Published : 29 Oct 2024 12:00 PM
Last Updated : 29 Oct 2024 12:00 PM
இயக்குநர் எம்.ராஜேஷ் இயக்கத்தில் ஜெயம் ரவி நடிப்பில் உருவாகியுள்ள ‘பிரதர்’ திரைப்படம், தீபாவளி திருநாளான அக்டோபர் 31-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது. இந்த படத்தை ஸ்கிரீன் சீன் மீடியா என்டர்டெய்ன்மென்ட் பிரைவேட் லிமிடெட் தயாரித்துள்ளது.
இந்த படத்தில் ஜெயம் ரவியுடன் பிரியங்கா அருள் மோகன், பூமிகா சாவ்லா, விடிவி கணேஷ், நட்டி என்கிற நட்ராஜ் சுப்பிரமணியன், ராவ் ரமேஷ், அச்யுத் குமார், சரண்யா பொன்வண்ணன், சீதா, சதீஷ் கிருஷ்ணன், எம்.எஸ்.பாஸ்கர், சுரேஷ் சக்கரவர்த்தி, விருத்தி விஷால், மாஸ்டர் அஸ்வின் உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள்.
விவேகானந்த் சந்தோஷம் ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைத்திருக்கிறார். இந்த திரைப்படத்தின் படத்தொகுப்பு பணிகளை ஆசிஷ் ஜோசப் கையாள , கலை இயக்கத்தை ஆர்.கிஷோர் மேற்கொண்டிருக்கிறார். அக்கா - தம்பி சகோதர பாசத்தை மையப்படுத்துவதுதான் படத்தின் கதை.
குடும்பப் பொழுதுபோக்கு திரைப்படமாக உருவாகி இருக்கும் இப்படத்தை விளம்பரப்படுத்தும் பணிகளில் குழுவினர் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில் சென்னையில் உள்ள நட்சத்திர ஹோட்டலில் பத்திரிகையாளர் சந்திப்பு நடைபெற்றது. இந்த சந்திப்பில் இயக்குநர் எம். ராஜேஷ், நடிகர்கள் ஜெயம் ரவி, நட்டி என்கிற நட்ராஜ், விடிவி கணேஷ், நடிகை பூமிகா சாவ்லா, ஒளிப்பதிவாளர் விவேகானந்த் சந்தோஷம், படத்தொகுப்பாளர் ஆசிஷ் ஜோசப், கலை இயக்குநர் ஆர்.கிஷோர், சண்டை பயிற்சி இயக்குநர் ஸ்டன்னர் சாம் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
இயக்குநர் எம்.ராஜேஷ் பேசுகையில், “மிகவும் சந்தோஷமாக இருக்கிறது. தீபாவளி திருநாளில் என்னுடைய திரைப்படம் வெளியாகிறது. என்னுடைய இயக்கத்தில் உருவான படம் திரையரங்கத்தில் வெளியாகி மூன்று ஆண்டுகள் ஆகிறது. ஒரு சிறிய இடைவெளிக்குப் பிறகு என்னுடைய படம் திரையரங்கில் வெளியாகிறது. கொண்டாட்டத்திற்குரிய திரைப்படம், திருவிழா நாளில் வெளியாகிறது. இது எனக்கு மகிழ்ச்சியை தருகிறது. இதற்காக ஜெயம் ரவிக்கு நன்றி சொல்கிறேன்.
ஸ்கிரீன் சீன் மீடியா நிறுவனத்தின் தயாரிப்பாளர் சுந்தர் டைனமிக்கான தயாரிப்பாளர். அவர் ஒரு விஷயத்தை நம்பி விட்டால் அதற்காக கடுமையாக உழைப்பவர். இவரைப் போன்ற அர்ப்பணிப்புடன் கூடிய தயாரிப்பாளர் திரையுலகத்திற்கு தேவை. இந்த நிறுவனம் தொடர்ந்து திரைப்படங்களை தயாரிக்க வேண்டும் என்பதுதான் என்னுடைய ஆசை. தமிழ் சினிமாவிற்கு கிடைத்த சிறந்த தயாரிப்பாளர் இவர்.
