Published : 20 Oct 2019 03:44 PM
Last Updated : 20 Oct 2019 03:44 PM

இந்தி நடிகர்களுக்கு மட்டுமே முன்னுரிமை; எங்களுக்கு இல்லையா? - பிரதமர் மோடிக்கு ராம்சரண் மனைவி கேள்வி

இந்தி நடிகர்களுக்கு மட்டுமே முன்னுரிமை கொடுக்கப்பட்டு தென்னிந்தியா சினிமா புறக்கணிக்கப்படுவதாக பிரதமர் மோடிக்கு தெலுங்கு நடிகர் ராம்சரணின் மனைவி முறையிட்டுள்ளார்.

பிரதமர் நரேந்திர மோடியுடன் பாலிவுட் நடிகர்கள் மற்றும் திரைப்பட இயக்குநர்கள் இணைந்து மகாத்மாவின் 150 வது ஆண்டு கொண்டாட்டத்தில் நேற்று காந்திஜிக்கு சிறப்பு அஞ்சலி செலுத்தினர்.

நிகழ்ச்சியின்போது, மகாத்மா காந்தியின் 150 வது பிறந்த நாளை முன்னிட்டு #ChangeWithin என்ற 100 விநாடி கலாச்சார வீடியோ ஒன்றை பிரதமர் வெளியிட்டார்.

காந்தியின் 150 ஆண்டுகளைக் கொண்டாடும் விதமாக, புதுடெல்லியில் நடைபெற்ற இந்த விழாவுக்காக, திரைப்பட இயக்குநர் ராஜ்குமார் ஹிரானி எட்டு முன்னணி திரை நட்சத்திரங்களை சிறப்பு அஞ்சலிக்காக அழைத்து வந்தார்.

இந்த நிகழ்ச்சி பிரதமர் தனது அதிகாரபூர்வ இல்லத்தில் நடைபெற்றது.

பாலிவுட் பிரமுகர்கள் பங்கேற்ற மகாத்மா காந்தியின் 150வது ஆண்டுவிழா கூட்டத்தில், சோனம், கங்கனா, ஹிரானி, திரைப்பட இயக்குநர்கள் ராஜ்குமார் சந்தோஷி, அஸ்வினி ஐயர் திவாரி, நிதேஷ் திவாரி மற்றும் தயாரிப்பாளர்கள் ஏக்தா கபூர், போனி கபூர் மற்றும் ஜெயந்திலால் கடா உள்ளிட்டோரும் கலந்துகொண்டனர்.

இந்த நிகழ்வு குறித்து பிரதமர் மோடி தனது ட்விட்டர் பக்கத்தில், “பாலிவுட்டின் முன்னணி திரைப்பட பிரமுகர்கள் மற்றும் முக்கிய கலாச்சார முகங்களுடனான சந்திப்பு பலனளித்தது. மகாத்மா காந்தியின் எண்ணங்களை சினிமா மூலம் பரப்புவது, காந்தி ஜியின் கொள்கைகளை இளைஞர்கள் நன்கு அறிந்திருக்கிறார்கள் என்பதை உறுதிப்படுத்துவது... போன்ற பரந்த அளவிலான பொருள்களில் நாங்கள் எண்ணங்களை பரிமாறிக்கொண்டோம்.” என்று கூறியிருந்தார்.

இந்த நிலையில் இந்த சந்திப்பு குறித்து தெலுங்கு நடிகர் ராம்சரணின் மனைவி உபாசனா தனது ட்விட்டர் பக்கத்தில் கருத்து தெரிவித்துள்ளார் அதில் அவர் கூறியிருப்பதாவது:

அன்புள்ள நரேந்திர மோடி அவர்களே.. தென்னிந்தியாவில் இருக்கும் நாங்கள் உங்களை மிகவும் மதிக்கிறோம். உங்களை பிரதமராக அடைந்ததற்காக மிகவும் பெருமை கொள்கிறோம். ஆனால் பெரும் ஆளுமைகள் மற்றும் கலாச்சார அடையாளங்களின் பிரதிநிதித்துவம் இந்தி நடிகர்களுக்கு மட்டுமே கொடுக்கப்பட்டு, தென்னிந்திய சினிமா முற்றிலும் புறக்கணிக்கப்படுவதாக நாங்கள் உணர்கிறோம். நான் என்னுடைய உணர்வுகளை வலியோடு பதிவு செய்கிறேன், இந்த கருத்தை ஆக்கபூர்வமான முறையில் கூறுகிறேன். அவ்வாறே எடுத்துக் கொள்ளப்படும் என்று நம்புகிறேன்.”

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x