Last Updated : 19 Oct, 2024 11:23 AM

2  

Published : 19 Oct 2024 11:23 AM
Last Updated : 19 Oct 2024 11:23 AM

சார் review: போஸ் வெங்கட் - விமல் கூட்டணி பாஸ் ஆனதா?

‘கல்விக்கு எதிராக கடவுளே வந்தாலும் எதிர்த்து கேள்’ என்று பேசுகிறது போஸ் வெங்கட் - விமல் கூட்டணியின் அரசியல் பாடம். சாதிய ஒடுக்குமுறைகளிலிருந்து வெளியேற கல்வி ஒன்றே ஒரே வழி என தீவிரமாக நம்புகிறார் ஆசிரியர் அண்ணாதுரை (சந்திரகுமார்). அதற்காக மாங்கொல்லை கிராமத்தில் கடும் போராட்டத்துக்குப் பின் பள்ளி ஒன்றை கட்டுகிறார். அவரைத் தொடர்ந்து அவரது மகன் பொன்னரசன் (சரவணன்) அந்தப் பள்ளிக்கு தலைமை ஆசிரியராக இருந்து வழிநடத்துகிறார். நடுநிலை பள்ளியை, மேல்நிலை பள்ளியாக தரம் உயர்த்த நினைக்கும் பொன்னரசனுக்கு அந்த ஊரைச் சேர்ந்த ஆதிக்க சக்தியினர் முட்டுக்கட்டை போடுகின்றனர்.

கடவுளின் பெயரால் பள்ளியை இடிக்க துடிக்கின்றனர். இந்த சூழலில் பொன்னரசன் மகன் சிவஞானம் (விமல்) அந்த பள்ளியில் ஆசிரியராக பணிக்குச் சேர்கிறார். அங்கிருக்கும் சாதிய ஆதிக்கத்தையும் மீறி, அவர் தன் தந்தையின் விருப்பத்தை நிறைவேற்றினாரா? அதற்கு வந்த சிக்கல்கள் என்ன என்பது தான் ‘சார்’.

மதம், கடவுள், சாதியின் துணைகொண்டு, அதன் மீதான மக்களின் நம்பிக்கையை பயன்படுத்தி அவர்களை கல்வியின் வாசனை நுகரவிடாமல் தடுத்து தொடர் அடிமை மனநிலையில் வைக்கலாம் என்ற கூட்டத்துக்கும், கல்வியே விடுதலை என்ற குடும்பத்துக்கும் இடையில் நடக்கும் சாதிய vs அறிவு மோதலை களமாக்கியிருக்கிறார் இயக்குநர் போஸ் வெங்கட். நிச்சயம் அனைவரும் படிக்கவேண்டிய ‘சப்ஜெக்ட்’டை, வெகுஜன மக்கள் தவறவிடக்கூடாது என்பதற்காக அவர் செய்த ‘கமர்ஷியல்’ சமரசம் தான் சிக்கல். கண்டதும் காதல், காதலைத் தொடர்ந்து பாடல், பாடலைத் தொடர்ந்து பிரிவு, பிரிவைத் தொடர்ந்து இணைவு, நடுவில் சில காமெடி முயற்சி என இடைவேளை மணி அடிக்கும்வரை பார்வையாளர்களை ‘பாடத்துக்குள்’ அழைத்துச் செல்லாமல் எங்கெங்கேயோ சுற்றிக்கொண்டிருக்கிறது படம்.

அண்ணாதுரை ஆசிரியரின் பின் கதை, சாமியாடல் மூலம் மக்களின் நம்பிக்கையை பயன்படுத்தி நிகழும் சம்பவங்கள், பள்ளியை அகற்ற மேற்கொள்ளப்படும் முயற்சிகள், அண்ணாதுரை குடும்பத்தை ஆட்டுவிக்கும் நோய், என ஆங்காங்கே வரும் காட்சிகள் கவனிக்க வைக்கின்றன. ஒரு கட்டத்தில் படம் ஒரு குடும்பத்துக்குள் மட்டுமே சிக்கிக் கொண்டு, அவர்களின் பாதிப்பையும், இரக்கத்தையும் மட்டுமே திரும்ப திரும்ப பதிவு செய்கிறது. இந்த பச்சதாபம் தேடும் காட்சிகள் வழியே, அந்த கிராமத்தில் ஒரு குடும்பத்துக்கு மட்டுமே அநீதி இழைக்கப்படுவதாகவும், அங்கிருக்கும் பாதிக்கப்பட்ட ஒடுக்கப்பட்ட மக்களும் கூட அந்த அநீதிக்கு துணைபோவதாகவும் காட்டப்படுகிறது. இதனால் ஒரு குடும்பம் vs ஊர் என்ற புள்ளியில் படம் நகர்ந்து, யாருக்கு ஆதரவாக பேச வேண்டுமோ அவர்களேயே திரும்ப ‘victim blame’ செய்வது நெருடல். கல்வி மறுக்கப்படும் அந்த மக்களின் குரலோ, வலியோ, அழுத்தமாக பதிவு செய்யாதது பெரும் குறை. அதேபோல தொடர்ச்சியில்லாமல் இடையில் சேர்த்தது போல சில காட்சிகளையும் உணர முடிகிறது.

காதல், காமெடி, சேட்டை என ஜாலியான ஆசிரியராக சிவஞானம் கதாபாத்திரத்தில் முதல் பாதியில் கவனிக்க வைக்கும் விமல், வலியை உணர வைக்கும் இடம் பாதியில் நடிப்பில் ஸ்கோர் செய்கிறார். காதல் காட்சிக்காக உருவாக்கப்பட்ட அழுத்தமில்லா கதாபாத்திரம் சாய தேவியுடையது. உணர்வுப்பூர்வமான காட்சிகளின் வழியே நடிப்பில் தாக்கல் செலுத்துகிறார் சரவணன். அறிமுக நடிகரான சிராஜ் வில்லன் கதாபாத்திரத்தில் ஓரளவு வெற்றி பெறுகிறார். ஜெயபாலன், ரமா உள்ளிட்டோர் சொன்னதை செய்துள்ளனர். சித்துகுமாரின் இசையில், ‘படிச்சிக்கிறோம்’ பாடல் உருக்கம். வரிகள் கவனிக்க வைக்கின்றன. பின்னணி இசையில் தேவையான தாக்கம் மிஸ்ஸிங். இனியன் ஜே ஹரீஷ் ஒளிப்பதிவில் காட்சிகள் கவனம் பெறுகின்றன. தேவையில்லாத காட்சிகளுக்கு ‘கறார்’ கட்ஸ் போட தவறுகிறது ஸ்ரீஜித்சாரங் படத்தொகுப்பு. 80களின் காலக்கட்டத்தை காட்சிப்படுத்தியிருக்கும் கலை ஆக்கம் படத்துக்கு பலம். கதைக்களத்துக்கு உரிய நியாயம் சேர்க்க தவறியதால் ‘சார்’ பாஸ் மார்க் எடுக்கவே போராடுகிறது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x