இப்படத்தின் நாயகி பிரியங்கா மிகவும் க்யூட். படப்பிடிப்பு தளத்தில் காட்சிகளை படமாக்கும் போது நான் கட் சொன்ன பிறகும் அவரின் சின்ன சின்ன ரியாக்ஷன்களை வைத்து படமாக்கி அதனை படம் வெளியான பிறகு இணையத்தில் வெளியிட திட்டமிட்டு இருக்கிறேன். அது மிகவும் சுவாரசியமானதாக இருக்கும். படப்பிடிப்பு தளத்தில் ஜாலியாகவும் உற்சாகமாகவும் உலா வருவார். இந்தப் படத்தில் நடித்த அனைத்து கதாபாத்திரங்களுக்கும் நான் முக்கியத்துவம் கொடுத்திருக்கிறேன்.
படத்தில் மிகப் பெரிய பலம் ஹாரிஸ் ஜெயராஜ். படத்திற்கான பின்னணி இசைக்கு நிறைய நேரம் எடுத்துக்கொண்டு நேர்த்தியாக உருவாக்கி இருக்கிறார். பாடல்கள் ஏற்கனவே வெளியாகி பெரிய வெற்றியை பெற்றிருக்கின்றன. இந்தப் படம் வெளியான பிறகு இன்னும் இரண்டு பாடல்கள் வெற்றி பெறும். அவருக்கு நான் ரசிகன். அவருடன் இணைந்து பணியாற்றியது மிகவும் மகிழ்ச்சியான அனுபவமாக இருந்தது. தீபாவளியன்று குடும்பத்துடன் திரையரங்கத்திற்கு சென்று பார்த்து ரசித்து கொண்டாடும் திரைப்படமாக 'பிரதர்' இருக்கும்” என்றார்.
நடிகர் ஜெயம் ரவி பேசுகையில், “பிரதர் திரைப்படம் நல்லதொரு டீசன்டான மூவி. லீனியர் நரேஷனில் அழகான படமாகவும் குடும்பம் முழுவதும் மகிழ்ச்சி அடையும் வகையிலும் பிரதர் உருவாகி இருக்கிறது. ஒரு தீபாவளி படத்திற்கு என்னென்ன டிக் மார்க் வேண்டுமோ, அவை எல்லாம் ஒன்றாக சேர்ந்திருக்கும் படம் தான் பிரதர். இந்தப் படத்தை உருவாக்கும் போதும் நாங்கள் அனைவரும் சந்தோஷமாகவே பணியாற்றினோம்.
இந்தப் படத்தில் படப்பிடிப்பு நடைபெறும் தருணங்களில் நாங்கள் அனைவரும் ஒரு குடும்பமாகத்தான் இருந்தோம். தயாரிப்பாளர் சுந்தர் எங்கள் அனைவருக்கும் அனைத்து வசதிகளையும் அளித்தார். படப்பிடிப்பு நடைபெற்ற தருணத்தில் பூமிகாவின் பிறந்தநாள் வந்தது, அதற்காக படப்பிடிப்பு தளத்தில் கேக் வெட்டி கொண்டாடினோம். படப்பிடிப்பு நடைபெற்ற நாட்கள் முழுவதும் அனைவரிடமும் அன்பும், அக்கறையும் இருந்தது. இந்தப் படத்தை நடித்த நடிகர்களையும் பணியாற்றிய தொழில்நுட்ப கலைஞர்களையும் மறக்க முடியாது. கடுமையாக உழைப்பில் உருவான திரைப்படம் இது. இந்தப் படம் அனைவரும் குடும்பத்துடன் திரையரங்கத்திற்கு சென்று ஜாலியாக ரசிக்கக் கூடிய படம். அனைவருக்கும் தீபாவளி நல்வாழ்த்துக்கள்” என்றார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT