Published : 31 Jul 2014 07:12 PM
Last Updated : 31 Jul 2014 07:12 PM
ராம்சரண் நடிப்பில் வெளியான 'மகதீரா' திரைப்படம் வெளியாகி 5 ஆண்டுகள் ஆனதை முன்னிட்டு ரசிகர்களிடம் இயக்குநர் ராஜமெளலி நெகிழ்ச்சி தெரிவித்துள்ளார்.
ராம்சரண், காஜல் அகர்வால் உள்ளிட்ட பலர் நடிப்பில் ஜூலை 30, 2009 அன்று வெளியான படம் 'மகதீரா'. ராஜமெளலி இயக்கத்தில் வெளியான இப்படம் மாபெரும் வரவேற்பை பெற்றது. மலையாளத்தில் 'தீரா', தமிழில் 'மாவீரன்' என்ற பெயரிலும் டப்பிங் செய்யப்பட்டு வரவேற்பைப் பெற்றது. பெங்காலியில் 'யோதா' என்ற பெயரில் ரீமேக் செய்யப்பட்டது.
'மகதீரா' வெளியாகி 5 ஆண்டுகள் ஆனதையொட்டி பல்வேறு ரசிகர்களும் இயக்குநர் ராஜமெளலிக்கு அவரது ட்விட்டர் தளத்தில் வாழ்த்து தெரிவித்தார்கள். இதற்கு பதிலளிக்கும் வகையில், "மகதீரா வெளியாகி 5 ஆண்டுகள் ஆனதையொட்டி ட்விட்டர் தளத்தில் குவித்துள்ள ட்வீட்களைப் பார்க்கிறேன். மக்கள் நினைவில் இருக்கும் ஒரு திரைப்படத்தில் நாங்களெல்லாம் பங்காற்றியதை பெரிய ஆசிர்வாதமாகப் பார்க்கிறேன்.
சிரஞ்சீவி அவர்களின் பாரட்டையும், முதன்முதலாக கதை கேட்டு முடித்த பின், நடிகர் ஸ்ரீஹரியின் கண்ணில் இருந்த ஆனந்தக் கண்ணீரையும் மறக்கவே முடியாது. இந்தப் படம் எடுக்க இரண்டு ஆண்டுகள் ஆகியிருக்கலாம். ஆனால் இது உங்கள் மனதில் நீண்ட நாட்களாக உங்கள் மனதில் உருவாகி உள்ளது என்பது சக கலைஞனாக எனக்குத் தெரிகிறது என பவன் கல்யாண் சொன்னதையும் மறக்க இயலாது.
ரஜினி அவர்களின் கையெழுத்து மட்டுமே நினைவில் உள்ளது. என்ன சொன்னார் என நினைவில் இல்லை ஏனென்றால் நான் அப்போது சந்தோஷத்தில் மிதந்து கொண்டிருந்தேன்” என இயக்குநர் ராஜமெளலி தனது ட்விட்டர் பக்கத்தில் கூறியுள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT