Published : 20 Jul 2015 02:56 PM
Last Updated : 20 Jul 2015 02:56 PM
பாகுபலி படத்தை பார்த்து வியந்து, ரசித்து, சிலாகித்த நமக்கு கோப உணர்வு மட்டும் வராதது ஏன்? கோபம் ஏன் வரவேண்டும் எனக் கேட்கிறீர்களா? நாயகன் - நாயகிக்கு இடையேயான காமத்தின் வெளிப்பாடு இப்படத்தில் உருவகப்படுத்தப்பட்டிருக்கும் விதமே கோபத்துக்கான காரணமாக இருந்திருக்க வேண்டும். ஆனால் யாருக்கும் அப்படி ஒரு கோபம் வரவில்லை.
எஸ்.எஸ்.ராஜமெளலி இயக்கத்தில் பிரபாஸ் - தமன்னா பாட்டியா நடிப்பில் வெளியாகி இந்திய அளவில் வசூலை வாரிக்கட்டிக் கொண்டிருக்கும் பாகுபலியில் உள்ள காட்சிதான் அது.
அவந்திகா, துணிச்சல்மிகு போராளி. ஒரு நாள் ஏரிக்கரையில் அவள் கண் அயர அவளுக்குத் தெரியாமலேயே அவளது மெல்லிய கைகளில் ஓர் அந்நியன் ஓவியம் வரைந்து செல்கிறான். தனக்குத் தெரியாமல் தன் கையில் ஓவியம் வரைந்தது யார் எனக் கண்டுபிடிக்க அவந்திகா எத்தனிக்கிறாள். தோழியுடன் சேர்ந்து வியூகம் வகுத்து வில், அம்புடன் மரத்தின் மீது ஏறிக் காத்திருக்கும் அவள் மீது பாம்பை ஏவிவிட்டு அவளை சில விநாடிகள் உறையச் செய்கிறான் அந்த அந்நியன். பின்னர் மீண்டும் அவள் மீது ஓர் ஓவியம் தீட்டுகிறான்.
இரண்டாவது முறையாக தனக்குத் தெரியாமலேயே நேர்ந்த அந்த சம்பவத்தால் வெகுண்டெழும் அவந்திகா, அந்நியனைத் தேடிச் செல்கிறாள். அவனைச் சந்திக்கிறாள். அந்த முதல் சந்திப்பு எப்படியெல்லாம் மாறுகிறது தெரியுமா?
இச்சையை வெளிப்படுத்தும் ஒரு நடனம். அவந்திகாவை இடுப்பை பிடித்து வலுக்கட்டாயமாக இழுக்கிறான். அவளது கட்டிய கூந்தலை கலைக்கிறான். அவள் உடுத்தியிருந்த போராளிக்கான உடையை மெல்ல மெல்ல அவிழ்க்கிறான். அவளது பெண்மை புலப்படும் அளவுக்கு அவளது உடைகளை செதுக்குகிறான். இயற்கையாக கிடைக்கும் சாயங்களை சேகரித்து கண்ணுக்கு மை தீட்டுகிறான். உதட்டுக்குச் சாயம் பூசுகிறான். அவளை பெண்மை செய்கிறான். தன் உருமாற்றத்தை அவள் காணும்படிச் செய்கிறான். கண்ணாடியாக மாறிய நீர் வழிந்தோடலில் அவந்திகா ஜொலிக்கிறாள். நாணம் ததும்ப அவந்திகா அவன் கைகளில் தஞ்சமாகிறாள். அவன் இறுக்கத்தில் அயர்ந்து போகிறாள்.
அன்புடையீர், இப்படித்தான் ஒரு பெண் பழக்கப்படுத்தப்படுகிறாள் ஒரு விலங்கைப் போல். (பாராட்டுகள்!)
