Published : 10 Jul 2024 03:30 PM
Last Updated : 10 Jul 2024 03:30 PM
சென்னை: “கள்ளச்சாராய மரணம், ஆம்ஸ்ட்ராங் கொலை தடுக்கப்பட்டிருக்க வேண்டியவை. அதில் மாற்றமில்லை. ஆனால், அதனாலேயே தமிழகத்தில் சட்டம் - ஒழுங்கு சீர்கெட்டு விட்டது என சொல்ல முடியாது” என இயக்குநரும், நடிகருமான அமீர் தெரிவித்துள்ளார்.
சென்னையில் நடைபெற்ற ‘யோலோ’ படத்தின் தொடக்க விழாவில் அமீர் கலந்து கொண்டார். இதையடுத்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், “போதை வஸ்துக்கள் உலகம் முழுவதும் வியாபித்துள்ளது. தமிழ்நாட்டில் மட்டும் தான் போதை வஸ்துக்கள் உள்ளது என்று கூறுவது ஒருவகையான அரசியல். இந்திய அளவில் வடமாநிலங்களில் குறிப்பாக குஜராத் போன்ற துறைமுகங்களில் டன் கணக்கில் இறக்குமதியாகிறது. அந்த வகையில் பார்க்கும்போது, தமிழகத்தில் சட்டம் - ஒழுங்கு ஓரளவுக்கு கட்டுப்பாட்டில் உள்ளதாக நாம் பார்க்கிறோம்.
நடந்துகொண்டிருக்கும் அசம்பாவிதங்கள் தவிர்த்திருக்க வேண்டியது. அதில் எந்த மாற்றுக் கருத்தும் இல்லை. கள்ளச்சாராய மரணம், ஆம்ஸ்ட்ராங் கொலை தடுக்கப்பட்டிருக்க வேண்டியவை. அதில் மாற்றமில்லை. ஆனால், அதனாலேயே தமிழகத்தில் சட்டம் - ஒழுங்கு சீர்கெட்டு விட்டது என சொல்ல முடியாது. அது தொடர்பான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. நடவடிக்கை எடுக்காவிட்டால் நாம் விமர்சிக்கலாம்.
பட்டியலின தலைவர்களுக்கு பாதுகாப்பில்லை என்று சொல்வது ஓர் அரசியல் தான். தவிர்த்து எல்லோருக்கும் பாதுகாப்பு வேண்டும். ஆம்ஸ்ட்ராங் முக்கிய தலைவர்களாக இருந்துள்ளார். அவர் பாதுகாக்கப்பட்டிருக்க வேண்டும் என்பதில் மாற்றமில்லை. நடந்து ஒரு துயர சம்பவம்தான். காவல் துறை அதிகாரிகளை மாற்றியதெல்லாம் நான் விமர்சிக்க முடியாது. அது அரசின் சரியான நடவடிக்கையாகத்தான் பார்க்கிறேன். இங்கே ராஜீவ் காந்தி, பழனிபாபா என பலரும் அரசியல் காரணங்களுக்காக கொல்லப்பட்டிருக்கிறார்கள். இது நடந்திருக்க கூடாது என்பதுதான் என்னுடைய எண்ணம்.
கள்ளச் சாராய மரணத்தில் உடனடியாக ரூ.10 லட்சம் அறிவிக்கப்பட்டதில் எனக்கும் உடன்பாடில்லை. தாய், தகப்பனை இழந்த குழந்தைகளை அரசு தன் வசப்படுத்தி இருக்க வேண்டும். ஆனால், இறந்தவர்களின் குடும்பங்களுக்கு ரூ.10 லட்சம் என்பது ஏற்புடையதல்ல. கள்ளச் சாராயம் குடித்து பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றவர்களை அரசியல் தலைவர்கள் நேரில் சென்று பார்த்ததெல்லாம் சரியான அரசியலாக எனக்குத் தோன்றவில்லை.
கள்ளச் சாராய மரணங்களை அரசு மட்டும்தான் தடுக்கும் என நாம் வேடிக்கைப் பார்த்துக் கொண்டிருக்க முடியாது. எதிர்கட்சிகள் உள்ளிட்ட அனைவருக்கும் அதனை தடுக்க வேண்டிய பொறுப்பும், அது தொடர்பான விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டிய பொறுப்பும் உண்டு” என்றார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT