Published : 12 Oct 2024 03:55 PM
Last Updated : 12 Oct 2024 03:55 PM
சென்னை: “சினிமாவில் என்னுடைய நடிப்பை பற்றியோ, நான் விருதுக்கு தகுதியானவன் இல்லை என்பது குறித்தோ சொன்னால் நான் ஏற்றுக்கொள்வேன். ஆனால், என் தனிப்பட்ட வாழ்க்கை குறித்து எனக்கு மட்டும் தான் தெரியும். தனிப்பட்ட வாழ்க்கை குறித்து யார் எது சொன்னாலும் அது என்னை பாதிக்காது” என நடிகர் ஜெயம் ரவி தெரிவித்துள்ளார்.
எம்.ராஜேஷ் இயக்கத்தில் ஜெயம் ரவி நடித்துள்ள ‘பிரதர்’ திரைப்படம் வரும் தீபாவளியை முன்னிட்டு அக்.31-ம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது. படம் தொடர்பான புரமோஷன்களில் ஈடுபட்டுள்ள ஜெயம் ரவி அண்மையில் அளித்த பேட்டி ஒன்றில், தனது தனிப்பட்ட வாழ்க்கை குறித்த எழும் விமர்சனங்கள் தொடர்பாக பேசியுள்ளார். அதில் அவர், “சினிமாவை பற்றி ஆயிரம் விஷயங்கள் சொல்லுங்கள். நான் நன்றாக நடிக்கவில்லை என்று சொல்லுங்கள், நன்றாக நடித்துள்ளேன் என்று சொல்லுங்கள். அந்த விருதுக்கு நான் தகுதி இல்லாதவன் என்று சொல்லுங்கள் அதை நான் கேட்டுக் கொள்வேன். சரி அடுத்த படத்தில் சிறப்பாக செய்வோம் என்று மாற்றிக் கொள்வேன். ஆனால், என்னுடைய தனிப்பட்ட வாழ்க்கை எனக்கு மட்டும் தான் தெரியும். என்ன நடக்கிறது என்பது நான் மட்டுமே அறிவேன். என்னை பொறுத்தவரை எனக்கு இருப்பது குறுகிய நண்பர்கள் வட்டம்.
அந்த வட்டத்தை தாண்டி என்னுடைய தனிப்பட்ட வாழ்க்கை குறித்து யார் எதை பேசினாலும் அது என்னை பாதிக்காது. அதற்கு வாய்ப்பில்லை. ஏனென்றால் என்னைப் பற்றி தெரிந்தவர்கள் மிக சிலர் தான். அவர்களுக்கு மட்டும் தான் என் தனிப்பட்ட வாழ்க்கையைப் பற்றி தெரியும். சினிமா என்று வரும்போது அது ஒரு பொதுதளம். அதில் நீங்கள் என்னை விமர்சிக்கலாம். அதை நான் காது கொடுத்துக் கேட்டுக் கொள்வேன். இப்படி நான் சினிமாவையும், தனிப்பட்ட வாழ்க்கையையும் பிரித்து வைத்துள்ளேன். அதனால் மற்றவர்கள் என்னுடைய தனிப்பட்ட வாழ்க்கை குறித்து பேசுவது என்னை பாதிக்காது. தனிப்பட்ட விஷயங்களை நானே பார்த்துக் கொள்கிறேன். அதைப்பற்றி யாரும் பேச வேண்டாம்.” என தெரிவித்துள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT