Last Updated : 11 Aug, 2014 06:02 PM

 

Published : 11 Aug 2014 06:02 PM
Last Updated : 11 Aug 2014 06:02 PM

கத்திக்கு எதிராக 2 நாட்களில் போராட்டம் வெடிக்கும்: மாணவர் அமைப்பு எச்சரிக்கை

நடிகர் விஜய் மற்றும் இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸ் ஆகியோரது வீடு, 'கத்தி' அலுவலகம் உள்ளிட்ட இடங்களில் இன்னும் 2 நாட்களில் போராட்டம் நடத்தவிருப்பதாக தமிழீழ விடுதலைக்கான மாணவர்கள் கூட்டமைப்பு தெரிவித்தது.

ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் விஜய் படத்தை தயாரித்து வருகிறது லைக்கா நிறுவனம். இந்நிறுவனம் இலங்கை அதிபர் ராஜபக்சவின் ஆதரவு பெற்ற நிறுவனம் என்று படம் தொடங்கிய நேரத்தில் செய்திகள் வெளியாகின.

இதை தயாரிப்பு நிறுவனம் மற்றும் படத்தின் இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸ் மறுத்தனர். இதன் பிறகு அடங்கியிருந்த இந்தப் பிரச்சினை இப்போது மீண்டும் தலைதூக்க ஆரம்பித்துள்ளது.

இப்படத்திற்கு தொடர்ச்சியாக தமிழீழ விடுதலைக்கான மாணவர்கள் கூட்டமைப்பு எதிர்ப்புக் குரல் கொடுத்து வருகிறது. ஆகஸ்ட் 10-ஆம் தேதி இந்த அமைப்பு விஜய் வீடு முன்பு ஆர்ப்பாட்டம் மேற்கொள்ள இருப்பதாக செய்திகள் வெளியாகின. ஆனால், அந்த அமைப்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபடவில்லை.

மாணவர்கள் அமைப்பினர் தங்கள் முடிவை மாற்றிக் கொண்டதாக தகவல்கள் வெளியான நிலையில், அந்தக் கூட்டமைப்பின் ஒருங்கிணைப்பாளர் செம்பியன் இன்று நம்மிடம் கூறியது:

"நாங்கள் கத்தி படத்துக்கு எதிரான போராட்டத்தில் எந்த ஒரு காரணத்தைக் கொண்டும் பின்வாங்கப் போவதில்லை. தற்போது சில மாணவர்களுக்கு தேர்வு நடைபெற்று வருகிறது. இன்னும் 2 நாட்களில் அனைவருக்கும் தேர்வு முடிந்துவிடும்.

அனைத்து மாணவர்கள் அமைப்புக்களையும் ஒருங்கிணைத்து விஜய் வீடு, இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸ் வீடு, விஜய் மக்கள் இயக்கம் அலுவலகம், டி.நகரில் உள்ள லைக்கா நிறுவனத்தின் அலுவலகம், அடையாறில் உள்ள லைக்கா அலுவலகம் என அனைத்து இடங்களிலும் பெரிய அளவில் ஆர்ப்பாட்டம் மேற்கொள்ளவுள்ளோம்.

ஈழத்திற்கு எதிராக குரல் கொடுக்கும் அனைத்து அமைப்புகளிடமும் இது குறித்து பேச்சுவார்த்தை தொடங்கி இருக்கிறோம். எங்களிடம் உள்ள அனைத்து தரவுகளையும் கொண்டு தமிழகத்தின் முக்கிய தலைவர்கள், இயக்குநர்கள், நடிகர்கள் என அனைவரையும் சந்திக்க இருக்கிறோம். 'கத்தி' தொடர்பாக எங்களின் போராட்டத்தில் எந்தவித காரணம் கொண்டும் பின்வாங்க போவதில்லை" என்று அவர் கூறினார்

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x