Published : 05 May 2017 05:42 PM
Last Updated : 05 May 2017 05:42 PM
கடந்த இரண்டு வருடங்களாக நம் மக்கள் எல்லோரிடமும் அதிகம் தோன்றிய கேள்விகளில் ஒன்று, ''கட்டப்பா ஏன் பாகுபலியைக் கொன்றார்?'' என்பதாகவே இருக்கும். வீடுகளிலும், சமூக வலைதளங்களிலும் அந்தக் கேள்வி அதிகமாகக் கேட்கப்பட்டது. இதுகுறித்த மீம்களும், கதைகளும் ஏராளமாய்ப் பரப்பப்பட்டன.
'பாகுபலி' டிஜிட்டல் மார்க்கெட்டிங் குழு இதற்கான முக்கியக் காரணம். 2013-ல் இருந்து அந்தக் குழு 'பாகுபலி' படத்தின் மீதான எதிர்பார்ப்பை எழுப்பியது. அப்போது ட்விட்டரில் பாகுபலிக்காக ஹேஷ்டேக் உருவாக்கப்பட்டது.
இன்று 'பாகுபலி' ஃபேஸ்புக் பக்கத்துக்கு 36 லட்சம் லைக்குகளும், ட்விட்டர் பக்கத்துக்கு 2.54 லட்சம் பின்தொடர்பாளர்களும், 'பாகுபலி' யூடியூப் சேனலுக்கு 4.52 லட்சம் சந்தாதாரர்களும் இருக்கின்றனர். இந்த எண்ணிக்கை இன்னும் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே செல்கிறது. இதுகுறித்த ஓர் ஆய்வு, டிஜிட்டல் மார்க்கெட்டிங் பலத்தை உணர்த்தக் கூடும்.
இதுகுறித்துப் பேசிய சென்னையைச் சேர்ந்த டிஜிட்டல் மார்க்கெட்டிங் நிறுவனமொன்றின் சக நிறுவனர் சங்கீதா அபிஷேக்,
''ஏராளமான தொழில் நிறுவனங்கள் சமூக வலைதளங்களின் வழியாகத் தங்களை அடையாளப்படுத்திக் கொள்கின்றன. விற்பனையை அதிகப்படுத்துகின்றன. லாபம் ஈட்டுகின்றன. ஃபேஸ்புக், ட்விட்டர், யூடியூப் தாண்டி, இன்ஸ்டாகிராம், ஸ்னேப்சாட், வாட்ஸ் அப் என்று தங்களின் எல்லையை விரிவுபடுத்துகின்றன. சமூக வலைதளங்களைக் கவனித்துக் கொள்ளவே பல நிறுவனங்களில் தனிக் குழுவினர் அமைக்கப்படுகின்றனர்.
மென்பொருள் மற்றும் தொலைதொடர்பு நிறுவனங்கள் தங்களின் பொருட்களை விளம்பரப்படுத்த வீடியோ உத்திகளையும் கையாளுகின்றன. இதன் மூலம் சில நொடிகளில் தகவல் பரிமாறப்பட்டு விடுகிறது.
டிஜிட்டல் மார்க்கெட்டிங்கின் பலத்தை உணர நம் கண் முன்னே இருக்கும் மிகப் பெரிய உதாரணம் 'பாகுபலி'. முதல் பாகத்தில் இருந்து கடந்த இரண்டு வருடங்களாக, படம் குறித்த கலவையான நினைவுகள் கிளறப் பட்டுக்கொண்டே இருந்தன.
குறிப்பாக சமூக வலைதளங்களான ஃபேஸ்புக், ட்விட்டர் ஆகியவை இதில் முக்கியப் பங்கு வகித்தன. ஸ்டார்ட் அப் நிறுவனங்களும், வணிக மையங்களும் 'பாகுபலி' படத்தின் சந்தைப்படுத்துதல் வழிமுறைகளை உதாரணமாகக் கொள்ளலாம்.
இவை அனைத்தின் மூலம் இணையத்தின் வலிமை புலனாகிறது'' என்றார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT