Published : 27 Apr 2017 12:42 PM
Last Updated : 27 Apr 2017 12:42 PM
எமிரெட்ஸ் விமான ஊழியர்கள் மரியாதையின்றி நடந்து கொண்டதாக ’பாகுபலி 2’ தயாரிப்பாளர் தனது ட்விட்டர் பக்கத்தில் குற்றச்சாட்டு
இந்தியளவில் பெரும் எதிர்பார்ப்போடு இருக்கும் படம் 'பாகுபலி 2'. ராஜமெளலி இயக்கத்தில் பிரபாஸ், ராணா, அனுஷ்கா, தமன்னா, நாசர், ரம்யா கிருஷ்ணன் உள்ளிட்ட பலர் நடித்திருக்கும் இப்படம் நாளை(ஏப்ரல் 28) வெளியாகவுள்ளது.
இப்படத்தை இந்தியாவில் அனைத்து தமிழகம், கேரளா, ஆந்திரா மற்றும் மும்பை உள்ளிட்ட பல மாநிலங்களில் விளம்பரப்படுத்தியது படக்குழு. அதனைத் தொடர்ந்து துபாயில் விளம்பரப்படுத்த படக்குழு சென்றது. அதில் இயக்குநர் ராஜமெளலி, பிரபாஸ், ராணா, அனுஷ்கா மற்றும் தயாரிப்பாளர் ஷோபு ஆகியோர் இடம்பெற்றிருந்தனர்.
துபாய் நிகழ்ச்சியை விளம்பரப்படுத்திவிட்டு திரும்பும்போது, விமான ஊழியர்கள் தவறாக நடந்து கொண்டதாக 'பாகுபலி 2' தயாரிப்பாளர் குற்றம் சாட்டியுள்ளார். இது குறித்து தனது ட்விட்டர் பக்கத்தில், "எமிரெட்ஸ் EK526 விமானத்தில் ஹைதராபாத் சென்று கொண்டிருக்கிறோம். B4 கேட்டில் இருக்கும் பணியாளர் எங்கள் அணியிடம் தேவையில்லாமல் மரியாதையின்றி நடந்துகொண்டார். மோசமான சேவை.
எமிரெட்ஸ் பணியாளர்களில் ஒருவர் நிறவெறி கொண்டவர் என நினைக்கிறேன். நான் எமிரெட்ஸ் விமானத்தில் அடிக்கடி சென்று வருகிறேன். இப்படியான சம்பவத்தை எதிர்கொள்வது இதுதான் முதல்முறை" என்று தெரிவித்துள்ளார் தயாரிப்பாளர் ஷோபு.
மேலும், 5 ஆண்டுகள் 'பாகுபலி' பயணம் முடிவு பெற்றது பற்றி தயாரிப்பாளர் ஷோபு "2012ஆம் ஆண்டு தொடங்கிய ஒரு நீண்ட பயணம் இன்று நிறைவடையவுள்ளது. எங்களது ஒவ்வொரு நாளும், ஒவ்வொரு நிமிடமும் பாகுபலி சிறப்பாக வர உழைத்திருக்கிறோம்.
’பாகுபலி 2’வை நாங்கள் எப்படி ரசித்து உருவாக்கினோமோ, அதேபோல இவ்வளவு நாள் பொறுமையாக காத்திருந்த ’பாகுபலி’ ரசிகர்களும், அனைத்து சினிமா ரசிகர்களும் ’பாகுபலி 2’ படத்தை ரசிப்பார்கள் என்று நம்புகிறேன்.
எங்களை நேசித்து, ஆதரவு தந்து, ஊக்குவித்து, இந்த நீண்ட பயணத்தில் எங்களை செலுத்திய ஒவ்வொருவருக்கும் நன்றி. இன்றிலிருந்து ’பாகுபலி 2’ உங்களுடையது" என்று தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.
பிரபல இந்தி இயக்குநர் கரண் ஜோஹர் தனது ட்விட்டர் பக்கத்தில் தயாரிப்பாளர் ஷோபுவின் ட்வீட்டை மேற்கோளிட்டு "உங்களின் அர்பணிப்பும், கடின உழைப்பும், அளவில்லா திறமையும் ஒவ்வொரு சினிமா ரசிகராலும் பார்க்கப்படும். நீங்களும், உங்கள் அணியும் பெருமைப் பட வேண்டும்" என்று தெரிவித்துள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT