Published : 06 Jun 2017 02:41 PM
Last Updated : 06 Jun 2017 02:41 PM

இரக்கமற்ற அரசியல்வாதியாக ராணா நடிக்கும் நேனே ராஜூ நேனே மந்த்ரி

தேஜா இயக்கத்தில் ராணா நடிக்கும் தெலுங்குப் படம் 'நேனே ராஜூ நேனே மந்திரி'. இதில் இரக்கமற்ற அரசியல்வாதியாக ராணா நடிக்கிறார்.

'பாகுபலி' படத்தில் பல்லாளத் தேவனாக ராணா நடித்தார். நாயகன் பிரபாஸுக்கு நிகராக பலம் பொருந்திய எதிர்மறைக் கதாபாத்திரத்தை சிறப்பாகக் கையாண்டார். தற்போது அப்படத்திலிருந்து முற்றிலும் மாறுபட்ட தோற்றத்தில் இரக்கமற்ற அரசியல்வாதியாக ராணா நடிக்கிறார்.

2001-ம் ஆண்டு ராணா, சுமன், சுஹாசினி நடிப்பில் வெளியான தெலுங்குப் படம் 'லீடர்'. சேகர் கம்முலா இயக்கிய இப்படம் அரசியலை மையமாகக் கொண்டு உருவாக்கப்பட்டது. இந்நிலையில் அரசியல் களத்தில் ராணா மீண்டும் நடித்துள்ள த்ரில்லர் படம் 'நேனே ராஜு நேனே மந்த்ரி'.

இதில் காஜல் அகர்வால் மற்றும் கேத்ரீன் தெரசா ஆகியோர் முதன்மைக் கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். கேத்ரீன் தெரசா பிரபல ஊடகவியலாளராக இப்படத்தில் நடிக்கிறார். சுரேஷ் டகுபதி, பரத் செளத்ரி மற்றும் கிரண் ரெட்டி இப்படத்தை தயாரிக்கின்றனர்.

படத்தின் டீஸர் இன்று வெளியிடப்பட்டது. ராணா சிறையில் இருந்து கருப்புத் துணியால் தலை கட்டப்பட்டு வெளியே வருகிறார். கருப்புத்துணி அகற்றப்பட்டதும் அவர் அறைகூவல் விடுக்கும் காட்சிகள் வெளியாகியுள்ளன.

படம் குறித்து இயக்குநர் தேஜா கூறும்போது, ''தன்னுடைய நலனை மட்டுமே எண்ணி வாழும் சமூகத்தில் இருக்கிறோம். நம்மைச் சுற்றி நடக்கும் நிகழ்வுகள் குறித்து நாம் கவலை கொள்வதில்லை. எதிர்வினை ஆற்றுவதில்லை. இந்தப் படம் அந்த மனநிலையை உடைக்கும்'' என்றார்.

'நேனே ராஜு நேனே மந்த்ரி' பட டீஸரைக் காண