Published : 26 Oct 2024 09:41 PM
Last Updated : 26 Oct 2024 09:41 PM
சென்னை: “சூர்யாவின் முதல் படம் வரும்போது எப்படி இருந்தது என யோசித்துப் பார்க்கிறேன். நடிக்க தெரியவில்லை என்று சொன்னார்கள். நடனமாட தெரியவில்லை, சிறப்பான உடல் கட்டமைப்பு இல்லை என்றெல்லாம் சொன்னார்கள். எதையெல்லாம் நெகட்டிவ் என்று சொன்னார்களோ அதனை தனது உழைப்பால் பாசிட்டிவாக மாற்றியவர்" என்று சூர்யா குறித்து நடிகர் கார்த்தி நெகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளார்.
சிறுத்தை சிவா இயக்கத்தில் சூர்யா நடித்துள்ள ‘கங்குவா’ திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் உள்ள நேரு உள் விளையாட்டு அரங்கில் நடைபெற்றது. இதில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட கார்த்தி பேசுகையில், “இந்தப் படத்துக்காக நீண்ட நாட்கள் காத்திருக்கிறேன். ‘கங்குவா’ படத்தின் முதல் தோற்றம் பார்க்கும்போதே பிரமிப்பாக இருந்தது. சூர்யாவை பொறுத்தவரை பார்வையாளர்களுக்கு இது போதும் என்று நினைக்கவே மாட்டார். அவர்களுக்கு இது பத்தாது நிறைய கொடுக்க வேண்டும் என கடும் உழைப்பை கொட்டிக் கொண்டே இருப்பார். சூர்யாவின் முதல் படம் வரும்போது எப்படி இருந்தது என யோசித்துப் பார்க்கிறேன். நடிக்க தெரியவில்லை என்று சொன்னார்கள். நடனமாட தெரியவில்லை, சிறப்பான உடல் கட்டமைப்பு இல்லை என்றெல்லாம் சொன்னார்கள்.
எனக்குத் தெரியும் சண்டைப் பயிற்சிக்காக தினமும் 3 மணிநேரம் க்ளாஸுக்கு செல்வார். நடன பயிற்சிக்கு தனியே க்ளாஸுக்கு போவார். இப்போது பார்த்தால் நடனத்தில் மிரட்டுகிறார். உடலமைப்பு என எடுத்துக் கொண்டால் இன்று எல்லா ஜிம்மிலும் அவர் புகைப்படம் இருக்கும். எதையெல்லாம் நெகட்டிவ் என்று சொன்னார்களோ அதனை தனது உழைப்பால் பாசிட்டிவாக மாற்றியவர். மனது வைத்து உழைத்தால் உச்சத்துக்கு செல்ல முடியும் என்பதற்கு சூர்யா உதாரணம். சிறுத்தை சிவாவை பொறுத்தவரை எல்லோரிடமும் ஒரே மாதிரியாக நடந்து கொள்வார். எல்லாவற்றையும் மிக சரியாக திட்டமிட்டு செய்யக்கூடியவர். என்ன இருந்தாலும், எமோஷனை விடவே மாட்டார். இந்தப் படத்திலும் அப்படி ஒரு எமோஷன் உள்ளது. ஞானவேல் ராஜாவுக்கு பெரிய காத்திருப்பு உள்ளது. யாருக்கோ உதவி செய்ய சென்று மாட்டி அதிலிருந்து மீண்டு வர 10 ஆண்டுகள் ஆகிவிட்டது. இந்தப் படம் அந்த வலிகளை மறக்கடிக்கும்” என்றார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT