Published : 24 Mar 2024 07:31 AM
Last Updated : 24 Mar 2024 07:31 AM
மூணாறு பகுதியில் தோட்டத் தொழிலாளர்களாக வேலை பார்க்கும் தமிழர்களின் மகன்களான கதிர் (ஜி.வி.பிரகாஷ்), செல்வராஜ் (ஆதித்யா பாஸ்கர்), பாண்டி (கல்லூரி வினோத்) உள்ளிட்ட பலர், பாலக்காட்டிலுள்ள அரசுக் கல்லூரியில் படிப்பதற்காகச் சேர்கின்றனர். கல்லூரி மாணவர் பேரவை தலைவர் ஆண்டனி (வெங்கடேஷ் வி.பி), அவருடன் போட்டியிட்டுத் தோற்ற சார்லி (ஷாலு ரஹீம்) ஆகியோரும், அவர்கள் தலைமையில் 2 குழுக்களாகத் திரியும் மாணவர்களும் தமிழ் மாணவர்களை கேவலமாக ராகிங் செய்தும் தாக்கியும் அடக்குமுறையில் ஈடுபடுகின்றனர். அது எந்த எல்லை வரை சென்றது, அதற்கு எதிராக தமிழ் மாணவர்கள் என்ன செய்தார்கள் என்பது கதை.
80-களில் நடந்த உண்மைக் கதையுடன் கற்பனை கலந்து சித்தரித்துள்ளதாகக் கூறும் இயக்குநர், இன்றைக்கு அதே கல்லூரி மாறியிருக்கிறதா, அடுத்துவந்த தலைமுறைகளில் ஏற்பட்ட மாற்றம் என்ன என்பதிலிருந்து கதையைத் தொடங்கி இருக்கலாம். அதைச் செய்யாமல் விட்டதால், கேரளத்தின் இன்றைய நிலையும் இதுதான் போலும் என பார்வையாளர்கள் தவறாகப் புரிந்துகொள்ள வாய்ப்பிருக்கிறது. ஆண்டனி, தமிழ்மாணவர்களை நடத்தும்விதம், தெலுங்கு வில்லன்களே தோற்கும் அளவுக்கு இருக்கிறது. ஆண்டனியாக நடித்துள்ள வெங்கடேஷ் வி.பி., முதல் பாதிப் படம் முழுக்க நடுங்க வைக்கிறார்.
அடக்குமுறையிலிருந்து மீண்டெழ, கல்லூரி மாணவர் பேரவையின் தேர்தலைத் தமிழ் மாணவர்கள் பயன்படுத்திக்கொள்ள முன்வருவதும், அதற்கான வியூகமும் நிமிர்ந்து உட்கார வைக்கின்றன. அத்தேர்தலில் அவர்களை வாழ்வா, சாவா போராட்டத்துக்குள் தள்ளும் கேரள வலதுசாரி, இடதுசாரிக் கட்சிகளின் மலினமான பிழைப்பு அரசியலின் கோர முகத்தைத் தோலுரித்துக் காட்டியிருக்கும் விதம் கெத்து. அதேநேரம், தமிழ் மாணவர்களும் வன்முறையின் வழியாகவே தங்களுக்கானத் தீர்வை நோக்கி நகர்வது பார்த்துப் பழகிய ஹீரோயிச பாணி.
சாராவுக்கும் (மமிதா பைஜு) கதிருக்கும் இடையில் காதலை வளர்ப்பதற்கான களம் அமைந்தும், அதைப் பொருட்படுத்தாமல், திரைக்கதையின் மையப் பிரச்சினையை நோக்கி கதையை நகர்த்தி இருப்பதற்காக அறிமுக இயக்குநர் நிகேஷுக்குப் பாராட்டுகள். சாராவாக வரும் மமிதா பைஜு இயல்பான நடிப்புக்கு பெயர் பெற்றபோதும், அவருக்கான ஆடுகளம் இதில் அமையாமல் போனது ஏமாற்றமே.
சண்டைக் காட்சிகள் சினிமாத்தனமாக இருப்பதால், ஹீரோவுக்கான பில்ட் அப்களாக அவை தேங்கிவிடுகின்றன. ஜி.வி.பிரகாஷ் பெரும்பாலான காட்சிகளில் ஒரேமாதிரியான முகபாவத்துடனேயே வருகிறார்.
படத்தில் பேசப்பட்டிருக்கும் அரசியலை ‘ஃபர்சென’லாக எடுத்துக்கொள்ளும் பார்வையாளர்களுக்கு இது உணர்வைக் கிளர்ந்தெழச் செய்யும் படமாகவும் இதை ஹீரோயிச சினிமாவாகப் பார்ப்பவர்களுக்கு அதேபோன்றும் தோற்றமளிக்கிறது, இப்படத்தின் இரட்டைத் தன்மை.
இந்த இரண்டில் ஏதாவது ஒன்றில் கவனம் செலுத்தி இருந்தால் இப்போராளியின் குரல் இன்னும் ஓங்கி ஒலித்திருக்கும்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT