Published : 18 Oct 2019 11:06 AM
Last Updated : 18 Oct 2019 11:06 AM

நிறைய வலியை அனுபவித்தோம்: விவாகரத்து குறித்து மஞ்சு மனோஜ் விளக்கம்

மனைவி ப்ரணீதி ரெட்டியை விவாகரத்து செய்துவிட்டதாக, நடிகர் மஞ்சு மனோஜ் தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

தெலுங்குத் திரையுலகின் முன்னணி நடிகராக வலம் வருபவர் மோகன் பாபு. அவரது மகன் மஞ்சு மனோஜ். இவரும் தெலுங்குத் திரையுலகில் நடிகராக வலம் வருகிறார். சில மாதங்களாகத் திரையுலகிலிருந்து விலகியே இருந்தார். தனியாக மலைகளுக்குச் சுற்றுப்பயணம் செய்து அதன் புகைப்படங்களை மட்டும் இணையத்தில் பகிர்ந்து வந்தார்.

தற்போது அவரது தனிமைக்கான காரணத்தை தனது ட்விட்டர் பக்கத்தில் கடிதம் ஒன்றின் மூலமாக அறிவித்துள்ளார் மஞ்சு மனோஜ். அதில், ''எனது தனிப்பட்ட வாழ்க்கை குறித்தும், தொழில் குறித்தும் சில விஷயங்களைப் பகிர விரும்புகிறேன். கனத்த மனதோடு எனக்கு விவாகரத்து முடிந்துவிட்டது என்பதைத் தெரிவித்துக்கொள்கிறேன். அழகான, நன்றாகப் போற்றிய ஒரு உறவை நாங்கள் அதிகாரபூர்வமாக முடிவுக்குக் கொண்டுவந்துவிட்டோம்.

எங்களுக்குள் வேறுபாடுகள் இருந்தன. நிறைய வலியை அனுபவித்தோம். எங்களுக்குள் நிறைய யோசித்த பின் நாங்கள் தனித்தனியாக வாழ முடிவெடுத்துள்ளோம். நாங்கள் எப்போதுமே ஒருவர் மீது ஒருவர் நல்ல மரியாதையும், அக்கறையும் கொண்ட இரண்டு தனி நபர்களே. நீங்கள் அனைவரும் எங்கள் முடிவுக்கு ஆதரவு கொடுத்து, எங்கள் அந்தரங்கத்துக்கு மதிப்பு கொடுப்பீர்கள் என்று எதிர்பார்க்கிறேன். அதற்கு நன்றி.

எனது சிந்தனை சரியாக இல்லை என்பதால் என்னால் வேலையில் கவனம் செலுத்த முடியவில்லை. நடிக்க முடியவில்லை. நிறைய விஷயங்களைக் கடந்து வந்திருக்கிறேன். எனது குடும்பம், நண்பர்கள், குறிப்பாக நான் நடிக்காத நேரத்திலும் எனக்கு ஆதரவாக இருந்த ரசிகர்களின் உதவி இல்லாமல் என்னால் தாக்குப் பிடித்திருக்க முடியாது.

என் மோசமான நேரங்களில் எனக்கு ஆதரவு கொடுத்த ஒவ்வொருவருக்கும் நான் கடன் பட்டிருக்கிறேன். இப்போது நான் மீண்டும், எனக்குத் தெரிந்த, விரும்பும் ஒரே விஷயத்தை மீண்டும் செய்யப்போகிறேன். படங்களில் நடித்து எனது ரசிகர்களை திருப்திப்படுத்தும் நிலையில் இருப்பேன்” என்று தெரிவித்துள்ளார் மஞ்சு மனோஜ்.

2015-ம் ஆண்டு மே மாதம் தன் காதலியான ப்ரணீதி ரெட்டியைத் திருமணம் செய்துகொண்டார் மஞ்சு மனோஜ். அவர்களது திருமணம் தற்போது விவாகரத்து பெற்று முடிவுக்கு வந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x