Published : 22 Oct 2013 03:38 PM
Last Updated : 22 Oct 2013 03:38 PM
‘துணிந்த பின் மனமே துயரம் கொள்ளாதே’ என்பது நாகேஸ்வர ராவ் நடித்த ‘தேவதாஸ்’ படத்தில் வரும் ஒரு பாடல். அந்த வார்த்தைகளுக்கு உதாரணமாக நாகேஸ்வர ராவ், ‘நிச்சயம் மீண்டு வருவேன்’ என்று உறுதியுடன் கூறியிருப்பது ரசிகர்கள் மத்தியில் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
புற்றுநோயால் பாதிக்கப்பட்ட பழம்பெரும் தெலுங்கு நடிகர் அக்கினேனி நாகேஸ்வரராவுக்கு, செகந்தராபாத் ‘கிம்ஸ்’ மருத்துவமனையில் அறுவை சிகிச்சை நடந்தது. பெருங்குடல் மற்றும் மலத்துவாரப் பகுதியில் புற்றுநோயால் பாதிக்கப்பட்ட திசுக்களை டாக்டர்கள் வெற்றிகரமாக அகற்றியுள்ளனர். தற்போது அவரது உடல்நிலை சீராக இருப்பதாக ‘கிம்ஸ்’ மருத்துவமனை நிர்வாக இயக்குநர் டாக்டர் பாஸ்கர்ராவ் கூறியுள்ளார்.
பழம்பெரும் தெலுங்கு நடிகர் அக்கினேனி நாகேஸ்வர ராவ். 1941ம் ஆண்டு நடிக்கத் தொடங்கிய நாகேஸ்வர ராவ் தெலுங்கில் 250 படங்களில் நடித்து சூப்பர்ஹிட் ஹீரோவாக விளங்கியவர். தமிழிலும் தேவதாஸ், அலாவுதீன் அற்புததீபம், பெற்ற தாய் என்பது உள்பட ஏராளமான படங்களில் நடித்துள்ளார். பிரபல நடிகர் நாகார்ஜுன் இவரது மகன்தான்.
செப்டம்பர் 20ம் தேதியன்று 90-வது பிறந்த நாள் கொண்டாடிய நாகேஸ்வர ராவ், கடந்த 8-ம் தேதியன்று பொறுக்க முடியாத வயிற்றுவலியால் அவதிப்பட்டார். இதையடுத்து உடனடியாக மருந்துவமனையில் சேர்க்கப்பட்டார். தீவிர மருத்துவ பரிசோதனைகளுக்கு பிறகு, அவர் புற்றுநோயால் பாதிக்கப்பட்டிருப்பது தெரியவந்தது. ஆனாலும், பெரிதாக அலட்டிக்கொள்ளாத நாகேஸ்வர ராவ் தன் மகன் நாகார்ஜுனா, பேரன் நாகசைதன்யாவுடன் ‘மனம்’ என்னும் படத்தில் நடிக்கத் தொடங்கினார்.
அதை தொடர்ந்து, தனக்கு புற்றுநோய் இருக்கும் தகவலை எல்லோருக்கும் தெரிவிக்க முடிவுசெய்த நாகேஸ்வர ராவ், செய்தியாளர்கள் கூட்டத்துக்கு ஏற்பாடு செய்தார். தன் உடல்நலம் பற்றிய அறிக்கையையும் வழங்கினார். அந்த சந்திப்பில் அவர் கூறியதாவது:
தாங்க முடியாத வயிற்றுவலி ஏற்பட்டதால் குடும்பத்தினர் என்னை மருத்துவமனையில் சேர்த்தார்கள். என்னை புற்றுநோய் தாக்கியிருப்பது மருத்துவப் பரிசோதனையில் தெரியவந்தது. புற்றுநோய் தாக்கியவர்கள் ரத்த வாந்தி எடுத்து இறந்து விடுவார்கள் என்ற கதை அம்சங்களுடன் கூடிய ‘பிரேமாபிஷேகம்’ (வாழ்வே மாயம்) போன்ற பல படங்களில் நடித்துள்ளேன். அது நூறு சதவீதம் உண்மை அல்ல. முன்னாள் குடியரசுத் தலைவர் நீலம் சஞ்சீவரெட்டி போன்ற பலர் இந்தப் புற்றுநோயை தோற்கடித்திருக்கிறார்கள்.
என்னைப் பொருத்தவரை இம்மாதிரி போராட்டங்கள் புதிதல்ல. 1974, 1988களில் இதய நோயால் பாதிக்கப்பட்டு, ஜெயித்தவன் நான். இப்போது என் போராட்டம் புற்றுநோயுடன். அவ்வளவுதான். ரசிகர்களின் ஆசியால் நிச்சயம் இந்த போராட்டத்தில் வெற்றி பெறுவேன்.
கடந்த மாதம் என் 90வது பிறந்த நாளன்று வாழ்த்து தெரிவிக்க பலர் வந்திருந்தீர்கள். நான் 100, 116, 124 வருடங்கள் நீடூழி வாழவேண்டும் என்று பல ரசிகர்களும் மனமார வாழ்த்தினார்கள். என் அம்மா 96 வயது வரை வாழ்ந்தார். அதனால், நானும் 96 வயது வரை வாழ்வேன் என்று நம்பிக்கொண்டிருப்பேன். புற்றுநோய் தாக்கியிருக்கிறது என்று தெரிந்த பிறகு, 100 வயது வரை வாழ்ந்து ‘செஞ்சுரி’ அடிக்கவேண்டும் என்ற ஆசை ஏற்பட்டிருக்கிறது. அதுதான் என் லட்சியம்” என்று உற்சாகத்துடன் கூறினார்.
அக்கினேனி நாகேஸ்வர ராவ் மிகுந்த மனவலிமை உள்ளவர். கடந்த ஆண்டு அவரது மனைவி அன்னபூர்ணம்மா இறந்துவிட்டார். அப்போதுகூட மனதை தேற்றிக்கொண்டு இதே மன வலிமையுடன் மீண்டு வந்தார். உறுதியான உள்ளம் கொண்ட அவரை எந்த புற்றுநோயும் ஒன்றும் செய்துவிட முடியாது என்கின்றனர் நாகேஸ்வர ராவ் ரசிகர்கள்.
“துணிந்த பின் மனமே துயரம் கொள்ளாதே” என்பது நாகேஸ்வர ராவ் நடித்த ‘தேவதாஸ்’ படத்தில் வரும் ஒரு பாடல். அந்த வார்த்தைகளுக்கு உதாரணமாக நாகேஸ்வர ராவ், ‘நிச்சயம் மீண்டு வருவேன்’ என்று உறுதியுடன் கூறியிருப்பது ரசிகர்கள் மத்தியில் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT