Published : 17 Nov 2025 11:27 AM
Last Updated : 17 Nov 2025 11:27 AM
ராஜமவுலி இயக்கத்தில் மகேஷ்பாபு ஹீரோவாக நடிக்கும் படத்துக்கு ‘வாரணாசி’ என்று தலைப்பு வைக்கப்பட்டுள்ளது.
‘ஆர்ஆர்ஆர்’ வெற்றிக்குப் பிறகு மகேஷ்பாபு நடிக்கும் படத்தை இயக்கி வருகிறார், ராஜமவுலி. மகேஷ் பாபுவின் கேரக்டரை ஹனுமனை நினைவூட்டும் வகையில் வடிவமைத்துள்ளதாக ராஜமவுலியின் தந்தை விஜயேந்திர பிரசாத் கூறியிருந்தார். இதற்கிடையே பிரியங்கா சோப்ரா மந்தாகினி என்ற கதாபாத்திரத்திலும் பிருத்வி ராஜ், கும்பா என்ற கதாபாத்திரத்திலும் நடிக்கின்றனர்.
அவர்களின் முதல் தோற்ற போஸ்டர் வெளியிடப்பட்ட நிலையில் படத்தில் டைட்டில் டீஸர், ஹைதராபாத்தில் நடந்த ‘குளோப் ட்ராட்டர்’ நிகழ்வில் நேற்று முன்தினம் வெளியிடப்பட்டது. இப்படத்துக்கு ‘வாரணாசி’ என்று தலைப்பு வைத்துள்ளனர்.
இதில் மகேஷ்பாபு, ருத்ரா என்ற கதாபாத்திரத்தில் நடிக்கிறார். பிரம்மாண்டமான விஎஃப்எக்ஸ் காட்சிகளுடன் உருவாக்கப்பட்டுள்ள இந்த டீஸர் இணையத்தில் வரவேற்பைப் பெற்றுள்ளது. இதன் கதை ராமாயணக் காலத்தில் தொடங்கி இன்றைய நவீன காலத்துடன் இணைத்து உருவாக்கப்பட்டுள்ளதால் படத்துக்கு அதிக எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.
இதற்கிடையே ‘குளோப் ட்ராட்டர்’ நிகழ்ச்சியில் பேசிய ராஜமவுலியின் தந்தையும், திரைக்கதை ஆசிரியருமான விஜயேந்திர பிரசாத், “இந்தப் படம் ஒரு தெய்வீக முடிவு, ராஜமவுலியின் இதயத்தில் இருந்து ஹனுமன் இப்படத்தை இயக்குவதற்கு வழி நடத்துகிறார், இந்தப் படம் ஹனுமன் மூலம்தான் வந்தது என்று கூறினார். பின்னர் டைட்டில் டீஸர் வெளியீட்டின் போது ஏற்பட்டத் தொழில்நுட்ப கோளாறு காரணமாக நிகழ்ச்சி அரை மணி நேரம் நிறுத்தப்பட்டது.
அடுத்து பேசிய ராஜமவுலி, “எனக்கு கடவுள் நம்பிக்கை இல்லை. என் தந்தை, ஹனுமன் என் பின்னால் இருப்பார் என்றும் என்னை கவனித்துக் கொள்வார் என்றும் சொன்னார். அவர் இப்படித்தான் கவனித்துக் கொள்கிறாரா? என் மனைவி ரமாவுக்கும் ஹனுமன் மீது பக்தி உண்டு. அவர் மீதும் எனக்கு இப்போது கோபம் வந்தது” என்றார். அவருடைய இந்தப் பேச்சு இணையத்தில் சர்ச்சையை ஏற்படுத்தி இருக்கிறது.
நிகழ்ச்சியில் ஏற்பட்ட தொழில்நுட்பக் கோளாறுக்கு ஹனுமனைக் குறை சொல்வதா? என்றும் ராமாயணத்தின் அடிப்படையில் ‘வாரணாசி’ என்ற தலைப்பில் படத்தை எடுத்துவிட்டு இப்படிச் சொல்லலாமா? என்றும் கேட்டு வருகின்றனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT