Published : 06 Oct 2025 02:00 PM
Last Updated : 06 Oct 2025 02:00 PM
‘காந்தாரா: சாப்டர் 1’ படத்துக்காக பட்ட கஷ்டங்கள் குறித்து சம்பத் ராம் விளக்கமளித்துள்ளார்.
உலகமெங்கும் ‘காந்தாரா: சாப்டர் 1’ படத்துக்கு பெரும் வரவேற்பு கிடைத்திருக்கிறது. ரிஷப் ஷெட்டி இயக்கி, நடித்துள்ள இப்படத்தில் ருக்மணி வசந்த், ஜெயராம் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இப்படத்தில் தெய்வீக சக்தியை அபகரிக்க நினைக்கும் கூட்டத்தின் தலைவனாக சம்பத் ராம் நடித்துள்ளார். முழுக்க கறுப்பு மை கொண்ட மேக்கப் போட்டிருந்ததால் இதனை அடையாளம் காண முடியவில்லை.
இந்த மேக்கப் மற்றும் ‘காந்தாரா: சாப்டர் 1’ குறித்து சம்பத் ராம், “’காந்தாரா சாப்டர்-1’ படத்தில் நானும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறேன் என்பதில் ரொம்ப சந்தோஷப்படுறேன். இந்த படத்தில் மலைவாழ் மக்கள் தலைவனாக குறைந்த காட்சிகள் வந்தாலும், நிறைவான கேரக்டரில் நடித்திருக்கிறேன் என்பதில் சந்தோஷமும் பெருமையும் அடைகிறேன்.
வித்தியாசமான தோற்றத்தில் 'காந்தாரா: சாப்டர்-1' படத்தில் நடித்துள்ளேன். முகம் மற்றும் உடல் முழுவதும் கருப்பு கலர் மேக்கப்பில், குறிப்பாக முகத்தில் முதிர்ந்த முதுமையில் மேக்கப் போட்டு இருப்பேன். மேக்கப் போடுவதற்கு ஒன்றரை மணி நேரம் ஆகும். கலைப்பதற்கு ஒரு மணி நேரமாகும். மொத்தத்தில் இரண்டரை மணி நேரம் மேக்கப்பிற்காக ஒதுக்க வேண்டும்.
மிகவும் சிரமப்பட்டு இந்த படத்தில் நடித்துள்ளேன். இந்த வாய்ப்பை எனக்கு கொடுத்த இயக்குனர் ரிஷப் ஷெட்டி அவர்களுக்கு மிக்க நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.
இவ்வளவு பெரிய பான் இந்தியா படத்தில் நானும் நடித்திருக்கிறேன் என்பதில் பெருமை கொள்கிறேன். கன்னடத்தில் 'சயனைடு' என்ற படத்தில் முதன்முதலில் நடித்திருந்தேன். ஏ.எம்.ஆர்.ரமேஷ் இயக்கி இருந்தார். அடுத்து அவர் இயக்கிய 'வீரப்பன் அட்டஹாச' படத்தில் நான் நடிக்கும் போது, அந்தப் படத்தில் ரிஷப் ஷெட்டி கடைசி உதவி இயக்குநராக பணியாற்றினார். அப்பொழுது இருந்து அவருக்கும் எனக்குமான பழக்கம் தொடங்கியது.
சென்னை வந்த போது எங்கள் வீட்டுக்கும் வந்துள்ளார். பிறகு அவர் இயக்கிய 'காந்தாரா' படம் வந்த போது, அவரை பாராட்டி போன் செய்தேன். 'காந்தாரா சாப்டர் -1' பர்ஸ்ட் லுக் போஸ்டரை பார்த்துவிட்டு, ஒரு வருடத்திற்கு முன்பு அவருக்கு போன் செய்து இந்த படத்தில் நான் நடித்தால் சந்தோஷப்படுவேன் என்று சொன்னேன். உடனே அழைத்து எனக்கு வாய்ப்பு கொடுத்தார் இயக்குனர் ரிஷப் ஷெட்டி. எப்பவுமே என்னை மாஸ்டர் என்றுதான் அழைப்பார். சயனைடு படத்தில் என்னுடைய கேரக்டர் பெயர் சுரேஷ் மாஸ்டர்.
என்னை அழைத்து இந்த படத்தின் கெட்டப்பை ஒன்றரை மணி நேரம் மேக்கப் செய்து பார்த்து ஒப்பந்தம் செய்தார். கிட்டத்தட்ட இந்த படத்திற்காக ஒரு வருடம் பயணித்துள்ளேன். 26 நாட்கள் நடித்துள்ளேன். ஒவ்வொரு மாதமும் மூன்று நாட்கள் நடித்துள்ளேன். படப்பிடிப்பில் தினமும் குறைந்தது 500 பேரில் இருந்து, 2000 பேர் வரை பணியாற்றுவார்கள். பெரும் கூட்டத்தோடு, பெரும் பொருட்செலவில், பெரும் உழைப்பில் இயக்குநர் உட்பட அனைவருமே பெரும் சிரமப்பட்டு பணியாற்றிய படம் 'காந்தாரா சாப்டர்-1'
இந்தப் படம் தற்போது வெளியாகி, ரசிகர்களிடையே மிகுந்த வரவேற்பை பெற்று, நன்றாக ஓடிக் கொண்டிருப்பதை நினைத்து, அதில் நானும் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளதை எண்ணி மிகவும் சந்தோஷப்படுகிறேன். மீண்டும் ஒரு முறை இயக்குனர் ரிஷப் ஷெட்டி அவர்களுக்கு நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்” என்று தெரிவித்துள்ளார் சம்பத் ராம்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT