Published : 27 Oct 2025 11:23 AM
Last Updated : 27 Oct 2025 11:23 AM
‘சீதா ராமம்’ இயக்குநர் ஹனு ராகவபுடி இயக்கத்தில் பிரபாஸ் ஹீரோவாக நடிக்கும் படம் ‘ஃபவுஸி’. இந்த பான்-இந்தியா படத்தின் டைட்டில் லுக் சமீபத்தில் வெளியானது.
அதில் சமஸ்கிருத ஸ்லோகங்கள் இடம்பெற்றுள்ளன. இது சமூக வலைதளங்களில் பரபரப்பாக விவாதிக்கப்பட்டது. இந்நிலையில் இயக்குநர் ஹனு ராகவபுடி இதுகுறித்து விளக்கம் அளித்துள்ளார்.
அவர் கூறும்போது, “நாங்கள் திட்டமிட்டு தான் சமஸ்கிருத ஸ்லோகங்களை பயன்படுத்தினோம். போர்வீரனைப் பற்றிய இந்தக் கதைக்கு அது ஆழமான பொருள் தருவதால் பயன்படுத்தியுள்ளோம். மற்றபடி இது புராணக் கதையை அடிப்படையாகக் கொண்டதல்ல. பகவத்கீதையிலிருந்து நாங்கள் எடுத்துக் கொண்டது வெறும் தத்துவ ரீதியான ஊக்கம் மட்டுமே.
‘ஃபவுசி’ என்பது மனித உணர்வுகள், தேசப்பற்று மற்றும் பிரிட்டிஷ் ஆட்சிக் காலத்தில் இருந்த சமூக-அரசியல் பதற்றங்களை மையமாகக் கொண்ட அழுத்தமான அதிரடி டிராமா. இன்றும் உலகளவில் அதேபோல் எதிரொலிக்கும் உண்மைகளை இப்படம் பேசும். படத்தில் பிரபாஸ் ஒரு பெரிய வீரராக நடிக்கிறார்.
‘கர்ணன் பாண்டவர்களுடன் சேர்ந்து இருந்தால் மகாபாரதப் போர் எப்படி மாறியிருக்கும்?’ என்ற சிந்தனை தான் இந்தக் கதையின் மையக் கரு. பிரிட்டிஷ் கால பின்னணியில் நடக்கும் இந்தக் கதையில் பிரபாஸ் பல பரிமாணங்களுடன் அசத்தலான நடிப்பை வெளிப்படுத்தி வருகிறார். அவருடன் மீண்டும் இணைந்து பணியாற்ற ஆவலாக இருக்கிறேன்” என்றார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT