Published : 16 Oct 2025 06:08 AM
Last Updated : 16 Oct 2025 06:08 AM

பழம்பெரும் பாடகியும் நடிகையுமான ஆர்.பாலசரஸ்வதி தேவி காலமானார்

பழம்பெரும் நடிகையும் பாடகியுமான ஆர்.பாலசரஸ்வதி தேவி (97) காலமானார். திருப்பதி அருகிலுள்ள வெங்கடகிரியில் பிறந்த பாலசரஸ்வதி தேவி, சி.புல்லையா இயக்கிய சதி அனசுயா (1936) என்ற தெலுங்கு படத்தில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானார். அவர் திறமையை கண்ட இயக்குநர் கே.சுப்பிரமணியம் தமிழுக்கு அழைத்து வந்தார். பக்த குசேலா, பாலயோகி, திருநீலகண்டர், துக்காராம், பில்ஹனா உள்பட சில படங்களில் நடித்தார். சிறந்த குரல் வளம் கொண்ட அவர், தெலுங்கு சினிமாவின் முதல் பின்னணி பாடகி என்பது குறிப்பிடத்தக்கது.

அக்காலகட்ட இசை அமைப்பாளர்கள் ஜி.ராமநாதன், கே.வி.மகாதேவன், சி.ஆர்.சுப்பாராமன், எஸ்.வி.வெங்கட்ராமன், ஹனுமந்த ராவ், கண்டசாலா உள்பட பலர் இசையில் பாடியுள்ளார். தமிழில் ‘மங்கையர் திலகம்’ படத்தில் இடம்பெறும் ‘நீலவண்ணக் கண்ணா வாடா’, எம்.ஜி.ஆரின் ‘ராஜராஜன்’ படத்தில் ‘கலையாத ஆசை கனவே’, ‘மகாதேவி’யில் வரும் ‘சிங்காரப் புன்னகை கண்ணாரக் கண்டாலே’, சிவாஜியின் ‘உத்தம புத்திரன்’ படத்தில், ‘முத்தே பவளமே’ என்பது உள்பட தமிழ், தெலுங்கு உள்ளிட்ட மொழிகளில் ஆயிரத்துக்கும் அதிகமான பாடல்களைப் பாடியுள்ளார்.

இவர் அரச குடும்பத்தைச் சேர்ந்த கொலங்கா மகாராஜாவைத் திருமணம் செய்துகொண்டார். இவர்களுக்கு ஒரு மகன் உண்டு. குடும்பத்துடன் செகந்தராபாத்தில் வசித்து வந்த அவர், வயது மூப்பு காரணமாகக் காலமானார். அவர் மறைவை குடும்பத்தினர் உறுதிப்படுத்தியுள்ளார். ஆர்.பாலசரஸ்வதி தேவி மறைவுக்கு திரையுலகினர் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x