பெரும் எதிர்பார்ப்புக்குரிய 'மின்னல் முரளி' திரைப்படம் ஓடிடியில் வெளியாகவுள்ளதால் விநியோகஸ்தர்கள் அதிர்ச்சியில் இருக்கிறார்கள்.
பாசில் ஜோசப் இயக்கத்தில் டோவினோ தாமஸ் நடிப்பில் உருவாகி வரும் படம் 'மின்னல் முரளி'. இதில் குரு சோமசுந்தரம், அஜு வர்கீஸ், ஹரிஸ்ரீ அசோகன் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். சூப்பர் ஹீரோ பாணியில் உருவாகி வரும் மலையாளப் படம் இது.
இந்தப் படம் பெரும் பொருட்செலவில் தயாராகி வருகிறது. ஒரே சமயத்தில் தமிழ், மலையாளம், தெலுங்கு, கன்னடம், இந்தி ஆகிய மொழிகளில் வெளியிட இருந்தது படக்குழு. சமீபத்தில் வெளியிடப்பட்ட இந்தப் படத்தின் டீஸருக்கு இணையத்தில் நல்ல வரவேற்பு கிடைத்தது. 'மின்னல் முரளி' படத்தின் பொருட்செலவை முன்வைத்து, இந்தப் படத்தைத் திரையரங்கில்தான் வெளியிடுவார்கள் என்று நம்பினார்கள்.
ஆனால், தற்போது 'மின்னல் முரளி' படம் நேரடியாக ஓடிடியில் வெளியாகவுள்ளது. இதன் உரிமையைப் பெரும் விலை கொடுத்து வாங்கியுள்ளது நெட்ஃப்ளிக்ஸ் ஓடிடி நிறுவனம். செப்டம்பரில் படத்தை வெளியிட முடிவு செய்துள்ளார்கள்.
திரையரங்குகள் திறக்கப்பட்டால் மோகன்லால் நடித்துள்ள 'மரைக்காயர்', 'மின்னல் முரளி' ஆகிய படங்கள் மக்களைத் திரையரங்குகளை நோக்கி வரவைக்கும் என்று விநியோகஸ்தர்கள் நம்பினார்கள். இதில் 'மின்னல் முரளி' திரைப்படம் ஓடிடி வெளியீட்டைத் தேர்ந்தெடுப்பதிருப்பதால் விநியோகஸ்தர்கள் அதிர்ச்சியில் இருக்கிறார்கள்.
ஓணம் பண்டிகையை முன்னிட்டு 'மின்னல் முரளி' ட்ரெய்லர் வெளியாகவுள்ளது. அதில் ஓடிடி வெளியீடு குறித்து அதிகாரபூர்வமாக அறிவிக்கவுள்ளது படக்குழு. ஓடிடியிலும் ஒரே சமயத்தில் அனைத்து மொழிகளிலும் வெளியிடவுள்ளார்கள்.
WRITE A COMMENT