பாகுபலி, கண்களுக்கு விருந்து படைக்கும் பிரம்மாண்ட படைப்பு என்பதில் ஐயமில்லை. இப்படத்தில் இதிகாசப் படைப்புகளிலில் இருந்து எடுத்தாளப்பட்ட குறிப்புகள் செரிந்து கிடக்கிறது. இப்படத்தின் வீச்சு அதிகம். ஆனால், அதுவே இப்போது ஆபத்தாக இருக்கிறது. அவந்திகா அவிழ்க்கப்பட்ட விதம் யாரையும் நெருடவில்லை என்பது அபாயகரமானது. அப்படியென்றால் இதை பெரும்பாலானோர் ஆதரிக்கின்றனர் என்பதற்கு அடையாளம். ஒரு நாகரிகமற்ற, சற்றும் அறிவுசாராத, கற்பனைவளம் அற்ற, ஜனரஞ்சகமாக இல்லாத ஒரு படைப்பில் இத்தகைய காட்சி இருந்திருந்தால் அதன் வீச்சு குறைவுதான். ஆனால், அனைவரும் போற்றும் பிரம்மாண்ட படைப்பில் இத்தகைய காட்சி இடம் பெற்றிருப்பது என்ன மாதிரியான கருத்தை எடுத்துச் செல்லும்.
ஓர் ஆபாசமான காம வெளிப்பாட்டை அது பகிரங்கமான காமம் என்பதை உணர முடியாத அளவுக்கு கண்கவர் பின்புலனிலும் மெல்லிசையிலும் மறைத்திருக்கின்றனர். 'குதர்க்கமாக குற்றம் கண்டுபிடிப்பதை நிறுத்து', 'உனக்கு உன்னதமான காதல் உணர்வே இல்லை', 'விடு, ரிலாக்ஸ்... இது வெறும் திரைப்படம்தான்' என்றெல்லாம் சிலர் எதிர்வினையாற்றக் கூடும்.
ஆனால், அவந்திகா அவிழ்க்கப்பட்ட விதத்தை அப்படியே கண்டும்காணாமல் செல்ல முடியாது. பாலுறவுகளில் ஒருமித்த சம்மதம் வேண்டும் என்பதையே புரிந்துகொள்ளாத சமூகத்தில் இத்தகைய அபத்தங்கள் தவிர்க்கப்பட வேண்டும்.
பாகுபலியின் இச்சையாட்டம் சொல்வதெல்லாம் இதுவே, "ஒரு பெண்ணுக்கு தெரியாமல் அவளைச் சீண்டுவது சரியே, அவள் விரும்பாவிட்டாலும் அவள் மீது நீ ஆதிக்கம் செலுத்தலாம். ஏனென்றால், பாலுறவில் அது இயல்பானது"
அவந்திகா - பாகுபலியின் இச்சை ஆட்டத்தை ரசித்தவரா நீங்கள்? அப்படியென்றால் உங்கள் மனமாற்றத்துக்கு நான் உதவுகிறேன். அதற்கு அனுமதியுங்கள்.
அந்தக் காட்சியில் தமன்னாவுடன் ஆட்டம் போட்டது பிரபாஸாக இல்லாமல் வில்லன் நடிகர் சக்திகபூராக இருந்திருந்தால்கூட அந்தச் செயல்கள் உங்களை வருந்தவைத்திருக்குமா?
அதேபோல் தனு வெட்ஸ் மனு என்ற இந்தி திரைப்படத்தில் ஒரு காட்சியிருக்கிறது. மதுபோதையில் தன்னிலை மறந்த தனு, மனுவை முத்தமிடுகிறார். இதைப் பார்த்து யாருக்கும் அருவருப்பு வரவில்லை என்றால் நீங்கள் ஒரு சிறு பரிசோதனையை மேற்கொள்ளலாம். உங்கள் காதலியோ அல்லது உங்கள் மகளோ அயர்ந்து தூங்கும்போது அடையாளம் தெரியாத ஒருவர் அவளது அறைக்குள் நுழைந்து அவளை முத்தமிடுவதை உங்களால் ஏற்றுக் கொள்ள முடியுமா என யோசித்துப் பாருங்கள்.
