Published : 22 Apr 2017 03:34 PM
Last Updated : 22 Apr 2017 03:34 PM

சத்யராஜ் வருத்தம் எதிரொலி: கர்நாடகாவில் பாகுபலி-2 பிரச்சினை தீர்ந்தது

கர்நாடக மாநிலத்தில், பாகுபலி 2-ஆம் பாகத்துக்கு எதிரான போராட்டத்தை வாபஸ் பெறுவதாக போராட்டக்காரர்கள் அறிவித்துள்ளதால் படம் எந்த தடையுமின்றி வெளியாகும் சூழல் ஏற்பட்டுள்ளது

பாகுபலி படத்தின் 2-ஆம் பாகம் ஏப்ரல் 28-ஆம் தேதி உலகம் முழுவதும் வெளியாக திட்டமிடப்பட்டுள்ளது. இதில் சத்யராஜ் முக்கிய வேடமொன்றில் நடித்துள்ளார். இந்நிலையில், 9 வருடங்களுக்கு முன்பு காவிரி நதிநீர் கேட்டு நடிகர் சங்கம் நடத்திய உண்ணாவிரதப் போராட்டத்தில் நடிகர் சத்யராஜ் பேசிய சில கருத்துகளுக்கு கர்நாடகாவில் திடீரென எதிர்ப்பு எழுந்தது. சத்யராஜ் மன்னிப்பு கோர வேண்டும் என்றும், இல்லையென்றால் பாகுபலி 2 வெளியாகாது என்றும் நிபந்தனை விதிக்கப்பட்டது. மேலும், ஏப்ரல் 28ஆம் தேதி கடையடைப்பு போராட்டமும் அறிவிக்கப்பட்டது.

இதைத் தொடர்ந்து படத்தின் இயக்குநர் எஸ்.எஸ்.ராஜமவுலி, படம் அமைதியாக வெளியாக ஒத்துழைக்குமாறு கர்நாடக மக்களுக்கு ஒரு கோரிக்கை வைத்து வீடியோ பதிவொன்றை வெளியிட்டார். இதையடுத்தி, வெள்ளிக்கிழமை, நடிகர் சத்யராஜ், 9 வருடங்களுக்கு முன்னால் தான் பேசிய பேச்சுக்கு வருத்தம் தெரிவித்து ஒரு வீடியோ பதிவை வெளியிட்டார்.

சத்யராஜ் வருத்தம் தெரிவித்ததால், சனிக்கிழமை காலை சந்தித்துப் பேசிய போராட்டக்காரர்கள், பாகுபலி-2 படத்துக்கு எதிரான தங்கள் போராட்டத்தை வாபஸ் பெறுவதாக அறிவித்தனர். இதனால் எந்த பிரச்சினையும் இன்றி பாகுபலி - 2 கர்நாடக மாநிலத்தில் வெளியாவது உறுதியாகியுள்ளது.

இந்த போராட்டங்களை முன்னெடுத்த வாட்டாள் நாகராஜ் பேசுகையில், "சத்யராஜின் வருத்தத்தை நாங்கள் ஏற்றுக்கொண்டோம். ஏப்ரல் 28 அன்று எந்த போராட்டமும் நடக்காது. அதே வேளையில், தமிழகத்தில் கன்னட மொழிப் படங்கள் திரையிடுவது நிறுத்தப்படுவதாக சில செய்திகள் வந்துள்ளன. அது உண்மையெனில், தமிழ் திரைப்படங்களும், டிவி சேனல்களும் கர்நாடகத்தில் தடை செய்யப்படும்" எனக் குறிப்பிட்டார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x