Published : 23 Oct 2024 06:02 PM
Last Updated : 23 Oct 2024 06:02 PM
பூங்காவில் நான் அமர்ந்திருந்த இருக்கையினருகே இரண்டு பைக்குகளில் அமர்ந்தும், சுற்றி நின்றும் சில 2கே இளைஞர்கள் பேசிக் கொண்டிருந்தார்கள். அவர்கள் காட்சி ஊடகவியல் மாணவர்களென்பது பேச்சில் தெரிந்தது. “அந்தப் படத்துல திரைக்கதை வேஸ்ட் ட்யூட், ஆனா மேக்கிங் நல்லா இருந்தது. இந்தப் படத்துலயும் மேக்கிங் கலக்கிட்டாங்க, ஆனா, திரைக்கதை ரொம்ப தட்டையா இருந்தது”... இவ்வாறு விரிந்தது அவர்கள் பேச்சு. அவர்களிடம் கேட்டேன், “திரையாக்கம் என்று தனியாக ஒன்று இருக்க, இயங்க முடியுமா?” “இருக்குமே அண்ணா”, என்று சொல்லி சில உதாரணங்களைக் கூறினர். அவர்கள் கூறிய அம்சங்கள்.. கண்கவர் காட்சி - அதாவது மிக உயர்ரக கேமராவில் எடுக்கப்பட்ட அழகான ஷாட்டுகள், வண்ண வேலைப்பாடு, கூர்மையான கட்ஸ், உச்சஸ்தாயி பின்னனி இசை, பெரும் பொருட்செலவுடன் கூடிய தயாரிப்பு வடிவம். இதனையே திரையாக்கம் என்பதற்கான அளவுகோலாக அவர்கள் முன்வைத்தனர்.
அவர்களது அரும்பு விடும் கலைக்காதலின் மீது உடனடியாக முரணுரையாடல் நிகழ்த்துவது ஆரோக்கியமானதல்ல என்பதால் அவர்களுக்கு வாழ்த்துக் கூறி விடைபெற்றேன். ஆனால், பொதுவாகவே இத்தகைய கருத்துகளை பரவலாகக் கேட்க முடிகிறது. உண்மையில் கண்கவர் காட்சிகளும், கூர்மையான படத்தொகுப்பும் , உச்சஸ்தாயி பின்னணி இசையும் மட்டுமே ஒரு நல்ல திரையாக்கம் ஆகிவிடுமா?
வெளியும் நேரமும்: திரையில் எடுத்துக் கொள்ளப்படும் வெளி (space)மற்றும் நேரம் (time) ஒவ்வொன்றிற்கும் ஒரு நோக்கம் இருக்கிறது. ஒவ்வொரு ஷாட் கோணத்துக்கும் ஒரு குணமிருக்கிறது, நிலைநிறுத்தப்படும் நேர அளவிற்கு ஒரு அர்த்தம் இருக்கிறது. சட்டக வெளியில் கதாபாத்திரங்களின் இடத்திற்கும், நகர்விற்கும், கேமராவின் நகர்விற்கும் ஒரு பொருள் இருக்கிறது. கதாபாத்திரங்களின் உணர்வு நிலைகளை சரியாக வெளிக்கொணர்வதில் பெரும் நுட்பம் இருக்கிறது. இந்த நோக்கங்களை சரியானபடி கையாண்டு காட்சியின் உள்ளடக்கத்திற்கு உருவம் கொடுப்பதே சிறந்த திரையாக்கம்.
உள்ளடக்கம் என்பது என்ன? - கதாபாத்திர உணர்வு நிலைகள், அவற்றிற்கிடையேயான முரண்பாடுகள் மற்றும் நிலை மாற்றங்கள். இதனை சிறப்பாக திரையில் உருவகப்படுத்துவதே ஒரு நல்ல திரையாக்கம். இதனை ஸ்டேஜிங் (staging) மற்றும் ப்ளாக்கிங் (blocking) என்று ஆங்கிலத்தில் சொல்வார்கள். காட்சிகளுக்கான திரையெழுத்தில் எவ்வளவு அடர்த்தியும், நுட்பமும் நிறைந்திருக்கிறதோ அவ்வளவு அதனை காட்சியாக்குவதில் சவால் அதிகரிக்கும். அந்தச் சவாலைத் திறம்பட நிகழ்த்துபவரும், கலை வெகுமதியை மீறாமல் நிகழ்த்துபவருமே சிறந்த இயக்குநர்.
