Published : 29 Oct 2025 06:44 AM
Last Updated : 29 Oct 2025 06:44 AM
மலையாள இயக்குநர் ரஞ்சித் மீதான மேற்கு வங்க நடிகையின் பாலியல் புகார் வழக்கை, கேரள உயர்நீதிமன்றம் ரத்து செய்துள்ளது.
மலையாள சினிமாவில் நடிகைகள் மற்றும் பெண் கலைஞர்களுக்கு எதிரான பாலியல் துன்புறுத்தல்கள் குறித்து விசாரிக்க, ஓய்வு பெற்ற நீதிபதி ஹேமா தலைமையில் கமிட்டி அமைக்கப்பட்டது. இந்த கமிட்டி 60-க்கும் மேற்பட்ட நடிகைகள், பெண் கலைஞர்களிடம் விசாரணை நடத்தி அறிக்கை ஒன்றைத் தயாரித்தது. அது வெளியான பின் பல நடிகைகள், தங்களுக்கும் பல்வேறு பாலியல் துன்புறுத்தல்கள் நடந்ததாகக் கூறி வந்தனர்.
மேற்குவங்க மொழி நடிகை லேகா மித்ராவும் பிரபல மலையாள இயக்குநர் ரஞ்சித் மீது பாலியல் புகார் கூறினார். 'பலேரி மாணிக்யம்' என்ற படத்துக்கான ஆடிஷனுக்கு கொச்சியில் உள்ள பிளாட்டுக்கு அழைத்திருந்தனர். அப்போது, இயக்குநர் ரஞ்சித் திடீரென தன் தோளைத் தொட்டதாகவும் கழுத்தில் கை வைத்தார் என்றும் புகார் கூறியிருந்தார். "அவர் என் தோளைத் தொட்டதும் திகைத்துப் போனேன். அவரிடமிருந்து இப்படிப்பட்ட நடத்தையை எதிர்பார்க்கவில்லை" என்றார்.
நடிகையின் புகாரின் அடிப்படையில், இயக்குநர் ரஞ்சித் மீது கொச்சி போலீஸார் வழக்குப் பதிவு செய்தனர். இவ்வழக்கு கேரள உயர் நீதிமன்றத்தில் நடந்து வந்தது. இந்நிலையில் இந்த வழக்கை நீதிபதி சி.பிரதீப் குமார் அமர்வு நேற்று முன் தினம் ரத்து செய்தது. 2009-ம் ஆண்டு நடந்ததாகக் கூறப்படும் இந்த சம்பவத்தில் 15 ஆண்டுகளுக்குப் பிறகு வழக்குப் பதிவு செய்யப்பட்டதன் அடிப்படையில் இந்த வழக்கு ரத்து செய்யப்பட்டது. அதிகபட்சம் 2ஆண்டுகள் மட்டுமே சிறைத்தண்டனை விதிக்கப்படும் வழக்குகளில், சம்பவம் நடந்த 3 ஆண்டுகளுக்குள் புகார் அளிக்கப்பட வேண்டும் என்றும் நீதிமன்றம் சுட்டிக்காட்டியது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT