Published : 29 Jul 2014 08:53 PM
Last Updated : 29 Jul 2014 08:53 PM
வேலையில்லா பட்டதாரித் திரைப்படத்தில் தனுஷ் புகைபிடிக்கும் காட்சி கொண்ட போஸ்டர்களுக்கு எதிராக தமிழ்நாடு புகையிலைத் தடுப்பு அமைப்பு டிஜிபி ராமானுஜத்தைச் சந்தித்து நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியுள்ளது.
இந்த விவகாரத்தில் நடவடிக்கை எடுக்கப்படும் என்று டிஜிபி ராமானுஜம் கூறியதாக, தமிழ்நாடு புகையிலைத் தடுப்பு அமைப்பு தெரிவித்துள்ளது.
தமிழ்நாடு புகையிலை தடுப்பு சங்கத்தினர் செவ்வாய்க்கிழமை டிஜிபி ராமானுஜத்திடம் ஒரு புகார் மனு கொடுத்தனர்.
அதில், "நடிகர் தனுஷ் நடித்து வெளிவந்துள்ள வேலையில்லா பட்டதாரி படத்தின் விளம்பர போஸ்டர்கள் சென்னை நகரில் பல இடங்களில் ஒட்டப்பட்டுள்ளன. இதில் பல போஸ்டர்களில் தனுஷ் புகைப்பிடிக்கும் காட்சிகள் பெரிய அளவில் வைக்கப்பட்டுள்ளன. பள்ளிகள் அருகிலும் இந்த போஸ்டர்கள் உள்ளன. ஆனால் அப்படி ஒரு காட்சி திரைப்படத்தில் வரவில்லை. தேவையில்லாத விளம்பரத்திற்காக வைக்கப்பட்டுள்ள இந்த போஸ்டர்களை அகற்ற வேண்டும்.
புகைப்பிடிக்கும் காட்சிகளை பெரிது படுத்தக் கூடாது. அப்படி காட்சிகள் வைக்கும்போது 'புகைப்பிடிப்பது உடல் நலத்திற்கு கேடு' என்ற வாசகங்கள் இடம்பெற வேண்டும் என்று சட்டம் உள்ளது. ஆனால் அவை அனைத்தையும் மீறி தனுஷ் படத்தின் போஸ்டர்கள் உள்ளன. எனவே இந்த போஸ்டர்களை அகற்ற வேண்டும். போஸ்டர்கள் ஒட்டியவர்கள் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்று அந்தப் புகார் மனுவில் கூறப்பட்டுள்ளது.
இந்தப் புகாரைப் பொறுமையாகக் கேட்ட டிஜிபி ராமானுஜம், இந்த விவகாரத்தில் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று தங்களிடம் உறுதி அளித்ததாக தமிழ்நாடு புகையிலைத் தடுப்பு அமைப்பினர் தெரிவித்துள்ளனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT