Published : 02 May 2017 07:33 AM
Last Updated : 02 May 2017 07:33 AM

உலக அளவில் 3 நாட்களில் ‘பாகுபலி 2’ வசூல் ரூ.500 கோடியை தாண்டியது

உலகளவில் அனைத்து மொழிகளையும் சேர்ந்து, 3 நாட்களில் 'பாகுபலி 2' படத்தின் வசூல் 500 கோடியைத் தாண்டியுள்ளது.

இந்தியளவில் பெரும் எதிர்பார்ப்போடு, ஏப்ரல் 28-ம் தேதி வெளியான படம் 'பாகுபலி 2'. விமர்சன ரீதியாகவும், மக்களிடையேயும் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது. இந்தியளவில் முதல் நாளில் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் மற்றும் இந்தி என அனைத்து மொழிகளையும் சேர்ந்து, பங்கு தொகை போக 121 கோடி வசூல் செய்துள்ளது. முதல் நாளில் இந்தியாவில் வேறு எந்தவொரு நடிகரின் படமும் இந்தளவுக்கு வசூல் செய்ததில்லை.

தொடர்ச்சியாக மக்களின் கூட்டம் அதிகமாகவே இருப்பதால், இன்னும் பல்வேறு சாதனைகளை படைக்கும் என திரையுலக வர்த்தக நிபுணர்கள் கணித்திருந்தனர். அதன்படியே 3 நாட்களில் 520 கோடி வசூல் செய்துள்ளது. இதில் விநியோகஸ்தர்கள் மற்றும் திரையரங்கு உரிமையாளர்களின் பங்கு தொகை போக தயாரிப்பாளருக்கு மீதமுள்ள பணம் கிடைக்கும். மிகப் பிரம்மாண்டமான வசூலால் படக்குழு மிகவும் மகிழ்ச்சியில் இருக்கிறது.

அமெரிக்கா, ஆஸ்திரேலியா, நியூசிலாந்து என பல நாடுகளில் வசூலைக் குவித்து வருகிறது 'பாகுபலி 2'. அமெரிக்காவில் மட்டும் 2 நாட்களில் சுமார் 50 கோடி வசூலைத் தாண்டியுள்ளது குறிப்பிடத்தக்கது.

'பாகுபலி 2' பார்த்துவிட்டு ரஜினி, இயக்குநர் ஷங்கர், மத்திய அமைச்சர் வெங்கய்யா நாயுடு மற்றும் முன்னணி தெலுங்கு திரையுலக பிரபலங்கள் பலரும் வாழ்த்து தெரிவித்துள்ளார்கள். தமிழகத்தில் மே 5ம் தேதி வெளியாகவிருந்த படங்கள், தங்களுடைய வெளியீட்டை ஒத்திவைக்கலாமா என்று ஆலோசித்து வருகிறார்கள்.

'பாகுபலி 2' படத்துக்கு மட்டும் சென்னையில் உள்ள திரையரங்குகளில் அனைத்து மொழிகளையும் சேர்த்து 435 காட்சிகள் திரையிடப்பட்டு வருகிறது. மற்ற படங்கள் அனைத்தும் சேர்த்து சுமார் 50 காட்சிகள் தான் திரையிடப்பட்டு வருகிறது.

தொடர்ச்சியாக பிரம்மாண்ட வசூலைக் குவித்து வருவதால், இந்தியளவில் 1000 கோடி வசூலைத் தாண்டிய முதல் படமாக 'பாகுபலி 2' அமையும் என்று வர்த்தக நிபுணர்கள் கணித்திருக்கிறார்கள்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x