உதாரணமாக, 'வடசென்னை' படத்தில் ராஜன் கொல்லப்படும் காட்சி நமக்கு நன்றாக நினைவிருக்கும்.. குணா, செந்தில், வேலு, ஜாவா பழனி எல்லோரும் ராஜனை தீர்த்து கட்டும் முடிவில் இருக்கிறார்கள். ராஜன் அவர்கள் நால்வரையும் ஊர் மக்களின் முன்பு அடித்திருப்பார். வழக்கமாக சந்திக்கும் ஹோட்டலில் வேட்டைக்கு காத்திருக்கும் ஓநாய்கள் போல குரூரத்தோடு காத்திருக்கிறார்கள் நால்வரும். அந்த இரவில் ராஜனும், அவர் தம்பியும் ஹோட்டலுக்கு வருகிறார்கள்.
ஹோட்டலில் நால்வரிடமும் நேசத்தோடு உரையாடும் ராஜன், அவர்களை தான் அடித்ததற்கான காரணத்தையும், அதன் பின்னிருக்கும் நியாயத்தையும் கூறுகிறார். இதனையடுத்து குணா மனம் மாறுகிறான். ஆனால், ராஜனின் சாவில் செந்திலுக்கு வேறு ஆதாயக் கணக்குகள் இருக்கின்றன. குணா மனம் மாறியதையடுத்து வேலு இரட்டை மனநிலைக்கு செல்கிறான். ஹோட்டலில் கை கழுவுமிடத்தில் மூவருக்கும் இடையே விவாதம் நடக்கிறது. தங்கள் திட்டம் ராஜனுக்கு தெரிந்தால் அவர் தங்களை ‘காலி’ செய்து விடுவார் என்ற பயமும் மூவருக்கும் மேலோங்குகிறது. இந்நிலையில் குணாவின் மனமாற்றத்தையடுத்து திட்டம் கைவிடப்பட்டு எல்லோரும் ராஜனோடு சகஜமான உரையாடலில் சங்கமிக்கின்றனர். அப்போது ராஜன் தம்பி வெளியே கடைக்குச் செல்கிறான்.
நிலைமை ஆசுவாசமாகி விட்ட இத்தருணத்தில், டேபிளின் அடியில் ஒளித்து வைக்கப்பட்டிருக்கும் கத்திகளை தற்செயலாக ராஜன் பார்த்து விடுகிறார். தங்கள் திட்டம் அம்பலப்பட்டு விட்ட பயம் நால்வரையும் ஆக்கிரமிக்கிறது. இந்தத் தருணத்தை தந்திரமாகப் பயன்படுத்தி செந்தில், ராஜனை கத்தியால் குத்த! குணா இதனை ஏற்றுக் கொள்ள முடியாமல் நிற்க! தொடர்ந்து ராஜன் திருப்பி தாக்கி விடுவாரோ என்ற பயத்தில் வேலு, ஜாவா பழனி இருவரும் ராஜனை தாக்க! குணா மனதுக்குள் கடும் போராட்டம் நிகழ! இந்நிலையில் திரும்பி வந்து விடும் ராஜனின் தம்பியிடம் இது பழிவாங்கல் படலமாக வளரக் கூடாது என்று ராஜன் சொல்ல! அழுதவாறே வெளியேறுகிறார் ராஜனின் தம்பி. இறுதியில் கை ஓங்குமிடத்து சாய்வது என்ற அடிப்படை தந்திரத்தை நொடிப்பொழுதில் எடுக்கும் குணா.. தானும் ராஜனை வெட்டுகிறான்.
செந்திலின் ஆதாயக் கணக்கு, குணாவின் மாறும் மனது, வேலுவின் இரட்டை மனநிலை, எல்லோருக்கும் இருக்கும் பயம், ராஜனின் வெள்ளந்தித்தனம், ராஜனிடம் நால்வரின் திட்டமும் அம்பலப்பட்ட பயம், பயம் ஏற்படுத்தும் எதிர்வினை, செந்தலின் தந்திரம், கொல்லப்படும் நிலையிலும் இது பழிவாங்கல் படலமாக மாறக் கூடாது என்கிற ராஜனின் அக்கறை, தம்பியின் கையறு நிலை, இறுதியில் வெல்லும் தரப்போடு சேரும் குணா!! கதாபாத்திரங்களின் வேறுபட்ட மனநிலைகளை, அவற்றிற்கிடையேயான முரண்பாடுகள் மற்றும் நிலைமாற்றங்களை எப்படி காட்சியில் உருவகம் கொடுத்திருக்கிறார் இயக்குநர் வெற்றிமாறன். எவ்விதமான ஸ்டேஜிங் மூலம் இத்தனை உளவியலும் காட்சிக்குள் உருப்பெற்றன. இதன் பெயர் தான் திரையாக்கம்.
