Published : 24 Apr 2024 06:47 AM
Last Updated : 24 Apr 2024 06:47 AM

அபலை: ‘இந்தப் படத்தை பாராதவர்கள் கொடுத்து வைக்காதவர்களே’

சினிமாவை விளம்பரப்படுத்த இன்றைய காலகட்டத்தில் சோஷியல் மீடியாவை அதிகம் பயன்படுத்துகின்றனர். இவை ஏதும் இல்லாத ஆரம்ப காலகட்டங்களில், இனிமையான இத்தனை பாடல்களைக் கொண்ட படம், மந்திர, தந்திர காட்சிகள் நிறைந்த படம், ஹாஸ்ய படம், குடும்பச் சித்திரம் என்றெல்லாம் விளம்பரம் செய்வார்கள்.

ஆனால், புதுமுகங்கள் நடித்த ஒரு படத்துக்கு மக்களை இழுக்க வித்தியாசமான விளம்பரங்களை கையாண்டிருக்கிறார், தயாரிப்பாளர் ஒருவர். அந்தப் படம் ‘அபலை’. பி.எஸ்.வி.ஐயர் இயக்கிய இந்தப் படத்தில் வசந்தகுமார், பேபி பாப்பா, வி.ஆர்.தனம், சீதாலக்ஷ்மி முக்கிய வேடங்களில் நடித்திருந்தனர். ஸ்ரீகிருஷ்ணா பிலிம்ஸ் இதைத் தயாரித்தது.

இதன் போஸ்டரில், ‘அரிய கலை வல்லவர்கள் நடித்த படம்’ என குறிப்பிட்டிருந்த படக்குழு, அடுத்த வரியில், சோகம், அன்பு, ஹாஸ்யம், சங்கீதம், சந்தோஷம், அழகு, பக்தி, மயிர்க்கூச்செரியும் சம்பவம், உயரிய நடிப்பு எல்லாம் நிறைந்தது’ என்று கூறியுள்ளனர்.

அடுத்து ‘இந்த வருடம் முழுவதும் ‘அபலை’யை பற்றிதான் புகழ்ந்து பேசிக் கொண்டிருக்க போகிறார்கள். இந்தப் படத்தை பாராதவர்கள் கொடுத்து வைக்காதவர்களே!’ என்று ரசிகர்களுக்கு செல்ல மிரட்டல்.

இந்தப் படத்தை யாரெல்லாம் பார்க்கலாம்? ‘ஆண், பெண், கிழவர், குழந்தை, ஏழை, செல்வந்தர், எல்லோரும் கண்டு ஆனந்திக்கக் கூடிய படம்’ என்கிற அந்த போஸ்டரில், கவர்ச்சிக்கென இருக்கும் கூட்டத்துக்கும் ஒரு மெசேஜை தட்டி விட்டிருக்கிறார்கள். ‘படத்தைப் பார்க்கப்போகிறவர்கள், தியேட்டர் நாற்காலியில் அப்படியே ‘வேர்வை விடுவார்கள்’. அந்தளவு கவர்ச்சிமிக்க படம்’ என்று.

தியேட்டர் முதலாளிகளையும் போஸ்டரில் விடவில்லை. ‘அபலை என்றால் என்னவென்று நினைக்கிறீர்கள்? இதுவரை கண்டிராத வகையில் பெரும் கூட்டத்தைக் கவரவல்ல முதல் தரப்படம். இதை உங்கள் தியேட்டரில் புக் செய்துவிட்டீர்களா? இல்லையெனில் இப்போதே, இன்றே செய்யுங்கள்’ என்று ஆவேசக் கோரிக்கை வேறு.

இறுதியில், தென், வட ஆற்காடு, செங்கல்பட்டு ஏரியாக்களின் விநியோகஸ்தர் ஸி.வி.நைனார் அன் சன்ஸ் என்றும் மைசூர் சமஸ்தானம், தென் கன்னடம் ஜில்லா விநியோகஸ்தர் பாரமவுண்ட் பிக்சர்ஸ் என்றும் விளம்பரப்படுத்தி இருந்தனர். இதன் மூலம் அப்போது தமிழ்ப் படங்கள் மைசூரு மற்றும் தென் கர்நாடகா பகுதியில் வெளியாகி இருப்பது தெரிகிறது.

இவ்வளவு பில்டப் கொடுத்து விளம்பரம் செய்யப்பட்ட இந்தப் படம், இவர்கள் எதிர்பார்த்த எதையும் கொடுக்கவில்லை என்கிறார்கள். 1940-ம் ஆண்டு இதே தேதியில்தான் வெளியானது, ‘அபலை’.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x