Published : 20 Jan 2017 02:34 PM
Last Updated : 20 Jan 2017 02:34 PM
ஏன் இந்த மிருக வதை தடுப்புச் சட்டம் ஜல்லிக்கட்டுக்கு மட்டும் பொருந்த வேண்டும்? என்று முன்னணி நடிகர் பவன் கல்யாண் கேள்வியெழுப்பியுள்ளார்.
தமிழகத்தில் ஜல்லிக்கட்டு நடைபெற வேண்டும் பல்வேறு ஊர்களில் போராட்டம் நடைபெற்று வருகிறது. இதற்காக இளைஞர்கள் நடத்தி வரும் போராட்டம் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.
திரையுலக பிரபலங்கள் பலரும் இப்போராட்டத்துக்கு தங்களுடைய முழு ஆதரவையும் தெரிவித்து வருகிறார்கள். இளைஞர்கள் போராட்டத்துக்கு தெலுங்கு திரையுலகின் முன்னணி நடிகர் பவன் கல்யாண் தன்னுடைய ஆதரவை அளித்துள்ளார்.
இது குறித்து தன்னுடைய அதிகாரபூர்வ ட்விட்டர் பக்கத்தில், "ஜல்லிக்கட்டு, கோழிப் பந்தயம் உள்ளிட்டவைகளை இந்திய அரசாங்கம் தடை செய்வது, திராவிட கலாச்சாரம் மற்றும் ஒருமைப்பாடு மீது நடத்தும் தாக்குதல். தென்னிந்தியாவில் இது இப்படித்தான் பார்க்கப்படுகிறது. மக்கள் இதனால் காயப்பட்டிருப்பதை பொள்ளாச்சியில் படப்பிடிப்பில் இருக்கும் போது நான் கவனித்தேன். ஆந்திராவில் அவர்களது கலாச்சார நிகழ்வு தடைசெய்யப்பட்டிருப்பதில் வருத்தம் என சில அரசியல் கூட்டங்களிலும் கேட்டறிந்தேன்.
மிருகங்கள் வதை செய்யப்படுவதாகவே ஜல்லிக்கட்டு மற்றும் கோழிப் பந்தயம் ஆகியவற்றை தடை செய்ய காரணமாக இந்திய அரசாங்கம் தெரிவித்துள்ளது. இந்த கண்டிப்பான போக்கை கருத்தில் எடுத்துக் கொள்ள வேண்டுமென்றால் இந்தியாவிலிருந்து ஏற்றுமதி செய்யப்படும் மாட்டிறைச்சி பற்றி கணக்கெடுக்க வேண்டும்.
உலகிலேயே அதிக மாட்டிறைச்சி ஏற்றுமதி செய்வது இந்தியா தான். 2.4 மில்லியன் டன் மாட்டிறைச்சி மற்றும் கன்றுகள் இறைச்சியை 2015ல் இந்தியா ஏற்றுமதி செய்துள்ளது. அதே நேரத்தில் பிரேசில் மற்றும் ஆஸ்திரேலியா ஆகிய நாடுகள் முறையே 2 மற்றூம் 1.5 டன் மட்டுமே ஏற்றுமதி செய்துள்ளது. மாட்டிறைச்சி ஏற்றுமதியில் 5 பில்லியன் டாலர் வர்த்தகம் உள்ளது. இதில் ஒவ்வொரு வருடமும் 14 சதவிதம் வளர்ச்சி இருக்கிறது. இதில் சுவாரசியம் என்னவென்றால் அத்தகைய முன்னணி மாட்டிறைச்சி ஏற்றுமதி செய்யும் நிறுவனத்தை வைத்திருப்பது இந்துக்கள், முஸ்லிம்கள் அல்ல.
2.4 மில்லியன் டன் இறைச்சிக்கு எத்தனை பசு, கன்று, எருமைகள் வெட்டப்பட்டிருக்கும் என நினைத்துப் பாருங்கள். நம் கண்ணில் படவில்லை என்பதால் மட்டும் எப்படி இந்த மாதிரியான விஷயங்கள் மிருக வதை எனப் பேசப்படாமல் இருக்கிறது?
இறைச்சிக்காக வெட்டப்படும் மிருகங்களை ஒப்பிடும்போது இதில் காயப்படும் மிருகங்களின் எண்ணிக்கை ஒன்றுமே இல்லை எனும் போது, ஏன் இந்த மிருக வதை ஜல்லிக்கட்டுக்கு மட்டும் பொருந்த வேண்டும்?. இதே மிருக வதை கோழிப் பந்தயத்தை தடை செய்யவும் சொல்லப்பட்டது. இந்த விளையாட்டுக்கு மத ரீதியில் முக்கியத்துவம் இருக்கிறது. கயாசுரா என்ற அரக்கனை கொலை செய்ய சேவல் வடிவில் வந்த சிவபெருமான் குக்குடேஸ்வரர் என்றழைக்கப்படுகிறார்.
கோழிப்பந்தயம் ஆந்திராவின் கலாச்சார அடையாளம். மிருக வதை சட்டத்தை கண்டிப்பாக நடைமுறைப்படுத்த வேண்டும் என இந்திய அரசு விரும்பினால், இறைச்சிக்காக வளர்க்கப்படும் கோழிப் பண்ணைகளையும் தடை செய்ய வேண்டும். அவை ஒவ்வொரு வருடமும் லட்சக்கணக்கான கோழிகளைக் கொன்று, 8.4 லட்சம் டன் கோழி இறைச்சியை உற்பத்தி செய்கிறது.
எதாவது ஒரு புள்ளியில் இந்த அறநெறி உணர்த்தும் மூடத்தனத்துக்கு நாம் எல்லை வகுக்க வேண்டும். இல்லையென்றால் நமது தேசத்தின் ஒருமைப்பாடை காப்பது மிகக் கடினம். ஜனசேனா கட்சி, ஜல்லிக்கட்டு மற்றும் கோழிப்பந்தயம் மீதிருக்கும் தடையை உடனடியாக நீக்குமாறு மத்திய அரசைக் கேட்டுக்கொள்கிறது" என்று தெரிவித்துள்ளார் பவன் கல்யாண்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT