Published : 04 Apr 2024 03:38 PM
Last Updated : 04 Apr 2024 03:38 PM

“படத்துக்கு புரமோஷன் ஏன் அவசியம்?” - இயக்குநர் ஹரி பதில்

சென்னை: “மக்களுக்கு நம்பிக்கை கொடுக்க வேண்டும். உங்களுக்காக நாங்கள் இப்படியொரு படத்தை எடுத்திருக்கிறோம் என்பதை உணர்த்த வேண்டும். இன்று மணிரத்னம், கமல்ஹாசன் இறங்கி பப்ளிசிட்டி செய்கின்றனர். அப்படிச் செய்தால் படத்தை வாங்கும் திரையரங்கத்தினருக்கு பயனளிக்கும்” என இயக்குநர் ஹரி பேசியுள்ளார்.

விஷால் நடிப்பில் உருவாகியுள்ள ‘ரத்னம்’ படம் இம்மாதம் 26-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது. இப்படத்தை விளம்பரப்படுத்தும் வேலைகளில் படக்குழு இறங்கியுள்ளது. இதற்கான விளம்பர வாகனத்தை தொடங்கி வைக்கும் நிகழ்வு சென்னையில் நடைபெற்றது.

இதில் பங்கேற்று பேசிய படத்தின் இயக்குநர் ஹரி, “என்னுடைய 17ஆவது திரைப்படம் இது. ‘சாமி’, ‘சிங்கம்’ படங்களுக்குப் பிறகு சரியான ஆக்ஷன் படத்தை மக்களுக்கு கொடுக்க வேண்டும் என நினைத்தேன். அதை இந்தப் படத்தில் சாத்தியப்படுத்தியுள்ளேன்.

இந்த தலைமுறையினருக்கு படம் பிடிக்கும் என நினைக்கிறேன். அநியாயத்தை தட்டிக் கேட்கும் படமாக இது இருக்கும். இந்த புரமோஷன் எதற்கு என்றால், தேர்தலில் பிரச்சாரம் செய்தால் தான் வாக்களிக்க வருகிறீர்கள். அதேபோல நாங்கள் இப்படியொரு படம் எடுத்திருக்கிறோம் என்றால் தான் மக்களுக்குத் தெரியும். சென்சார் முடிந்த பின் தமிழகம் முழுவதும் எல்லா இடங்களுக்கும் சென்று புரமோஷன் செய்ய உள்ளோம். விறுவிறுப்பான படமாக இருக்கும்” என்றார்.

‘ஒரு படத்துக்கு புரமோஷன் தேவையா?’ என எழுப்பப்பட்ட கேள்விக்கு, “தேர்தலில் கூட நமக்குத் தெரிந்தவர்கள் தான் நிற்கிறார்கள். ஆனால் அவர்கள் மக்களை சந்தித்தால் தான் அவருக்கான வாக்கு கிடைக்கும். அப்படித்தான் படத்தைப்பற்றி நாம் வெளியில் சொல்ல வேண்டும். மக்களுக்கு நம்பிக்கை கொடுக்க வேண்டும்.

உங்களுக்காக நாங்கள் இப்படியொரு படத்தை எடுத்திருக்கிறோம் என்பதை உணர்த்த வேண்டும். இன்று மணிரத்னம், கமல்ஹாசன் இறங்கி பப்ளிசிட்டி செய்கின்றனர். அப்படிச் செய்தால் படத்தை வாங்கும் திரையரங்கத்தினருக்கு பயனளிக்கும். அவரவருக்கு ஆயிரத்தெட்டு வேலைகள் உண்டு. இப்படியான புரமோஷன் மூலம் தான் மக்களுக்கு படம் வந்திருப்பது தெரியும். ஷூட்டிங், எட்டிங்கில் வியர்வை சிந்துவது போல புரமோஷனுக்காகவும் உழைக்க வேண்டும்” என்றார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x