மேற்கூறியதை நீங்கள் எதிர்க்கிறீர்கள் என்றால் திரைப்படங்களில் மட்டும் இத்தகைய காட்சிகள் சர்வசாதாரணமாக உருவகப்படுத்தப்பட ஏன் அனுமதிக்கிறீர்கள்?
இந்தக் கேள்வி பழமைவாதம் நிறைந்த இந்திய சமூகத்தில் முக்கியத்துவம் பெறுகிறது. நம் சமூகத்தில், பெற்றோர்கள் பிள்ளைகளிடம் இத்தகைய விஷயங்கள் குறித்து நேரடியாக பேசுவதில்லை. இங்கு பாலின பாகுபாடு இன்னமும் அதிகமாகவே உள்ளது. எனவே, நிறைய இளைஞர்கள் காதல், பாலுணர்வு போன்ற விஷயங்களுக்கு தங்களுக்கு யோசனை வழங்கும் ஊடாகவே திரைப்படங்களைப் பார்க்கின்றனர்.
அப்படி ஒரு கண்ணோட்டத்தில் இருக்கும் இளைஞன் கிக் படத்தில் சல்மான் கான், கதாநாயகி ஜேக்குலினின் பாவாடையை அவளுக்குத் தெரியாமலேயே தூக்குவதையும், அதற்கும் ஜேக்குலின் முதலில் லேசான கோபமும் பின்னர் மகிழ்ச்சியுடன் ஆடிப்பாடுவதையும் பார்த்தால் என்ன தோன்றும். பெண்கள் இத்தகைய அத்துமீறல்களை விரும்புகின்றனர் என்றே நினைத்துக் கொள்ள வைக்கும். இதை வெறும் சீண்டல்கள் என்றே ஓர் இளைஞன் எடுத்துக் கொள்வான்.
ஒரு விஷயத்தை நாம் புரிந்து கொள்ளுதல் அவசியம், அவளுக்குத் தெரியாமல் நீங்கள் அவளைச் சீண்டினால் அதை அவள் மறுக்கிறாள் என்றே அர்த்தம். நீங்கள் என்ன செய்கிறீர்கள் என்று அவளுக்கு புரியவில்லை என்றாலும் அவள் அதை மறுக்கிறாள் என்றே அர்த்தம். அவள் முடியாது என்று வார்த்தையால் மறுத்தாலும் அது மறுப்பே. இல்லை அவள் உடல்பளுவுடன் உங்களை புறந்தள்ளினாலும் அது மறுப்பே. அவள் ஆம் என்ற வார்த்தையால் தெரிவிக்காதவரை அவள் மறுக்கிறாள் என்றே அர்த்தமாகும். இத்தனை மறுப்புக்கும் மீறி நீங்கள் அவளை அடைந்தால் அது வெறும் பலாத்காரம்.
உடலறவு தவிர்த்து மற்ற சீண்டல்கள் அனைத்தும் ஏற்புடையதே என பலரால் கருதப்படுகிறது. இதனாலேயே அன்னயும் ரசூலும் மலையாளப் படத்தில் அன்னாவுக்கு தெரியாமல் அவளது கூந்தலில் ரசூல் கைநுழைக்கும் செய்கை யாராலும் ஆபாசம் எனக் கருதப்படவில்லை.
இதன் காரணமாகவே அவந்திகா பாகுபலியால் பலாத்காரம் செய்யப்பட்டதும், எந்த விதமான கோபத்தையும் யாருக்கும் ஏற்படுத்தவில்லை.
© தி இந்து பிசினஸ் லைன்
| அன்னா எம். வெட்டிகாட்- சினிமா விமர்சகர் |
தமிழில்: பாரதி ஆனந்த்
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT