Published : 03 Nov 2013 05:26 PM Last Updated : 03 Nov 2013 05:26 PM
காங். எம்.பி. மீதான புகாரை திரும்பப் பெற்றார் நடிகை ஸ்வேதா
கேரள காங்கிரஸ் எம்.பி. பீதாம்பர குருப் மீதான பாலியல் சீண்டல் புகாரை, மலையாள நடிகை ஸ்வேதா மேனன் திரும்பப் பெற்றார்.
பிரபல மலையாள நடிகை ஸ்வேதா மேனன் வெள்ளிக்கிழமை மாலை கொல்லம் பகுதியில் நடந்த படகுப் போட்டிக்குச் சென்றுள்ளார். அந்த நிகழ்ச்சியில்தான் காங்கிரஸ் எம்.பி. பாலியல் சீண்டலுக்கு ஆளனதாகக் கூறப்படுகிறது.
அது தொடர்பாக தொலைக்காட்சியில் வெளியான பதிவில், ஸ்வேதா மேனனை காங்கிரஸ் எம்.பி. பீதாம்பர குருப் உரசுவது மற்றும் தொடுவதற்கு முற்பட்டது போன்ற காட்சிகள் இடம்பெற்றன.
இந்த நிகழ்வு, கேரளாவில் திரைத் துறையினர் மற்றும் மகளிர் அமைப்புகளிடையே பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது.
கொச்சியில் ஞாயிற்றுக்கிழமை காலை செய்தியாளர்களிடம் பேசிய ஸ்வேதா மேனன், பீதாம்பர குருப்பின் பெயரைக் குறிப்பிடாமல், காங்கிரஸ் எம்.பி. ஒருவர் தனக்கு பாலியல் தொந்தரவு செய்ததாகவும், அது குறித்து கேரள முதல்வர் உம்மன் சாண்டியிடம் முறைப்படி புகார் அளிக்கப்போவதாகத் தெரிவித்தார்.
"ஒரு பெண்ணாக, சிறுமைப்படுத்தப்பட்டதாகவும் அவமதிக்கப்படதாகவுமே உணர்கிறேன். முதல்வரிடம் முறைப்படி புகார் அளிப்பேன்" என்றார் அவர்.
அதேவேளையில், 71 வயது பீதாம்பர குருப் எம்.பி., ஸ்வேதா மேனனின் குற்றச்சாட்டை திட்டவட்டமாக மறுத்தார். இது குறித்து அவர் கூறும்போது, "தேர்தலையோட்டி, அரசியல் நோக்கத்துடன் கட்டவிழித்துவிடப்பட்ட விஷயமாகவே இதைப் பார்க்கிறேன். நான் ஓர் அரசியல்வாதி என்பதற்காக, இதுபோன்ற குற்றச்சாட்டுகளை அடுக்குவது மனவலியை ஏற்படுத்துகிறது" என்றார்.
ஸ்வேதா மேனன் தனது கணவர் ஸ்ரீவல்சன் மேனனுடன், 'அம்மா' உள்ளிட்ட திரைப்படத் துறை அமைப்புகளின் பிரதிநிதிகளிடம் தனது புகார் தொடர்பாக விவரித்துள்ளார். காங்கிரஸ் எம்.பி. மீதான புகாரை, முதலில் மாவட்ட ஆட்சியரிடம் அளித்ததாகவும், ஆனால் அந்தப் புகாரை ஏற்க மறுத்தது தனக்கு இன்னும் வேதனையைத் தந்ததாகவும் குறிப்பிட்டார்.
புகார் வாபஸ் ஏன்..?
இதன் தொடர்ச்சியாக, நடிகை ஸ்வேதா மேனன் புகார் தொடர்பாக, அவரிடம் கொல்லம் போலீஸார் வாக்குமூலம் வாங்கினர். அவர் அளித்த புகாரின் அடிப்படையில், காங்கிரஸ் எம்.பி. பீதாம்பர குருப் மீது கொல்லம் போலீஸார் வழக்குப் பதிவு செய்தனர்.
இந்த நிலையில், நடிகை ஸ்வேதா மேனன் தனது புகாரை ஞாயிற்றுக்கிழமை இரவு திரும்பப் பெற்றுள்ளார்.
இது தொடர்பாக அவர் மலையாளம் சேனலுக்கு அனுப்பிய அறிக்கை ஒன்றில், பீதாம்பர குருப் வருத்தம் தெரிவித்ததன் காரணமாக, புகாரை வாபஸ் பெறுவதாகக் குறிப்பிட்டுள்ளார். இந்த விவகாரம் தொடர்பாக மேலதிக தகவல்களை அவர் வெளியிடவில்லை.
முன்னதாக, பீதாம்பர குருப் அளித்த பேட்டியில், நான் உள்நோக்கத்துடன் எதுவும் செய்யவில்லை. நடிகை ஸ்வேதா மேனன் தவறாக எண்ணியிருந்தால், அதற்கு என் வருத்தங்களைத் தெரிவித்துக்கொள்கிறேன் என்று அவர் கூறியிருந்தார்.
WRITE A COMMENT