உணர்வுகளைக் கடத்தும் ‘ஷாட்’கள்’ - இக்காட்சியில், குணா மனம் மாறி கை கழுவும் இடத்திற்குச் செல்கையில் தொடங்கும் சிங்கிள் ஷாட் மிக அழகியலானது. குணாவுக்கும்- செந்திலுக்குமான கருத்து மாறுபாடு, வேலுவின் இரட்டை மனநிலை, மூவரின் பயம் என நிகழும் இந்த முரணியக்கம் உருவாக்கும் பதற்றத்தை இந்த 'சிங்கிள் ஷாட் ஸ்டேஜிங்' உயிர்ப்புடன் நமக்குள் கடத்துகிறது. ஒவ்வொரு வினாடியிலும் பதற்றம் அடித்துக் கொண்டிருப்பதால் அந்த ஷாட்டை கட் செய்து பதற்றத்தை மெலிதாக உடைப்பதைத் தவிர்க்கிறார் இயக்குநர்.
பின்னர் திட்டம் கைவிடப்பட்டு எல்லோரும் ஆசுவாசமாகும் போது அந்த ஷாட் வெட்டப்பட்டு, ராஜன் சிகரெட் எடுக்கும் ஷாட்டுக்கு செல்கிறது. அந்த சிகரெட் தான் அடுத்த சில வினாடிகளில் மறைத்து வைக்கப்பட்டிருக்கும் கத்திகளை காட்டிக்கொடுக்க காரணமாயிருக்கிறது. தீப்பெட்டி கீழே விழுந்து அதனை எடுக்க ராஜன் குனியும் போது டேபிளின் கீழுள்ள கத்திகளில் ஒன்று கீழே விழுந்து அதனைப் பார்த்து விடுகிறார் ராஜன். காட்சியின் மொத்த முரணியக்கமும் முத்தாய்ப்புக் கொள்ளும் அத்தருணத்தில் மித தூரத்திற்கு (mid-long) வருகிறது ஷாட், உட்கார்ந்திருந்த குணாவும்,வேலுவும் எழுந்து நகர்கிறார்கள். இந்த மித தூர ஷாட் சில வினாடிகள் நிலைநிறுத்தப்படுகிறது. ஆம், ஒவ்வொரு ஷாட் கோணத்துக்கும் ஒரு குணமிருக்கிறது, நிலைநிறுத்தப்படும் நேர அளவிற்கு ஒரு அர்த்தம் இருக்கிறது. சட்டக வெளியில் கதாபாத்திரங்களின் இடத்திற்கும், நகர்விற்கும், கேமராவின் நகர்விற்கும் ஒரு பொருள் இருக்கிறது.
நோக்கமற்ற வெறும் கண்கவர் காட்சி சட்டகங்களிலோ, உச்ச ஸ்தாயி பின்னனி இசையிலோ, தேவையற்ற உவமைக் காட்சிகளிலோ தஞ்சம் அடையவில்லை இந்தக் காட்சி. கதாபாத்திர மனநுட்பங்களை காட்சியாக பொறிபடச் செய்த தேர்ந்த இயக்கம் மூலம் சிறந்து நிற்கிறது இக்காட்சி. அதற்கு முக்கியக் காரணம் வலுவான திரை எழுத்து. இது போல இந்திய சினிமாக்களிலிருந்தும், மேற்கத்திய, கிழக்கத்திய சினிமாக்களிலிருந்தும் பல காட்சிகளை சுட்டிக்காட்ட முடியும். இப்படி திரை எழுத்தில் இயக்குநருக்கான எந்த சவாலும் உருவாக்கப்படாமல் காட்சிகள் தட்டையாக இருக்கும் பட்சத்தில் பொருளற்ற கேமரா சட்டகங்கள் பின்னனி இசை போன்றவற்றை வைத்து அழகியல் பாவனைகள் நிகழும். மறுபுறம் அரசியல் முழக்கங்கள் வைத்து பாவனைகள் நிகழும். இன்னொருபுறம் அட்ரினலின் ரஷ் என்று திரையைக் கொலைகளால் நிரப்பி ஒரு பாவனை நிகழும். ஆனால் அசலான திரைப்படம் உருப்பெறாது.
- அருண் பகத், சுயாதீன இயக்குநர்
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT