Published : 27 Jun 2019 11:48 AM
Last Updated : 27 Jun 2019 11:48 AM
44 திரைப்படங்களை இயக்கி கின்னஸ் சாதனை படைத்த பெண் இயக்குநரும், தெலுங்கு நடிகையுமான விஜய நிர்மலா உடல்நலக் குறைவால் இன்று காலமானார். அவருக்கு வயது 73.
தமிழகத்தில் கடந்த 1946-ம் ஆண்டு, பிப்ரவரி 20-ம் தேதி பிறந்தவர் விஜய நிர்மலா. தனது 7 வயதில் திரைத்துரையில் அடியெடுத்துவைத்த விஜய் நிர்மலா தமிழ், தெலுங்கு மற்றும் மலையாளம் ஆகிய 3 மொழிகளில் 200-க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார்.
தெலுங்கு, தமிழ் உள்ளிட்ட மொழிகளில் 44 திரைப்படங்களை விஜய் நிர்மலா இயக்கியுள்ளார். ஒரு பெண் இயக்குநர் அதிகபட்சமாக 44 திரைப்படங்களை இயக்கி விஜய நிர்மலா கின்னஸ் சாதனை படைத்தார்.
தெலங்கு நடிகர் கிருஷ்ணாவை திருமணம் செய்த விஜய நிர்மலா, தெலுங்கு திரைப்படத்தின் நட்சத்திர நடிகர் மகேஷ் பாபுவின் சிற்றன்னையாவார்.
கடந்த சில மாதங்களாக உடல்நலக் குறைவால் விஜய் நிர்மலா அவதிப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். திடீரென உடல்நிலை மோசமானததால், சிகிச்சைக்காக ஹைதராபாத் நகரில் கச்சிபோலி பகுதியில் உள்ள கான்டினென்டல் மருத்துமனையில் நேற்று அனுமதிக்கப்பட்டார். ஆனால், அங்கு சிகிச்சை பலன் அளிக்காமல் விஜய நிர்மலா உயிரிழந்தார்.
நடிகை விஜய நிர்மலா மறைவுக்கு தெலங்கானா முதல்வர் சந்திரசேகர் ராவ் வெளியிட்ட இரங்கல் செய்தியில், ''விஜய நிர்மலாவை இழந்து தவிக்கும் அவரின் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கல், வருத்தங்கங்கள்'' என்று தெரிவித்துள்ளார்.
தெலங்கானா பாஜக தலைவர் கே. லட்சுமணன், விடுத்த இரங்கில் செய்தியில், "இயக்குநரும், பழம்பெரும் நடிகை விஜய நிர்மலா மரணமடைந்த செய்தி கேட்டு ஆழ்ந்த வேதனை அடைந்தோம். தெலுங்கு திரையுலகத்துக்கு மிகப்பெரிய இழப்பு. விஜய நிர்மலாவை இழந்து வாடும் அவரின் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கல்'' என்று தெரிவித்துள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT