Published : 23 May 2017 06:37 PM
Last Updated : 23 May 2017 06:37 PM
பெண்கள் படுக்கைக்கு மட்டுமே பயனுள்ளவர்கள் என்று தெலுங்கு நடிகர் சலபதி ராவ் பேசியதாக எழுந்த சர்ச்சைக்கருத்துக்கு நடிகர் நாகர்ஜுனா, நாக சைதன்யா, நடிகை ராகுல் பிரீத் சிங் முதல் பலதரப்பிலிருந்தும் கண்டனக்குரல்கள் எழும்பியதால் சலபதி ராவ் மன்னிப்பு கேட்டுள்ளார்.
வரவிருக்கும் புதிய தெலுங்கு திரைப்படத்திற்கான நிகழ்ச்சி ஒன்றில் நடிகர் சலபதி ராவ் பெண்கள் குறித்து சர்ச்சைக்குரிய இந்தக் கருத்தை தெரிவித்ததாக செய்திகள் பரவியது.
ராரண்டோய் வேதுகா சுதம் என்ற படத்தில் சலபதி ராவ் பாத்திரம் பேசுவதாக வரும் ஒரு வசனம்: “பெண்களால் மன அமைதிக்கு காயம் ஏற்படும்” என்பதாகும். இந்த நிகழ்ச்சியின் போது இது குறித்த கேள்வியை பெண் ஒருங்கிணைப்பாளர் ஒருவர் கேட்க, அதற்குப் பதில் அளித்த சலபதி ராவ், “பெண்கள் தீங்கானவர்கள் அல்ல, படுக்கையில் பயனுள்ளவர்கள்” என்று கூறினார்.
அவரது இந்தக் கருத்து காட்டுத்தீயாக பரவ சலபதி ராவுக்கு பலதரப்புகளிலிருந்தும் கடும் கண்டனங்கள் எழுந்தன.
இந்தப் படத்தைத் தயாரித்த நாகார்ஜுனா, “நான் தனிப்பட்ட முறையிலும் என் படங்களிலும் பெண்களை எப்போதும் மதித்திருக்கிறேன். எனவே சலபதிராவின் மோசமான கருத்தை ஒருகாலும் நான் அனுமதிக்க மாட்டேன், ஏற்றுக் கொள்ள மாட்டேன்” என்று கூறியுள்ளார்.
நாகசைதன்யாவும், “பெண்களை மதிப்பது எனது வாழ்க்கை முறை. இந்தக் கருத்தை என்னால் ஏற்றுக் கொள்ளவே முடியாது” என்றார்.
நடிகை ராகுல் பிரீத் சிங் கடும் கோபத்துடன் சலபதிராவுக்கு கண்டனம் தெரிவித்த போது, தெலுங்கு திரை உலகின் மூத்த நடிகர் தன் வயதுக்கேற்றவாறு பேச வேண்டும். பொதுவாக மூத்த நடிகர்கள் ஏதாவது கூறினால் வயதுக்குரிய மரியாதை காரணமாக எதிர்வினையாற்றுவது வழக்கமல்ல, ஆனால் இந்தக் கருத்து அப்படி மரியாதை நிமித்தமாக பேசாமல் இருக்கும் கருத்தல்ல. முதலில் எனக்கு மொழி தெரியாததால் அவர் கூறியதன் அர்த்தம் புரியவில்லை, இல்லையெனில் மேடையிலேயே கண்டனம் தெரிவித்திருப்பேன்” என்று கோபமாகப் பேசியுள்ளார்.
ஆனால் சலபதி ராவ் இந்த சர்ச்சைப் பற்றி கூறும்போது, “நான் யாரையும் காயப்படுத்துவதற்காக இப்படி கூறவில்லை. யாரையாவது புண்படுத்தியிருந்தால் நான் மன்னிப்பு கேட்டுக் கொள்கிறேன். கேள்விதான் பிரச்சினை, ‘பெண்கள் தீங்கானவர்களா?” என்று கேட்ட போது எனக்குக் கோபம் வந்தது. அதனால்தான் பெண்கள் ஆபத்தானவர்கள் அல்ல அதனால்தான் அவர்களுடன் நாம் சேர்ந்து படுக்கிறோம்’ என்றேன். தெலுங்கு தெரியாத சில சேனல்கள் என்னுடைய இந்தக் கருத்தை திரித்து வெளியிட்டன. அதோடு அதைப் புற்றுநோய் போல் பரப்பியும் உள்ளனர். நான் எப்போதும் பெண்களை இழிவு படுத்துவதில்லை. பெண்களை தாயாகவும் சகோதரிகளாகவும் மதிப்பவன்” என்றார் சலபதி ராவ்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT