Published : 15 Dec 2016 06:31 PM
Last Updated : 15 Dec 2016 06:31 PM
மாட்டிறைச்சி தடை விவகாரம் தொடர்பாக, மத்தியில் ஆளும் பாஜக அரசை பவன் கல்யாண் விமர்சித்துள்ளார்.
தெலுங்கு திரையுலகின் முன்னணி நடிகரான பவன் கல்யாண், 'ஜனசேனா' கட்சியைத் தொடங்கி நடத்தி வருகிறார். இக்கட்சி 2014-ம் ஆண்டு பாராளுமன்ற தேர்தலில் பாஜக-வை ஆதரித்தது. தற்போது அக்கட்சியின் தலைவரான பவன் கல்யாண் தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டிருக்கும் கருத்துகளைப் பார்க்கும் போது, பாஜக கூட்டணி குறித்து அவர் அதிருப்தியில் இருப்பது தெளிவாகியுள்ளது.
மத்திய அரசு மீது 5 சர்ச்சையான கருத்துகளை தெரிவித்துள்ளது ஜனசேனா கட்சி. இது குறித்து பவன் கல்யாண், "2014 தேர்தலில், பாஜக - தெலுங்கு தேசம் கூட்டணியை, ஆந்திராவிலும், தெலங்கானாவிலும், பாஜகவை கர்நாடகாவிலும் ஆதரித்த ஜனசேனா கட்சி, பாஜக தலைமையிலான மத்திய அரசுக்கு, பின்வரும் சர்ச்சைகள் பற்றி கூற விரும்புகிறது.
1. மாட்டிறைச்சி தடை
2. ரோஹித் வெமூலா தற்கொலை
3. தேசப்பற்று
4. பண மதிப்பு நீக்கம்
5. ஆந்திராவுக்கு சிறப்பு அந்தஸ்து
மேற்சொன்ன சர்ச்சைகள் குறித்து, பல அறிஞர்கள், மூத்த அரசியல் தலைவர்கள், அனுபவமுள்ள பத்திரிகையாளர்கள், முக்கியமாக பாஜகவை நம்பி வாக்களித்த அடிமட்ட மக்கள் உள்ளிட்டோரிடம் சேகரிக்கப்பட்ட முக்கியக் குறிப்புகளை இங்கே தருகிறேன்.
1. இது மாட்டிறைச்சி உண்ணும் பிரிவினரிடையே பயத்தையும், மாடுகளை வழிபடும் பிரிவினரிடையே அனுதாபத்தையும் உருவாக்கும், பிரிவினையைத் தூண்டும் அரசியல் தந்திரமே. அவர்கள் நோக்கம் உண்மையாக இருந்திருந்தால், இந்தத் தடையை பாஜக ஆளும் கோவா மாநிலத்தில் விதித்திருக்க வேண்டும்.
மேலும், பாஜக, அவர்கள் கட்சித் தொண்டர்கள், எம்பிக்கள், மந்திரிகள், மாட்டுத் தோலால் செய்யப்படும் காலணி, பெல்ட் ஆகியவற்றை அணியக் கூடாது என தடை செய்திருக்கலாம்.
கடைசியாக, மாடுகளைப் பாதுகாக்க, பாஜக கட்சியைச் சேர்ந்த ஒவ்வொருவரும், ஒரு மாட்டினை தத்தெடுக்கும் படி புதிய திட்டத்தை கொண்டு வந்திருக்கலாம். இவற்றைச் செய்திருந்தால், மாட்டிறைச்சிக்கான தடைக்குத் தேவையான தீவிரம் வந்திருக்கும்" என்று தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்திருக்கிறார் பவன் கல்யாண்.
தற்போது மாட்டிறைச்சி தடை குறித்து மட்டுமே பவன் கல்யாண் விமர்சனம் தெரிவித்துள்ளார். அடுத்தடுத்து மற்ற நான்கு விஷயங்கள் குறித்து விமர்சனம் செய்ய உள்ளதாக பவன் கல்யாண் குறிப்பிட்டுள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT