Published : 30 May 2017 08:17 PM
Last Updated : 30 May 2017 08:17 PM
பிரபல தெலுங்கு திரைப்பட இயக்குநர் தாசரி நாராயணராவ் உடல் நலக் குறைவால் இன்று ஹைதராபாத்தில் காலமானார். அவருக்கு வயது 74.
இயக்குநர், நடிகர், தயாரிப்பாளர், கதாசிரியர், பாடலாசிரியர் என பன்முகம் கொண்ட படைப்பாளியாகத் திகழ்ந்தவர் தாசரி நாராயணராவ். தெலுங்கில் 150-க்கும் மேற்பட்ட படங்களை இயக்கியவர், 50-க்கும் மேற்பட்ட படங்களைத் தயாரித்துள்ளார். 250க்கும் மேற்பட்ட படங்களுக்கு வசனம் எழுதியுள்ளார். சமூக அநீதி, ஊழல், பாலின பாகுபாடு குறித்து இவரது படங்கள் அதிகம் பேசின.
இந்தியாவில் அதிக படங்களை இயக்கியவர் என்ற பெருமையைப் பெற்றவர் தாசரி நாராயணராவ். தேசிய விருது, நந்தி விருது, தென்னிந்திய ஃபிலிம் பேர் விருதுகளைப் பெற்றுள்ளார்.
தாசரி நாராயணநாவ் காங்கிரஸ் கட்சியில் இணைந்து மத்திய அமைச்சராகவும் பதவி வகித்துள்ளார்.
ஜெயலலிதா வாழ்க்கை வரலாற்றை 'அம்மா' எனும் பெயரில் திரைப்படமாக எடுக்க இருப்பதாக தாசரி நாராயண ராவ் அறிவித்திருந்தார். அதற்கான பணிகள் நடைபெற்று வந்த நிலையில், நுரையீரலில் தொற்றால் அவதிப்பட்டு வந்த தாசரி நாராயணராவ் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார்.
இந்நிலையில் இன்று அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். தாசரி நாராயணராவ் மறைவுக்கு திரையுலக பிரபலங்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT