Last Updated : 14 Oct, 2025 08:38 PM

 

Published : 14 Oct 2025 08:38 PM
Last Updated : 14 Oct 2025 08:38 PM

தெலுங்கு நாயகர்களும் தமிழக திரைகளும்: கிரண் அப்பாவரம் ஆதங்கம்

தமிழகத்தில் தெலுங்கு நாயகர்களுக்கு போதிய திரையரங்குகள் கிடைப்பதில்லை என்று கிரண் அப்பாவரம் தெரிவித்துள்ளார். தெலுங்கில் முன்னணி நாயகர்களுக்கு அடுத்த வரிசையில் இருப்பவர் கிரண் அப்பாவரம். இவருடைய நடிப்பில் சில படங்கள் வரவேற்பைப் பெற்றிருக்கிறது. தீபாவளிக்கு இவருடைய நடிப்பில் ‘கேரேம்ப்’ வெளியாகவுள்ளது. இது தொடர்பாக அளித்த பேட்டியில், தமிழகத்தில் திரையரங்குகள் கிடைப்பதில்லை என்று தனது ஆதங்கத்தை வெளிப்படுத்தி இருக்கிறார்.

இது தொடர்பாக கிரண் அப்பாவரம் அளித்த பேட்டியில், “தெலுங்கு மக்கள் பிற மொழி படங்களை ஊக்குவிக்கிறார்கள். சமீபத்தில் கூட ‘லோகா’ படம் பார்க்க திரையரங்குக்கு சென்றிருந்தேன். முதல் வாரத்தில் இங்கு அரங்கு நிறைந்த காட்சிகளாக ஓடிக் கொண்டிருந்தது. 2-வது வாரத்திலும் அரங்கு நிறைந்த காட்சிகள் தான். தெலுங்கு திரையுலகினரும் நல்ல படங்களை உருவாக்குகிறார்கள். ஆனால், இதர மாநிலங்களில் இங்குள்ள வரவேற்பு போல கிடைப்பதில்லை.

ஏன் இதெல்லாம் பேசுகிறீர்கள்? நல்ல படங்களை எடுத்தால் மக்கள் கண்டிப்பாக பார்ப்பார்கள் என்பார்கள். தெலுங்கில் வளர்ந்து வரும் நாயகர்கள் கூட நல்ல படங்களை உருவாக்குகிறார்கள். உடனே, எனக்கும் தமிழுக்கும் சம்பந்தமில்லை எனலாம். இங்கு முக்கியமான 10 தமிழ் நாயகர்களுக்கு நல்ல வியாபாரம் இருக்கிறது. அதேபோல தெலுங்கு நாயகர்களுக்கு தமிழுக்கு நல்ல வியாபாரம் இருக்கிறதா என்றால், இல்லை. ஏன் இல்லை என்று தெரியவில்லை.

பிரதீப் ரங்கநாதன் நடித்துள்ள ‘டியூட்’ படத்துக்கு தெலுங்கில் நல்ல திரையரங்குகள் கிடைக்கிறது. அதேபோல் தமிழில் எனது ‘கேரேம்ப்’ படத்துக்கு கிடைக்குமா என்றால் இல்லை. ஏன் தமிழகத்தில் திரையரங்குகள் கிடைப்பதில்லை என தெரியவில்லை. தெலுங்கு மக்கள் போல அனைத்து தரப்பு படங்களையும் வரவேற்க வேண்டும். இங்குள்ள அன்பை போல அனைத்து மாநிலங்களிலும் அன்பு கிடைக்க வேண்டும்.

தமிழ் மக்களிடமும் இருந்து அன்பு கிடைத்துவிட்டால், அவர்கள் பெரிய இடத்துக்கு அழைத்து சென்றுவிடுவார்கள். அந்தளவுக்கு அன்பை பொழிவார்கள் என்பதில் சந்தேகமில்லை” என்று தெரிவித்துள்ளார் கிரண் அப்பாவரம்

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x