Published : 19 Jul 2024 03:25 PM
Last Updated : 19 Jul 2024 03:25 PM

“திமுகவுக்குத்தான் வாக்களித்தேன். ஆனால்…” - ஆம்ஸ்ட்ராங் படுகொலை குறித்து பா.ரஞ்சித் 

சென்னை: “இது ஒரு எச்சரிக்கை தான். மக்கள் பிரச்சினை சரியாக வேண்டும் என்பதற்காக நான் திமுகவுக்கு தான் வாக்களித்தேன். ஆனால் பிரச்சினைகள் தொடர்ந்து கொண்டேயிருக்கிறது” என இயக்குநர் பா.ரஞ்சித் தெரிவித்துள்ளார்.

பாடகர் அறிவு எழுதி இசையமைத்துள்ள ‘வள்ளியம்மா பேராண்டி’ ஆல்பம் வெளியிட்டு விழாவுக்குப் பின் செய்தியாளர்களிடம் பேசிய இயக்குநர் பா.ரஞ்சித்திடம், பகுஜன் சமாஜ் கட்சி மாநில தலைவர் ஆம்ஸ்ட்ராங் கொலைக்கு நீதி வேண்டி நடக்கவுள்ள பேரணி குறித்து கேட்டதற்கு, “தீர்வை நோக்கி நகர்வதற்கான உந்துதலை, விழிப்புணர்வை அந்த பேரணி உருவாக்கும் என நான் நினைக்கிறேன். சட்ட ரீதியாக சரியாக விசாரித்து, சரியான குற்றவாளிகளை கண்டுபிடிக்க வேண்டும். எதன் பின்னணியில் இந்த குற்றத்தை நிகழ்த்தியிருக்கிறார்கள் என்பதை தீவிரமாக விசாரிக்க வேண்டும்.

தர்க்கபூர்வமாக அதனை நிரூபித்து, சட்டத்தின் அடிப்படையில் தண்டனை கிடைக்க வழிவகை செய்ய வேண்டும். இதில் என்ன பிரச்சினை இருக்கிறது, எனக்கு யார் மீது சந்தேகம் உள்ளது என்பதை நான் காவல்துறையிடம் கூறியிருக்கிறேன். இன்னும் 3,4 தினங்களின் உண்மையான குற்றவாளியை நெருங்கிவிடுவோம் என காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. நாங்கள் அதற்காக காத்திருக்கிறோம்.

சமூக வலைதளத்தில் நான் எழுப்பிய கேள்விகளுக்கு பிறகு அரசு சில நடவடிக்கைகள் எடுத்திருப்பதாக நான் நினைக்கிறேன். என்கவுன்ட்டரை ஆக்கப்பூர்வமான விஷயமாக நான் பார்க்கவில்லை. குற்றத்தை சரியான முறையில் நிரூபிப்பது தான் சரியானது. என்கவுன்ட்டருக்கு எப்போதும் நான் எதிரானவன்.

அதிமுக ஆட்சி இருந்தபோது பட்டியலின் மக்களின் பிரச்சினை தீராமல் இருந்தது. அப்போது திமுக இதனை கடுமையாக எதிர்த்தது. தற்போது திமுக ஆட்சிக்கு வந்த பின்பும், மீண்டும் பட்டியலின மக்கள் மீதான தாக்குதல் தொடர்ந்து நடைபெற்று வருவது விமர்சனத்துக்குரியது. அதிகாரிகளுக்கு உரிய அதிகாரம் இருக்கிறதா என்ற கேள்வியை நாம் எழுப்ப வேண்டியுள்ளது. அவர்களுக்கு உரிய அதிகாரம் கொடுத்து அதனை சட்டப்படியாக அணுக நடவடிக்கை எடுக்க வேண்டும். ஆனால் இது அரசியல் ரீதியாக கைமாறும்போது, அது வாக்காக மாறிவிடுகிறது. ஆகவே அதிகாரிகளிடம் உரிய அதிகாரம் கொடுக்கப்பட வேண்டும். இந்த கொலையில் அனைத்து கட்சியினரும் இடம்பெற்றிருப்பது அதிர்ச்சியாக உள்ளது” என்றார்.

2026-ல் உங்களின் அரசியல் நிலைப்பாடு மாறுமா? என கேட்க, “பிரச்சினைகளின் அடிப்படையில் நாம் சில கேள்விகளை எழுப்புகிறோம். அதனை தீர்த்து வைக்க முயலாத போது, நம் முடிவை மாற்ற வேண்டிய தேவை இருக்கும் என நினைக்கிறேன். இது ஓர் எச்சரிக்கை தான். மக்கள் பிரச்சினை சரியாக வேண்டும் என்பதற்காக நான் திமுகவுக்கு தான் வாக்களித்தேன். ஆனால் பிரச்சினைகள் தொடர்ந்துகொண்டே இருக்கிறது.” எனக் கூறினார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x