Published : 24 Sep 2025 07:26 AM
Last Updated : 24 Sep 2025 07:26 AM
கொச்சி: சொகுசு கார் வரி ஏய்ப்பு தொடர்பாக கேரளாவில் நடிகர்கள் துல்கர் சல்மான், பிருத்விராஜ் உள்ளிட்ட பலரது வீடுகள் மற்றும் ஷோரூம்களில் வருவாய் புலனாய்வு மற்றும் சுங்கத் துறை அதிகாரிகள் நேற்று சோதனை நடத்தினர்.
சொகுசு கார் வரி ஏய்ப்பு புகார் தொடர்பாக வருவாய் புலனாய்வு மற்றும் சுங்கத் துறை அதிகாரிகள் ‘நும்கோர்' என்ற குறியீட்டுப் பெயரில் நாடு தழுவிய நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர். இதில் கேரளா முக்கிய கவனம் பெற்றுள்ள நிலையில் இம்மாநிலத்தில் திருவனந்தபுரம், எர்ணாகுளம், கோட்டயம், கோழிக்கோடு, மலப்புரம் ஆகிய மாவட்டங்களில் 30 இடங்களில் அதிகாரிகள் நேற்று சோதனை நடத்தினர்.
நடிகர்கள் துல்கர் சல்மான், பிருத்விராஜ் சுகுமாரன் மற்றும் தொழிலதிபர்களின் வீடுகள் மற்றும் முக்கிய கார் ஷோரூம்களிலும் இந்த சோதனை நடைபெற்றது. இந்த சோதனையில் நடிகர்களின் வீடுகளில் சந்தேகத்திற்குரிய கார்கள் எதையும் அதிகாரிகளால் கண்டுபிடிக்க முடியவில்லை.
இதுகுறித்து அதிகாரிகள் கூறுகையில், "நூற்றுக்கும் மேற்பட்ட 8 வகையான உயர்ரக கார்களை பூடான் வழியாக இந்தியாவுக்கு சட்டவிரோதமாக இறக்குமதி செய்து வரி ஏய்ப்பு செய்யப்பட்டுள்ளதாக விசாரணையில் தெரியவந்துள்ளது. வாகனங்களை முதலில் இமாச்சல பிரதேசத்தில் பதிவு செய்வது, பிறகு அவற்றை பிற மாநிலங்களுக்கு கொண்டு சென்று பதிவு எண்களை மாற்றுவது என வரிஏய்ப்பு செய்யப்பட்டுள்ளது.
நடிகர்களின் வீடுகளில் சோதனை நடத்தியதால் இது ஊடக கவனம் பெற்றுள்ளது. என்றாலும் வரி ஏய்ப்பு செய்ததாக சந்தேகிக்கப்படும் ஷோரூம்கள் மற்றும் தனிப்பட்ட இறக்குமதியாளர்கள் ஆகிய இரு தரப்பினரையும் குறிவைத்து சோதனை நடைபெறுகிறது" என்று தெரிவித்தனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT