Published : 30 Oct 2024 08:20 AM
Last Updated : 30 Oct 2024 08:20 AM

‘மின்னல் கொடி’ - தமிழ் சினிமாவின் முதல் ஸ்டன்ட் குயின்!

இந்தியாவில் சினிமா தொடங்கிய ஆரம்ப காலகட்டத்தில் கொல்கத்தா மற்றும் மும்பையில்தான் தமிழ் உட்பட பல்வேறு மொழி படங்கள் தயாரிக்கப்பட்டன. தமிழ் நடிகர்கள் மற்றும் தொழில்நுட்பக் குழுவினருடன் வட இந்திய இயக்குநர்களும் தமிழ்ப் படங்களை இயக்கி வந்தனர். அதில் ஒருவர் கே.அமர்நாத்!

தனது 21 வயதில், ‘மட்வாலி ஜோகன்’ என்ற இந்திப் படத்தை இயக்கிய இவர், தமிழில் 5 படங்களை இயக்கியிருக்கிறார். அவை, டேஞ்சர் சிக்னல், பக்கா ரவுடி, மின்னல் கொடி, வீர ரமணி, பாக்ய லீலா. இவை அனைத்தும் ஆக்‌ஷன் த்ரில்லர் படங்கள். ஸ்டன்ட் காட்சிகளுக்கு முக்கியத்துவம் கொடுத்து உருவாக்கப்பட்டவை. இந்தப் படங்களில் தமிழ் சினிமாவின் முதல் ‘ஸ்டன்ட் குயின்’ கே.டி.ருக்மணி நாயகியாக நடித்தார். இவர் புராணக் கதைகள் உட்பட வேறு சில படங்களில் நடித்திருந்தாலும் ‘ஸ்டன்ட் குயின்’ என்பது அவர் பெயருடன் ஒட்டிக்கொண்டது.

இளம் பெண்ணான மோகினியை விட்டு விட்டு இறந்துவிடுகிறார் அவர் தந்தை. அவரது சொத்துகளை அபகரித்துவிட்டு மோகினியையும் அவர் வீட்டு வேலைக்காரரையும் விரட்டி விடுகிறார், உறவினர். இருவரும் மின்னல் கொடி என்ற காயமடைந்த கொள்ளைக்காரனை போலீஸிடம் இருந்து காப்பாற்றுகிறார்கள். அவர், மோகினிதான் தனது கொள்ளைக் கூட்டத்தின் அடுத்த தலைவி என்று சொல்லிவிட்டு உயிரிழக்கிறார்.

மோகினி, மின்னல் கொடியாக ஆண் வேடத்தில் பணக்காரர்களிடம் கொள்ளையடித்து ஏழைகளுக்கு உதவுகிறார். தனது சொத்துகளை அபகரித்த உறவினரையும் கொன்று விடுகிறார். ஜெயக்குமார் என்ற போலீஸ்காரர் மின்னல் கொடியை பிடிக்க வருகிறார். மின்னல் கொடி, பெண் என்று தெரிந்ததும் காதலிக்கத் தொடங்குகிறார். பிறகு என்ன நடக்கிறது என்று கதை செல்லும்.

ராபின்ஹூட் ஸ்டைல் படம் தான். கொள்ளைக்காரியாக நடித்திருப்பார் ருக்மணி. கத்திச் சண்டை, குதிரை சவாரி என ரிஸ்க்கான காட்சிகளில் நடித்து மிரட்டினார்.

அவர் புகைப்பிடிக்கும் காட்சியும் படத்தில் இடம்பெற்றது. இதைக் கண்ட பார்வையாளர்கள் ஒரு பெண் புகைப்பிடிப்பதா? என்று ஆச்சரியமடைந்தனர். இது விவாதமாகவும் ஆனது.

இந்தப் படத்தின் கதாபாத்திரத்துக்காக, அந்தக் காலகட்ட இந்தி நடிகைகள் ஃபியர்லஸ் நடியா, கோஹர் மாமாஜிவாலா ஆகியோரை இன்ஸ்பிரேஷனாக எடுத்துக்கொண்டு நடித்தார் ருக்மணி. நாயகன் ஜெயக்குமாராக சீனிவாச ராவ் நடித்தார். இவர்‘ஸ்டன்ட் கிங்’ என்று அழைக்கப்பட்டார். ஸ்ரீவாசலு நாயுடு என்ற எஸ்.எஸ்.கொக்கோ, சுப்புலட்சுமி, அலமு, கே.பி.ராவ், உஷா ராணி என பலர் நடித்தனர். மும்பையை சேர்ந்த மோகன் பிக்சர்ஸ் சார்பில் ரமணிக்லால், மோகன்லால் தயாரித்தனர்.

1937-ம் ஆண்டு இதே தேதியில் வெளியாகி வெற்றிபெற்ற இந்தப் படத்தின் பிரின்ட் இப்போது கிடைக்கவில்லை என்பது சோகம்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x