Published : 27 Sep 2024 10:34 AM
Last Updated : 27 Sep 2024 10:34 AM
தமிழகத்தில் இன்று (வெள்ளிக்கிழமை) 5 படங்கள் வெளியாகின்றன. இதனால் திரையரங்குகள் பிரிப்பதில் சிக்கல் ஏற்பட்டதால், இரவு வரை பேச்சுவார்த்தை நடந்துள்ளது.
தமிழகத்தில் உள்ள திரையரங்குகளில் விஜய் நடித்த ‘கோட்’ சில திரையரங்குகளில் திரையிடப்பட்டு வருகிறது. மேலும், கடந்த வாரம் வெளியான ‘லப்பர் பந்து’ படத்துக்கும் நல்ல வரவேற்பு இருக்கிறது. வார நாட்களிலேயே பல்வேறு திரையரங்குகளில் ஹவுஸ் ஃபுல்லாக இருக்கிறது.
இந்த வாரம் வெளியீடாக கார்த்தி நடித்துள்ள ‘மெய்யழகன்’, ஜூனியர் என்.டி.ஆர் நடித்துள்ள ‘தேவரா’, விஜய் ஆண்டனி நடித்துள்ள ‘ஹிட்லர்’, பிரபுதேவா நடித்துள்ள ‘பேட்ட ராப்’ மற்றும் சதீஷ் நடித்துள்ள ‘சட்டம் என் கையில்’ ஆகியவை வெளியாகின்றன. இதில் ‘மெய்யழகன்’ படத்தினை சக்தி ஃபிலிம் பேக்டரி, ‘தேவரா’ படத்தினை ஸ்ரீ லட்சுமி மூவிஸ், ‘ஹிட்லர்’ படத்தினை ரெட் ஜெயண்ட் மூவிஸ் மற்றும் இதர படங்களை சிறு நிறுவனங்கள் வெளியிடுகின்றன.
இதில் தான் சிக்கல் ஏற்பட்டுள்ளது. கார்த்தி படமென்பதால் கண்டிப்பாக ஒரு திரையரங்கம் வேண்டும் என்று அனைத்து திரையரங்குகளிலும் பேசப்பட்டு இருக்கிறது. ‘ஹிட்லர்’ படத்தை ரெட் ஜெயண்ட் நிறுவனம் வெளியிடுவதால் அவர்களும் ஒரு திரையரங்கம் வேண்டும் என்று பேசியிருக்கிறார்கள். இவை தவிர இதர படங்களும் திரையரங்கம் பிடிப்பதில் சிக்கல் நிலவியது.
ஆனால், ‘லப்பர் பந்து’ மற்றும் ‘கோட்’ படத்துக்கு கூட்டம் இருப்பதால் அவற்றை பல திரையரங்க உரிமையாளர்கள் தூக்க முடியாது என்று கூறிவிட்டார்கள். இதனால் இந்த வார படங்களை வெளியிடும் விநியோகஸ்தர்களுக்குள் போட்டி நிலவியது.
இதன் பேச்சுவார்த்தை முடிவு பெறாத காரணத்தினால், பல்வேறு ஊர்களில் ‘மெய்யழகன்’ படத்தின் டிக்கெட் புக்கிங் ஆரம்பிக்கப்படாமல் இருந்தது. இது தொடர்பாக “கார்த்தி ரசிகர்களுக்கு, ’மெய்யழகன்’ மற்றொரு படமல்ல. சரியான ஒப்பந்த முறையை ஏற்றுக் கொண்டால் மட்டுமே திரையிடப்படும். புரிந்துணர்வுக்கு நன்றி. நாங்கள் பார்த்துக் கொள்கிறோம்.” என்று சக்தி ஃபிலிம் பேக்டரி நிறுவனம் தெரிவித்தது.
நேற்று இரவு 11 மணி வரை திரையரங்க உரிமையாளர்கள் அனைவரிடமும் பேசி திரையரங்கினை ஒப்பந்தம் செய்திருக்கிறார்கள். இறுதியாக தமிழகத்தில் 400 திரையரங்குகளில் ‘மெய்யழகன்’ வெளியாகிறது. ‘தேவரா’ படத்தின் தெலுங்கு பதிப்புக்கு நல்ல புக்கிங் இருப்பதால், பல்வேறு திரையரங்குகள் அதனை திரையிட்டுள்ளன.
‘ஹிட்லர்’ படத்துக்கு அனைத்து திரையரங்குகளிலும் 2 காட்சிகள், 3 காட்சிகள் என கொடுக்கப்பட்டுள்ளன. ‘பேட்ட ராப்’ மற்றும் ‘சட்டம் என் கையில்’ ஆகிய படங்களுக்கு அனைத்து திரையரங்குகளிலும் ஒரு காட்சி மட்டுமே கொடுக்கப்பட்டுள்ளது. இதில் எந்தப் படத்துக்கு மக்கள் கூட்டம் அதிகரிக்கிறதோ, அவற்றுக்கு திரையரங்க எண்ணிக்கை அதிகமாகும் என்பது உறுதி.
“#Meiyazhagan releases in 400 theatres across TN From Today!
— Harshath RVS (@Harshath_rvs) September 26, 2024
Get ready for the feel-good movie of the year! #MeiyazhaganFromToday pic.twitter.com/99CRRrDpxb
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT