Published : 22 Jan 2014 01:10 PM
Last Updated : 22 Jan 2014 01:10 PM
தெலுங்கு திரையுலகின் பழம்பெரும் நடிகர் நாகேஸ்வரராவ் மறைவிற்கு தென்னந்திய நடிகர் சங்கர் தனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துள்ளது.
தெலுங்கு திரையுலகின் பழம்பெரும் நடிகர் நாகேஸ்வரராவ் இன்று காலை காலமானார். அவருக்கு வயது 91. தற்போதைய தெலுங்கு திரையுலகின் முன்னணி நடிகராக வலம் வரும் நாகார்ஜுனின் தந்தை நாகேஸ்வரராவ் என்பது குறிப்பிடத்தக்கது.
நாகேஸ்வரராவ் மறைவிற்கு தென்னந்திய நடிகர் சங்கம் தனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக அவர்கள் விடுத்துள்ள அறிக்கையில்:
"தென்னிந்திய நடிகர் சங்கத்தின் ஆயுட்கால உறுப்பினரும், புகழ்பெற்ற பழம்பெரும் நடிகர் நாகேஸ்வரராவ் அவர்கள் மறைந்த செய்தி கேட்டு வேதனை அடைந்தோம்.
இந்திய திரையுலகின் கதாநாயக நடிகர்களில் உலக புகழ் பெற்றவர் நாகேஸ்வரராவ். பல்வேறு அயல் நாடுகளுக்கு சென்று இந்தியர்களின் கலை மற்றும் பண்பாட்டை உலகறிய செய்தவர்களில் அவரும் ஒருவர்.
விவசாய குடும்பத்தில் பிறந்து, இளம் வயதில் நாடகங்களில் பெண் வேடமிட்டு நடித்து புகழ்பெற்றவர். தனது 17 வயதில் திரைப்படங்களில் நடிக்க ஆரம்பித்தவர், தனது இறுதி காலம் வரை பல சாதனைகளை புரிந்துள்ளார்.
இந்திய அரசு வழங்கும் மிக உயரிய விருதான தாதா சாகேப் பால்கே விருது பெற்றவர். ஆந்திராவில் திரைத்துறை வளர்ச்சிக்காக அன்னபூர்ணா ஸ்டூடியோ என்ற பெரிய ஸ்டூடியோவை சொந்தமாக நிறுவி திரையுலக வளர்ச்சிக்கு பெரிதும் உதவியவர் நாகேஸ்வரராவ். ANR NATIONAL AWARD என்ற பெயரில் 2005 முதல் திரைத்துறையில் சாதனை புரிந்தவர்களுக்கு விருது வழங்கி கெளரவபடுத்தி வருகிறார்.
'தேவதாஸ்' என்ற மறக்க முடியாத திரைக்காவியத்தின் மூலம் தமிழ் ரசிகர்களின் நெஞ்சில் நீங்காத இடம் பிடித்தவர். அவர் மறைவு இந்திய திரையுலகிற்கு மாபெரும் இழப்பாகும்.
அவரை இழந்து வாடும் அவரது குடும்பத்தினருக்கும், குறிப்பாக அவரது மகன் நாகார்ஜுனா அவர்களுக்குக்கும், திரையுலகினருக்கும், ரசிக பெருமக்களுக்கும் ஏற்பட்டுள்ள சோகத்தில் தென்னந்திய நடிகர் சங்கமும் பங்கு கொள்கிறது. அன்னாரின் ஆன்மா சாந்திடைய இறைவனை பிராத்திக்கிறோம்" என்று கூறியுள்ளது.
தென்னந்திய நடிகர் சங்கத் தலைவர் சரத்குமார் மற்றும் நடிகை ராதிகா ஆகியோர் நேரில் அஞ்சலி செலுத்த ஹைதராபாத்திற்கு சென்று இருக்கிறார்கள்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT