Published : 24 Sep 2024 02:52 PM
Last Updated : 24 Sep 2024 02:52 PM
ஹைதராபாத்: “நான் பேசியது தவறாக புரிந்து கொள்ளப்பட்டு இருந்தால் மன்னிப்பு கேட்டுக் கொள்கிறேன். வெங்கடேஷ்வராவின் பக்தனாக நமது கலாச்சாரத்தை எப்போதும் கடைபிடிப்பேன்.” என நடிகர் கார்த்தி, பவன் கல்யாணிடம் மன்னிப்புக் கோரியுள்ளார்.
பிரேம்குமார் இயக்கத்தில் கார்த்தி, அரவிந்த்சாமி நடித்துள்ள ‘மெய்யழகன்’ திரைப்படம் வரும் 27-ம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது. இந்தப் படத்தின் புரமோஷன் நிகழ்ச்சிக்காக நடிகர் கார்த்தி மற்றும் படக்குழுவினர் நேற்று (செப்.23) ஹைதராபாத் சென்றிருந்தனர். அங்கு நடைபெற்ற நிகழ்ச்சியில் நிகழ்ச்சி தொகுப்பாளர், நடிகர் கார்த்தியிடம், “லட்டு வேண்டுமா?”என நகைச்சுவையாகக் கேட்க, அதற்கு கார்த்தி, “லட்டு இப்போது சென்சிடிவான விஷயம். அதைப் பற்றி பேசாதீர்கள்” என்று கூறினார்.
இந்த வீடியோ சமூக வலைதளங்களில் பரவியது. லட்டு விவகாரம் குறித்து நடிகர் கார்த்தி கிண்டல் செய்துள்ளதாக ஆந்திர துணை முதல்வரும், நடிகருமான பவன் கல்யாண் ஆதங்கம் தெரிவித்தார். இது தொடர்பாக அவர் பேசும்போது, “லட்டு விவகாரத்தை பலரும் கேலி செய்வதை பார்க்க முடிகிறது. சமீபத்திய சினிமா நிகழ்வில் லட்டு சென்சிட்டிவ் டாப்பிக் என பேசப்பட்டுள்ளது. ஒரு நடிகராக நான் உங்களை மதிக்கிறேன். ஆனால், சனாதன தர்மம் என வரும்போது, ஒரு வார்த்தை பேசுவதற்கு முன் நூறு முறை யோசிக்க வேண்டும்” என தெரிவித்துள்ளார்.
இந்நிலையில், தான் பேசியது குறித்து நடிகர் கார்த்தி வருத்தம் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் தனது எக்ஸ் தள பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவு: “அன்புள்ள பவன் கல்யாண் அவர்களே, நான் உங்கள் மீது மிகுந்த மரியாதை வைத்துள்ளேன். நான் பேசியது தவறாக புரிந்துகொள்ளப்பட்டிருந்தால் அதற்காக மன்னிப்பு கேட்டுக் கொள்கிறேன். வெங்கடேஷ்வராவின் பக்தனாக நமது கலாச்சாரத்தை எப்போதும் கடைப்பிடிப்பேன்” என தெரிவித்துள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT