Published : 30 Mar 2017 10:08 AM
Last Updated : 30 Mar 2017 10:08 AM
சர்வதேச இந்திய திரைப்பட அகாடமி (ஐஃபா) விருதுகள் வழங்கும் விழா ஹைதராபாத்தில் நேற்று முன்தினம் நடந்தது. இதில் தமிழில் சிறந்த படமாக ‘இறுதிச்சுற்று’ தேர்ந்தெடுக்கப்பட்டது. சிறந்த நடிகராக மாதவனும், நடிகையாக ரித்திகா சிங்கும் விருது பெற்றனர். சிறந்த இசையமைப்பாளருக்கான விருதை ஏ.ஆர். ரஹ்மான் பெற்றார்.
ஐஃ பா உற்சவம் விருது வழங்கும் விழா, ஹைதராபாத் இன்டர்நேஷனல் கன்வென் ஷனல் சென்டரில் நேற்று முன்தினம் தொடங்கியது. முதல் நாளில் தமிழ் மற்றும் மலையாள படங்களுக்கான விருதுகள் வழங்கப்பட்டன. தமிழ் படங்களுக்கான விருது வழங்கும் நிகழ்ச்சியை நடிகர்கள் ராணா, சிவா ஆகியோர் தொகுத்து வழங்கினர். மலையாள பட விருது வழங்கும் நிகழ்ச்சியை டினி டோம், பியர்லே தொகுத்து வழங்கினர். நடிகர்கள் மாதவன், ஜீவா, ‘சென்னை 28 -2’ படக்குழு, நடிகைகள் ஹன்சிகா, கேத்ரின் தெரசா, அக் ஷராஹாசன், லட்சுமிராய், ரித்திகா சிங் ஆகியோரின் நடனம் மற்றும் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன.
இந்நிகழ்ச்சியில் ஜெயம் ரவி, ஜீவா, நாசர், சாந்தனு, பிரசன்னா,கிருஷ்ணா, ஹன்சிகா, வரலட்சுமி, நிக்கி கல்ராணி, ரகுல் பிரீத் சிங், சஞ்சிதா, ராதிகா, சினேகா, மீனா, பார்வதி நாயர், நிகிஷா படேல், கவுரி முஞ்சால், லதா ரஜினிகாந்த், ரசூல் பூக்குட்டி, ரவி.கே சந்திரன், வெங்கட் பிரபு, ஆர்.கே.செல்வமணி, பி.வாசு, எல்.சுரேஷ் உட்பட திரையுலகினர் திரளாக கலந்து கொண்டனர். இரண்டு நாட்கள் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் நேற்று மாலை தெலுங்கு, கன்னட மொழிப் படங்களுக்கான விருதுகள் அளிக்கப்பட்டன.
இந்நிகழ்ச்சியில் இயக்குநர் எஸ்பி.முத்துராமனுக்கு வாழ்நாள் சாதனையாளர் விருது வழங்கப்பட்டது. தென்னிந்திய நடிகர் சங்க தலைவர் நாசர், குஷ்பு, தயாரிப்பாளர் கொட்டாரக்கரா ஆகியோர் இந்த விருதை வழங்கினர்.
விருது பெற்ற பின் எஸ்பி.முத்துராமன் பேசும்போது, “இங்கே நான்கு மொழிக் கலைஞர்களும் ஒன்று கூடியுள்ளனர். கலைதான் இந்த மாதிரியான நிகழ்வுகளை ஒன்றிணைக்கிறது. மொழிகளாலும் மற்ற வேறுபாடுகளாலும் யாரையும் பிரிக்க முடியாதபடி இணைத்திருப்பது கலை. எனக்கு 81 வயது என்றார்கள்.
மனதால் எனக்கு 18 வயதுதான். உழைத்துக்கொண்டே இருந்தால் வயது ஆகாது. மதம், சாதி என்ற வேறுபாடுகள் எதுவும் நமக்கு தேவையில்லை. மனித நேயம்தான் மனிதர்களுக்கு முக்கியம். வாழ்க்கையில் லட்சியத்தோடு வாழ்ந்து அப்துல் கலாம் போல் சாதனையாளர்களாக மறைய வேண்டும்” என்றார்.
இந்நிகழ்ச்சியில் ‘அச்சம் என்பது மடமையடா’ படத்துக்காக சிறந்த இசை அமைப்பாளர் விருதை ஏ.ஆர்.ரஹ்மான் பெற்றார். அப்போது அவரிடம் ஒரு பாடலை பாடுமாறு நிகழ்ச்சி தொகுப்பாளர் சிவா கேட்டுக்கொண்டார். உடனே விஜய் ஜேசுதாஸை ரஹ்மான் மேடைக்கு அழைத்து, ‘அவளும் நானும்’ பாடலை பாட வைத்தார். பின்னர் அவருடன் ஏ.ஆர்.ரஹ்மானும் சேர்ந்து பாடினார். ‘அச்சம் என்பது மடமையடா’ படத்துக்கு விருது பெற்றது பற்றி ஏ.ஆர்.ரஹ்மான் கூறும்போது, “கௌதம் மேனன், சிம்பு, படக்குழுவுக்கு நன்றி. எல்லாப் புகழும் இறைவனுக்கே” என்றார்.
இந்நிகழ்ச்சியில் சிறந்த மலையாளப் படத்துக்கான விருதை ‘புலி முருகன்’ வென்றது. சிறந்த நடிகருக்கான விருதை துல்ஹர் சல்மானும் (சார்லி), நடிகைக்கான விருதை ரஜிஷா விஜயனும் (அனுராக கரிக்கின் வெள்ளம்) வென்றனர்.
சிறந்த இசையமைப்பாளருக்கான விருதை நடிகை ராதிகாவிடம் பெறும் ஏ.ஆர்.ரஹ்மான். அருகில் நடிகர் மாதவன்.
தமிழ் சினிமாவில் விருது வென்றவர்கள்:
சிறந்த படம் : இறுதிச்சுற்று
இயக்குநர் : அட்லீ (தெறி)
நடிகர் : மாதவன் (இறுதிச்சுற்று)
நடிகை : ரித்திகா சிங் (இறுதிச்சுற்று)
குணச்சித்திர நடிகர் : நாகார்ஜுனா (தோழா)
குணச்சித்திர நடிகை : நைனிகா (தெறி)
நகைச்சுவை நடிகர் : ஆர்.ஜே.பாலாஜி (நானும் ரவுடிதான்)
வில்லன் நடிகர் : மகேந்திரன் (தெறி)
இசையமைப்பாளர் : ஏ.ஆர்.ரஹ்மான் (அச்சம் என்பது மடமையடா)
பாடகர் : அனிருத் (நானும் ரவுடிதான்)
பாடகி : நீத்தி மோகன் (நானும் ரவுடிதான்)
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT