Published : 23 Sep 2019 02:21 PM
Last Updated : 23 Sep 2019 02:21 PM
மலையாளப் படம் ஒன்றின் தயாரிப்பாளர்கள், தங்கள் படத்தின் பொது விளம்பரங்களில் பிவிசி ஃப்ளக்ஸ் போர்டுக்குப் பதிலாக துணியில் அச்சடித்து அதை விளம்பரமாக வைக்க முடிவெடுத்துள்ளனர்.
சென்னையில் விளம்பர பேனர் விழுந்து சுபஸ்ரீ என்பவர் மரணமடைந்ததைத் தொடர்ந்து பல தரப்பிலிருந்தும் இது போன்ற விதிமுறைகளுக்குப் புறம்பான ஃப்ளக்ஸ் போர்டு, பேனர் விளம்பரங்கள் வைக்கக்கூடாது என்று குரல்கள் எழுந்துள்ளன. அரசியல் தலைவர்கள், சினிமா நட்சத்திரங்கள் பலரும் தங்கள் தொண்டர்கள், ரசிகர்களிடம் இனி ஃப்ளக்ஸ் போர்டு விளம்பரங்களை வைக்கக்கூடாது என்று கூறியுள்ளனர்.
அண்மையில், கேரளாவில், மம்மூட்டி திரைப்படத் தயாரிப்பாளர் ஒருவரும், தன் படத்துக்கு ஃப்ளக்ஸில் விளம்பரங்கள் வைக்கப்பட மாட்டாது என்று அறிக்கை வெளியிட்டிருந்தார். தற்போது இன்னும் ஒரு படி மேலே போய், ’ப்ரணய மீனுகளூடே கடல்’ என்ற படத்தின் தயாரிப்பாளர்கள், சுற்றுச்சூழலுக்கு உகந்தவாறு துணியில் அச்சடித்த விளம்பரத்தை தங்கள் படத்துக்காகப் பயன்படுத்தவுள்ளனர்.
தங்கள் படம் பெரிய நட்சத்திரம் நடிக்கும் படமாக இல்லையென்றாலும் அதிக பணம் செலவழித்து இப்படி விளம்பரம் செய்வதாகவும், பொறுப்பாக, சுற்றுச்சூழலுக்கு உகந்த வண்ணம் இருக்கவே இப்படி முடிவெடுத்ததாகவும் தயாரிப்பாளர் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
காப்ரி ஜோஸ், ரிதி குமார் உள்ளிட்ட புதுமுகங்கள் நடித்திருக்கும் இந்தப் படத்தை கமல் இயக்கியுள்ளார். வரும் அக்டோபர் 4-ம் தேதி அன்று இந்தப் படம் வெளியாகவுள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT