்கின்றன.
குறுகலான பயண அனுபவத்தைக் கொடுக்கும் மினி பேருந்துகள் முழுவதும் தேவாவின் இசையும், பாடல்களும் நிரம்பிக் கிடக்கும். அடிக்கொரு முறை நிறுத்தப்படும் மினி பேருந்துகள் போலத்தான் தேவாவின் ஒவ்வொரு பாடல்களும் நம் மனதுக்குள் நிலைத்திருக்கின்றன. இடைவெளி குறுகலான அந்த பேருந்து பயணத்தில் நாம் பார்த்த மனிதர்களும், பயணித்த தூரமும் மறந்திருந்தாலும், அந்த பயணத்தில் கேட்ட மறக்க முடியாத தேவாவின் பாடல்கள்... எப்போதும் தேனிசைத் தென்றல்தான்!
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT