Published : 21 May 2019 04:38 PM
Last Updated : 21 May 2019 04:38 PM
பைக் பந்தயத்தில் சர்வதேச அளவில் முதன்முதலாக வெற்றிபெற்ற இந்தியரான ரஜினி கிருஷ்ணனிடம் பயிற்சி பெற்றுள்ளார் விஜய் தேவரகொண்டா.
விஜய் தேவரகொண்டா நடிப்பில் ரிலீஸுக்குத் தயாராகிவரும் படம் ‘டியர் காம்ரேட்’. பரத் கம்மா இயக்கியுள்ள இந்தப் படத்தில், ராஷ்மிகா மண்டன்னா ஹீரோயினாக நடித்துள்ளார். வருகிற ஜூலை 26-ம் தேதி படம் ரிலீஸாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. தெலுங்கு மட்டுமின்றி, தென்னிந்திய மொழிகள் நான்கிலும் இந்தப் படம் ரிலீஸாக இருக்கிறது.
‘டியர் காம்ரேட்’ படத்தைத் தொடர்ந்து ‘ஹீரோ’ படத்தில் நடிக்கிறார் விஜய் தேவரகொண்டா. ‘காக்கா முட்டை’ படத்துக்கு வசனம் எழுதிய ஆனந்த் அண்ணாமலை இந்தப் படத்தை இயக்குகிறார். தெலுங்கு மற்றும் தமிழில் உருவாகும் இந்தப் படத்தில், மாளவிகா மோகனன் ஹீரோயினாக நடிக்கிறார். இவர், ‘பேட்ட’ படத்தில் சசிகுமாருக்கு ஜோடியாக நடித்தவர்.
இந்தப் படத்தின் படப்பிடிப்பு, கடந்த ஞாயிற்றுக்கிழமை (மே 19) ஹைதராபாத்தில் தொடங்கியது. மியூஸிக்கல் த்ரில்லரான இந்தப் படம், விளையாட்டை அடிப்படையாகக் கொண்டு எடுக்கப்படுகிறது.
அதாவது, இந்தப் படத்தில் பைக் ரேஸராக நடிக்கிறார் விஜய் தேவரகொண்டா. இதற்காக, சென்னையைச் சேர்ந்த ரஜினி கிருஷ்ணனிடம் முறையாகப் பயிற்சியும் பெற்றுள்ளார். ரஜினி கிருஷ்ணன், கத்தாரில் நடைபெற்ற சர்வதேச அளவிலான பைக் பந்தயத்தில் வெற்றிபெற்ற முதல் இந்திய வீரர் என்ற பெருமைக்குரியவர்.
பி.எஸ்.மித்ரன் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடித்துவரும் படத்துக்கும் ‘ஹீரோ’ எனத் தலைப்பு வைக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT