Published : 03 Aug 2014 08:00 AM
Last Updated : 03 Aug 2014 08:00 AM

ஜிகர்தண்டா - திரை விமர்சனம்

முதல் காட்சியில் ‘மலர்ந்தும் மலராத பாதி மலர்போல’ பாட்டின் பின்னணியில் டுமீல் வெடிக்கும்போதே பசங்க என்னமோ செய்யப்போறாங்க என்பது தெரிந்துவிடுகிறது.

ஊரே நடுங்கும் அதிபயங்கர ரவுடிக்கு நடிப்புக் கலை மீது திடீர் ஆசை வருவதால் விளையும் ரகளைதான் ‘ஜிகர்தண்டா’.கார்த்திக்குக்கு (சித்தார்த்) சினிமா இயக்குநராக வேண்டும் என்பது கனவு. ரத்தம் தெறிக்கும் க்ரைம்கதையை எடுக்க ஒரு வாய்ப்பு கிடைக்கிறது. மதுரையில் உள்ள அதிபயங்கர ரவுடியான ‘அசால்ட்’ சேதுவின் (பாபி சின்ஹா) வாழ்க்கையைப் படமாக்க வேண்டுமென்று நினைக்கிறான்.

அவன் வாழ்க்கையை ஆழமாகவும் விவரமாகவும் தெரிந்துகொண்டு படமாக்க விரும்புகிறான். மதுரையில் தன் நண்பன் ஊரணியின் (கருணாகரன்) உதவியுடன் வேலையைத் தொடங்குகிறான்.

பல்வேறு முயற்சிகளுக்குப் பின் வெற்றி கிடைக்கும் நேரத்தில் சேதுவிடம் மாட்டிக்கொள்கிறான் கார்த்திக். அதிலிருந்து எப்படித் தப்பிக்கிறான், அவனுடைய சினிமா கனவு என்ன ஆயிற்று என்பதைப் பல திருப்பங்களுடன் சிரிக்கச் சிரிக்கச் சொல்லியிருக்கிறார் இயக்குநர்.

ஒவ்வொரு இயக்குநருக்கும் இரண்டாவது படம் அக்கினிப் பரீட்சை என்பார்கள். அந்தப் பரீட்சையில் வெற்றிகரமாகத் தேறியிருக்கிறார் ‘பீட்சா’வின் மூலம் கவனம் ஈர்த்த கார்த்திக் சுப்பராஜ்.

படம் எடுக்க வேண்டும் என்று தவிக்கும் இளைஞனின் கதையாகத் தொடங்கி, படமாக எடுக்கப்படும் ரவுடியின் கதையாக விரிந்து, படம் எடுக்கப்பட்ட கதையே முக்கியக் கதையாக மாறுவதுதான் திரைக்கதையின் ஆச்சரியம். மையப் பாத்திரம் என்ற ஒன்று இல்லாமல் நிகழ்வுகளை வைத்தே கதையை நகர்த்திக்கொண்டு போன அணுகுமுறையின் மூலம் வித்தியாசப்படுகிறார் கார்த்திக் சுப்பராஜ். தமிழ் சினிமாவின் ஆகிவந்த படிமங்களை அனாயாசமாக உடைத்திருக்கிறார். எல்லாப் பாத்திரங்களும் ஏதோ ஒரு விதத்தில் பகடி செய்யப்படுகின்றன. யாருக்கும் எந்தப் பீடமும் இல்லை.

படத்தின் முக்கியமான சரடு நம் கலாச்சாரத்தின் ஒரு பகுதியாகவே ஆகிவிட்ட சினிமா மோகத்தின் மீதான பகடி. ரவுடியில் தொடங்கி சாவு வீட்டில் ஒப்பாரியில் இருக்கும் பெண் வரை சினிமா, சினிமாக்காரர்கள் என்றதும் வாயைப் பிளப்பதை இயக்குநர் ‘அசால்டாக’ காட்டியிருக்கிறார்.

சில காட்சிகளை மிக நுட்பமாகக் கையாண்டிருக்கிறார். உதாரணம் கழிப்பறையில் நடக்கும் கொலை. துரோக கூட்டணியை மடக்கும் காட்சி இன்னொரு உதாரணம்.

சின்னப் பாத்திரங்கள்கூட மனதில் ஒட்டிக்கொள்கின்றன. பெட்டிக்கடை தாத்தா, நாயகனின் அம்மா, கொல்லப்பட்டவனின் மனைவி, குழந்தை... இவ்வளவு கவனம் எடுத்துக்கொண்டிருக்கும் மனிதர், கதாநாயகியையும் அவளுடைய காதலையும் இவ்வளவு மேலோட்டமாகவா கையாண்டிருக்க வேண்டும்? புடவை திருடும் கதாநாயகி தமிழுக்குப் புதுசு. ஆனால், அதைத் தாண்டி லட்சுமி மேனனுக்குப் பாவம், படத்தில் வேலையே இல்லை.

பாபி சின்ஹாவின் அபார நடிப்புக்கு சபாஷ் சொல்லியே ஆக வேண்டும். அலட்டிக்கொள்ளாத ரவுடி, பின்னாளில் உருமாறும் விதத்தைக் கச்சிதமாகவும் நுட்பமாகவும் சித்தரித்திருக்கிறார். கொடுத்த வேலையை நேர்த்தியாகச் செய்திருக்கிறார் சித்தார்த்.

நடிப்பு வாத்தியாராக வரும் சோமசுந்தரத்தின் நடிப்புக்கும் அவர் சம்பந்தப்பட்ட காட்சிகளுக்கும் அரங்கில் அடேங்கப்பா ஆரவாரம். ரசிகர்கள் கொண்டாடுகிறார்கள். நண்பனாக வரும் கருணாகரன், சேதுவின் கையாளாக வரும் ராமகிருஷ்ணன் ஆகியோர் தங்கள் நடிப்பால் படத்துக்கு மதிப்பைக் கூட்டுகிறார்கள்.

சேதுவின் நடவடிக்கைகளைக் கண்காணிக்கும் வியூகங்கள் அவ்வளவாக ஈர்க்கவில்லை. நண்பர்கள் இருவரும் எடுக்கும் ரிஸ்க் நம்பும்படி இல்லை. இரண்டாம் பாதியின் நீளத்தைக் குறைத்திருக்கலாம்.

குற்றப் பின்னணியும் நகைச்சுவையும் கலந்த திரைக்கதைக்குப் பொருத்தமான பின்னணி இசையைத் தந்திருக்கிறார் சந்தோஷ் நாராயணன். ‘கண்ணம்மா கண்ணம்மா’ பாடல் ரசிக்க வைக்கிறது. கிணற்றுக்குள் படமாக்கப்பட்டிருக்கும் ‘பாண்டிய நாட்டுக் கொடி’ குத்துப் பாட்டு ரசிகர்களை ஆட்டம்போட வைக்கிறது.

‘என்கவுன்டர்’ காட்சியிலிருந்து சேது எழுந்திருக்கும்போதே படம் முடிந்துவிடுகிறது. அதற்கு அப்புறமும் காட்சிகள் வேண்டுமா என்ன?

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x