Published : 10 Nov 2025 12:41 PM
Last Updated : 10 Nov 2025 12:41 PM
நடிகை அனுபமா பரமேஸ்வரன், தனது மார்பிங் புகைப்படங்களைப் போலி சமூக வலைதள கணக்கு மூலம் பரப்பி வந்தது தமிழ்நாட்டைச் சேர்ந்த 20 வயது பெண் என்று தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில் அவர் கூறியிருப்பதாவது: சில நாட்களுக்கு முன்பு என் பெயரில் போலியான இன்ஸ்டாகிராம் பக்கம் உருவாக்கி, அதில் என்னைப் பற்றியும், என் குடும்பம் , நண்பர்கள், சக நடிகர்கள் குறித்து தவறான தகவல்களைப் பரப்பி வருவதை அறிந்தேன். அடிப்படை ஆதாரமற்றத் தகவல்கள், மார்பிங் செய்யப்பட்ட புகைப்படங்கள் உள்ளிட்டவற்றைப் பதிவிட்டிருந்தனர். என்னைக் குறிவைத்துத் துன்புறுத்துவதை அறிந்து வேதனை அடைந்தேன்.
இது தொடர்பாகக் கேரள சைபர் கிரைமில் புகார் செய்தேன். அவர்கள் இந்த போலி சமூக வலைதள கணக்குகளுக்குப் பின்னால் இருப்பவர்களைக் கண்டு பிடித்துள்ளனர். அந்த நபர் யார் என்பது தெரிய வந்துள்ளது. இதைச் செய்தது தமிழ்நாட்டைச் சேர்ந்த 20 வயது இளம் பெண் என்ற தகவல் அதிர்ச்சியாக உள்ளது. அவருடைய வயது மற்றும் எதிர்காலம் கருதிக் கொண்டு, அவர் பெயர் அடையாளங்களை வெளியிட வேண்டாம் என்று முடிவு செய்துள்ளேன்.
ஸ்மார்ட்போன் வைத்திருப்பதாலோ, சமூக வலை தளங்களைப் பயன்படுத்துவதாலோ அடுத்தவர்களை அவமதிப்பதற்கோ, வெறுப்பைப் பரப்புவதற்கோ உங்களுக்கு முழு உரிமை வழங்கப்பட்டுள்ளதாக அர்த்தமில்லை. ஆன்லைனில் நீங்கள் செய்யும் ஒவ்வொரு செயலும் பதிவாகிறது. இது தொடர்பான சட்ட நடவடிக்கையை மேற்கொள்ள இருக்கிறோம். இதைச் செய்தவர்கள் அதற்கான வினைகளை எதிர்கொள்ள வேண்டும். சைபர் குற்றம் என்பது தண்டனைக்குரிய செயல். இவ்வாறு அனுபமா பரமேஸ்வரன் பதிவிட்டுள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT