ஓடிடியில் வெளியாகும் டக் ஜெகதீஷ்


ஓடிடியில் வெளியாகும் டக் ஜெகதீஷ்

நானி நடிப்பில் உருவாகியுள்ள 'டக் ஜெகதீஷ்' திரைப்படம் ஓடிடியில் வெளியாகவுள்ளது.

சிவா நிர்வானா இயக்கத்தில் நானி, ரீத்து வர்மா, ஐஸ்வர்யா ராஜேஷ் உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகியுள்ள படம் 'டக் ஜெகதீஷ்'. இந்தப் படத்தின் படப்பிடிப்பு முழுமையாக முடிவடைந்து, வெளியீட்டுக்குத் தயாராகவுள்ளது. சாஹூ மற்றும் ஹரிஷ் இருவரும் தயாரித்துள்ள இந்தப் படத்துக்கு தமன் இசையமைப்பாளராகப் பணிபுரிந்துள்ளார்.

முதலில் இந்தப் படத்தை ஓடிடியில் வெளியிடப் பேச்சுவார்த்தை நடத்தினார்கள். ஆனால், திரையரங்குகள் திறக்கப்பட்டுள்ளதால் திரையரங்க வெளியீட்டுக்குத் திட்டமிடப்பட்டு வந்தது. ஆனால், தற்போது மீண்டும் ஓடிடியிலேயே வெளியிடத் தயாரிப்பாளர்கள் முடிவு செய்துள்ளனர்.

தெலுங்குத் திரையுலகில் டிக்கெட் கட்டணம் தொடர்பாகத் தயாரிப்பாளர்கள் - திரையரங்கு உரிமையாளர்கள் ஆகியோருக்கு இடையே இந்த மாதக் கடைசியில் பேச்சுவார்த்தை நடைபெறவுள்ளது. அதுவரை சிறுபட்ஜெட் படங்கள் மட்டுமே வெளியிடப்பட்டு வருகின்றன. இதனால், 'டக் ஜெகதீஷ்' படத்தினை அமேசான் ப்ரைம் ஓடிடியில் வெளியிட முடிவு செய்துவிட்டார்கள் தயாரிப்பாளர்கள்.

இந்த முடிவினால் நானி கடும் அதிருப்தியில் இருப்பதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. ஏனென்றால், சமீபத்தில் 'திம்மராசு' படத்தை விளம்பரப்படுத்தும் நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டார். அதில் திரையரங்குகளில் படங்கள் வெளியிடுவது குறித்து அற்புதமாகப் பேசியிருந்தார். இந்தப் பேச்சுக்குப் பலரும் பாராட்டு தெரிவித்திருந்தார்கள். ஆனால், இப்போது அவருடைய படமே ஓடிடியில் வெளியாகவுள்ளது குறிப்பிடத்தக்கது.

முன்னதாக, கரோனா முதல் அலையின்போது நானி நடிப்பில் உருவான 'வி' படமும் ஓடிடியில் வெளியானது நினைவுகூரத்தக்கது.

FOLLOW US

WRITE A COMMENT

x