Published : 02 Nov 2025 01:48 PM
Last Updated : 02 Nov 2025 01:48 PM
‘காந்தாரா’, ‘காந்தாரா: சாப்டர் 1’ படங்களை இயக்கி, நாயகனாக நடித்தவர் ரிஷப் ஷெட்டி. கன்னடத்தில் உருவான இப்படங்கள் மற்ற மொழிகளிலும் வரவேற்பைப் பெற்றதால், இந்தியா முழுவதும் பிரபலமானார்.
‘காந்தாரா: சாப்டர் 1’ படத்தில் ருக்மணி வசந்த் நாயகியாக நடித்துள்ளார். அடுத்து ஜெய் ஹனுமான் என்ற படத்தில் ஹனுமானாக நடிக்க இருக்கிறார் ரிஷப் ஷெட்டி. இதற்கிடையே ‘காந்தாரா’ படத்தை வெறும் பணத்துக்காக மட்டும் உருவாக்கவில்லை என்று தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் கூறும்போது, “இதுபோன்ற கதையை வெறும் பணத்துக்காக மட்டும் செய்துவிட முடியாது. நான் வேறு கதைகளைத் தேர்வு செய்திருந்தால் ரிஸ்க் எடுப்பதைத் தவிர்த்திருப்பேன். ‘காந்தாரா’வை மொழி மற்றும் கலாச்சார வேறுபாடுகளைக் கடந்து பார்வையாளர்கள் அதிகம் பேசியபோது, இந்தக் கதையை நியாயத்துடன் முடிக்க வேண்டும் என்று நினைத்தேன்.
‘காந்தாரா’வின் முன் கதையைச் சொல்வதன் மூலம் அந்தப் படத்துக்கு நியாயம் செய்ய முடியும் என்று நம்பினேன். பின்னர் தெய்வீக தலையீட்டால் ‘காந்தாரா: சாப்டர் 1’ படத்தை இயக்கினேன்.
உண்மையைச் சொன்னால், ‘காந்தாரா: சாப்டர் 1’ படத்தை முடிக்கும் வரை வேறு பணிகளில் கவனம் செலுத்த வேண்டாம் என்று நினைத்தேன். அப்போது ‘ஜெய் ஹனுமான்’ வாய்ப்பு வந்ததால் ஏற்றுக் கொண்டேன்.
அந்தக் கதை என்னை விரட்டிக் கொண்டு வந்தது. மறுக்க முடியவில்லை. புராணங்கள், வரலாற்றுப் பின்னணி கதைகள் மீது எனக்கு ஆர்வம் இருப்பதால் ஒப்புக் கொண்டேன். ஒரு நடிகராகவோ அல்லது இயக்குநராகவோ ஒரே பாணியில் ஒட்டிக்கொண்டிருக்க முடியாது. மாறுபட்ட கதாபாத்திரங்களில் நடிக்க வேண்டும் என நினைக்கிறேன்” என்றார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT